இலங்கைக்கான ‘ஒரு புதிய ஒழுங்கமைப்பை’ நோக்கி பேரினவாதச் சக்திகள்.
Share
வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை.
- ரணில் தலைமையில் 13 காணாமல் போகலாம்.? இல்லையேல் நீர்த்துப்போகும்.
தமிழ் மக்கள் குறித்து பிரச்சனைகள் கிளைவிட்டு பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.ஒரு பிரச்சனை நோக்கி தமிழ் மக்களின் கவனம் குவியும்போது இன்னொரு பிரச்சனை துளிர் விடுகின்றது. மொத்தத்தில் பிரச்சனைகளே வாழ்க்கையாகப் போய்விட்டது.
- இராவணனின் பூர்வீகத்தை தேடி சர்வதேச விசாரணை!
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி பெற்றோரும் உறவுகளும் வருடக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச நீதியை நோக்கிய இந்தப் பயணத்திற்கு இலங்கை அரசிடம் இருந்தோ அல்லது சர்வதேச சமூகத்திடம் இருந்தோ காத்திரமான பதில் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை எனக் கூறும் இலங்கை அரசு உள்ளக விசாரணையையும் இருட்டுக்குள் வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழர் விவகாரத்தில் சர்வதேச விசாரணையை மறுதளித்து நிற்கும் இலங்கையில் இராவணனின் பூர்வீகத்தை தேடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை விடுக்கப்படுவது விசித்திரமாக உள்ளது. உள் நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்கள மக்களுக்கு ஒரு நீதியென ஆட்சி நடக்கும் இலங்கையில் அதே நீதியை சர்வதேச சமூகத்திடமும் தென்னிலங்கை கோரி நிற்கின்றது. அதாவது சர்வதேச சமூகம் தென்னிலங்கை வகுத்துள்ள நீதிக்குள் நின்று தமக்கு நீதி வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது.
- இனக் கலவரத்துக்கான காய் நகர்த்தல்
அதேவேளயில் நாட்டில் இன்னொரு இனக் கலவரத்தை உருவாக்குவதற்கான காய்கள் வேகமாக நகர்த்தப்படுகின்றன. பௌத்த பிக்குகளில் ஒரு பகுதியினரும் பேரினவாதச் சக்திகளும் நடந்து கொள்ளும்விதம் அவர்களது அடாவடித்தனங்கள் வரம்பு மீறிய செயற்பாடுகள் மாத்திரமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாம் சளைத்தவர்கள் அல்ல என களத்தில் சண்டித்தனம் காட்டுகின்றனர்.
இவைகளை ‘இலங்கை அரசாங்கம்‘ கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
‘2022 ஆம் ஆண்டில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்று அன்று பிபிசி அறிக்கை ஒன்று இன்றைய அரசாங்கம் குறித்து 2022 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி பிபிசி இவ்வாறு தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு அரசாங்கத்திற்கு நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் யோசிப்பதற்கு நேரம் இருக்காது.தமது ‘அரசியல் இருப்பு‘ குறித்த கவலையே ரணில் – ராஜபக்ஷ அணியினருக்கு உள்ளதெனலாம்.
- ரணில் விகரமசிங்க அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர் அல்ல
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொருத்து 13ஐ நிறைவேற்றுவதுகுறித்து பேசுகின்றார். ஆனால் 13ஐ நிறைவேற்றாமல் இருப்பதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளார்.
ஆரசியல் அமைப்பில் உள்ள 13வது சரத்தை நிறைவேற்ற கட்சிகளின் கருத்தக்களும் ஆணையும் அவசியம் இல்லை. ஆனால் 13ஐ கட்சிகளின் முன் தூக்கிப் போட்டு அறிக்கை கோருவது 13ஐ நிறைவேற்றுவதற்கல்ல. ரணில் விகரமசிங்க அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர் அல்ல.ஒன்றில் 13ஐ நீர்த்துப் போகச் செய்வது அல்லது இல்லாமல் ஆக்குவது. இதனை நோக்காகக் கொண்டதாகவே அவரது 13 அதிகாரப்பரவலாக்கல் காய் நகர்த்தல் உள்ளது.
மறுபுறம் இனப் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து ஒரு இனக் கலவரத்துக்கான காய் நகர்த்தலும் நடைபெறுகின்றது. மக்களை பிணங்களாக்கி அதன்மேல் ஏறி தேர்தல் வெற்றிகளை அடைவது என்பது இலங்கையின் ஆளும் வர்க்கத்திற்கு கை வந்த கலையாகும். ஆனால் அரகலயாக்களின் வருகையுடன் இந்த வழி முறை சாத்தியமா என்பதுகுறித்தும் ஆளும் தரப்பு சிந்திக்காமல் இருக்காது.
தற்போதைய நிலையில் தேர்தல் வெற்றியை நோக்கியதாக இந்த காய் நகர்த்தல் இடம்பெறலாம்.
இரண்டாவது சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும் பொருளாதார மீட்சிக்கான பயணத்திற்கெனவும் காலவரையின்றி தேர்தல்களை ஒத்திப்போடும் சூட்சமும் இதன் பின்னணியில் இருக்கலாம். ஏனெனில் ரணில் – ராஜபக்ஷ அணியினருக்க எந்த ஒரு தேர்தலையும் எதிர் நோக்கும் மன நிலையோ அல்லது கள நிலவரமோ இல்லை என்பது தெரிந்த விடயமே.
அந்தவகையில் 2024 தேர்தல் ஆண்டென தொடர்ச்சியாகக் கூறப்படுகின்றபோதும் தேர்தல் அற்ற ஆண்டாக தொடர்வதற்கான சாத்தியங்கள் இருப்பதையும் நிராகரிப்பதற்கில்லை.
