‘அரகல’ போராட்டத்தை கட்டுப்படுத்திய ஜனாதிபதி ரணில் இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்குகிறார்? – சபா குகதாஸ்
Share
பு.கஜிந்தன்
இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஜனாபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க.
ஆனால் தற்போது ஒரு இனத்தை குறி வைத்து குறிப்பாக தமிழர்களை கொதிப்படைச் செய்யும் வகையில் இனவாதிகள் வெளியீடும் இனவாதக் கருத்துக்களை ஏன் கட்டுப்படுத்த வில்லை? என்ற சந்தேகம் தமிழர்களிடம் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது மாறாக மறைமுக சுதந்திரம் இனவாதிகளுக்கு ஐனாதிபதி வழங்கியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறு ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில்,
தமிழ் மக்களையும் அவர்களது தொன்மையான தொல்லியல்களையும் தமிழ் அரசியல் பிரதி நிதிகளையும் தமிழ் நீதிபதியையும் குறி வைத்து மிகப் பாரதூரமான கருந்துக்களை மேர்வின் சில்வா, சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச பொது வெளியிலும் பாராளுமன்றத்திலும் கூறிவருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு ஒப்புக்கு கூட எதிர்க்கவில்லை.
எனவே மீண்டும் தமிழர்களை அடக்கி அவர்களின் இருப்பை கபளீகரம் செய்ய முழு அரச இயந்திரமும் தயாரா? அத்துடன் இனவாதிகளின் கருத்துக்களுக்கு வெளிநாட்டுச் சக்திகளும் மறைமுக ஆதரவா? மீண்டும் ஒரு இனத்தை அழித்து தங்கள் பூகோள நலன்களை பெற முயற்சிக்கின்றார்களா? இப்படியான கேள்விகள் அச்சங்கள் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளன.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிடுவது ஒரு புறம் இருக்க பொது வெளியில் தமிழர்களின் தலையை வெட்டி களணிக்கு கொண்டு வருவேன் என கூறிய மேர்வின் சில்வாவிற்கு ஏன் ஐனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.