இந்த ஒரு பின்னணியில் பேரினவாதச் சக்திகள் பௌத்த துறவிகள் சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர் கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள அரசியல்வாதிகள் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பௌத்த மயமாக்களையும் தமிழர் குடிப் பரம்பலைச் சிதைக்கும்வகையிலான குடியேற்றங்களையும் விரைவுபடுத்த களத்தில் இறங்கியுள்ளனர்.இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ரணில் – ராஜபக்ஷ அணியினரின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெறுகின்றன என்பது பரம இரகசியமல்ல.
- New Sri Lankan Order
கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்தவுடன் இலங்கைக்கான ஒரு புதிய ஒழுங்கமைப்பை New Sri Lankan Order –உருவாக்கிக் கொள்வதே இந்தச் சக்திகளின் நோக்கமும் இலக்குமாகவும் இருந்தது.
புயங்கரவாதத்துக்கெதிராக பதிய ஒழுங்கமைப்பை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ பிரகடனப்படுத்தினார். அதேபாணியில் இலங்கையின் அரச தரப்பு, சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர் மற்றும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து “இலங்கைக்கென புதிய ஒழுங்கமைப்பை “உத்தியோகப்பற்றற்ற முறையில் பிரகடனப்படுத்திச் செயற்படுத்தி வருகின்றனர்.
New Sri Lankan Order என்ற பதிய இலங்கைக்கான இந்த ஒழுங்கமைப்பை தென்னிலங்கை குறிப்பிடுகின்ற “பயங்கரவாதத்துக்கு” எதிர்வினை செயற்பாடாக செயற்படுத்த முனைகின்றது.இந்த ஒழுங்கமைப்பு ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற கருத்தியலுக்குள் வார்த்தெடுக்கப்பட்டதாகும்.
முள்ளி வாய்க்கால் போருடன் இலங்கையின் வரலாற்றை புதிதாக எழுதுவதற்கு சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினரும், இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும், சிங்களத் தலைமைகளும் புறப்பட்டுள்ளனர்.
தற்போது குருந்தூர் மலை விவகாரம் குறித்து 60 கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டள்ளது.
இவர்களைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பின் வரலாறு பெரும் மாற்றத்தக்கு உள்ளாகி உள்ளதென்ற கருத்தியலைக் கொண்டவர்களாக உள்ளனர்.
இந்தக் கருத்தியலில் இலங்கையின் இன விவகாரம் குறித்துக் கூட தென்னிலங்கையின் நிலைப்பாட்டில் சடுதியான ஒரு மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கிளிநொச்சியின் வீழ்ச்சியுடன் மேற்கூறிய மனப்போக்கு தென்னிலங்கையின் அனைத்துமட்டங்களிலும் மிக ஆழமாக எதிரொலித்தது.
இந்தச் சக்திகளைப் பொருத்தவரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகள் ,தமிழ் மக்களின் இருப்பு ,சுய கௌரவம், சுய நிர்ணய உரிமை ,தாயகக் கோட்பாடு என அனைத்துமே முள்ளிவாய்க்கால் போருடன் புதைக்கப்பட்டுவிட்டன என்பதையே பேரினவாதத் தரப்புகள் தமது நிலைப்பாடாகக் கொண்டுள்ளன.
இதனை முன்னிறுத்தியே 2009க்குப் பிறகு இலங்கை பெரும் மாற்றத்தக்கள்ளாகியதாகக் கருதுகின்றனர்.
ஆதாவது மக்வம்சத்தின் போக்கில் இலங்கையின் எதிர்கால வரலாற்றை புதிய வடிவில் எழுத, செயற்படுத்த முற்படுகின்றனர்.
இந்த நாடு பல மொழி ,பல இன ,பல கலாசார விழுமியங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு அப்பால் ஒற்றையாட்சியின் பௌத்த மேலான்மைக்குள்ளேயே இலங்கையின் ஒவ்வொரு குடிமகனதும் தலைவிதியையும் நிர்ணயிக்க இந்தச் சக்திகள் புறப்பட்டுள்ளன.
‘ஒரே நாடு ஒரே மக்கள்‘ கருத்தியலுக்குள் இவை அனைத்தும் மிகக் கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
மொத்தத்தில் இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்திற்குள் சிறுபான்மை இனங்கள் சமரசமாகி மூழ்கிப் போகும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதே ஆக New Sri Lankan Order வருகின்றது.
ஆனால் அரகலயாக்களின் எழுச்சியால் கோத்தாபய ராஜபக்ஷ அரசியலில் இருந்து வெளியேற்றப்படவே New Sri Lankan Order என்ற பதிய இலங்கைக்கான இந்த ஒழுங்கமைப்புக்கான பயணம் சற்று பின்னடைவைக் கண்டது. ஆனால் அது தற்போது மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு வேகம் பெற்றுள்ளது.
இலங்கையின் இன்றைய நிலையில் தமது கருத்தியலை செயற்படுத்துவதற்கான கால நேரம் கூடிவந்துள்ளதாக பேரினவாதச் சக்திகள் கணக்கிட்டுள்ளன.
இந்த புதிய ஒழுங்கமைப்பிற்குள் காணாமல் போகும் அபாயத்தை ஒட்டு மொத்த சிறுபான்மை இன மக்களும்; எதிர் நோக்கியுள்ளனர்.
பேரினவாதம் தமிழர் தாயகத்தை விழுங்கிவிட முனைப்புடன் செயற்படும் இவ் வேளையில் துரதிஸ்டவசமாக தமிழ் மக்களை வழி நடத்த தலைமைகள் இல்லை.. தமிழ்த் தலைமைகள் சிதறிக் கிடக்கின்றன.