குறுந்தூரில் மேலும் காணிகள் விடுவிப்பு?
Share
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு குறுந்தூர், தண்ணிமுறிப்பு , நித்தகைகுளம் பகுதிக்கு நடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலக மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அவசர பயணம் ஒன்றை திங்கள்கிழமை(28) மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய இடமாகவுள்ள குறுந்தூர்மலை, தண்திமுறிப்பு, நித்தகைகுளம் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட மக்களின் நிலங்கள் விடுவிப்புத் தொடர்பில் சகல திணைக்கள அதிகாரிகளும் இணைந்து பார்வையிட்டனர்.
மாவட்டச் செயலகத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற கூட்ட அறிவித்தலின் பெயரில் இந்த கூட்டுப் பயண முயற்சி இடம்பெற்றது.
இதன்போது பொலிசார், நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோருடன் மாவட்ட அரச அதிபரான மகேஸ்வரன், மேலதிக அரச அதிபர்களான கணகேஸ்வரன், குணபாலன், பிரதேச செயலாளர், தொல்லியல், வனவளம், வன ஜீவராசிகள் மற்றும் நில அளவை திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் இணைந்து நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.
இவரகள் பார்வையிட்டதன் அடிப்படையில் உடனடியாக ஓர் விசேட அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில விடுவிக்ககூடிய நிலங்களை இனங்காணுவதே இந்த கூட்டு பயணத்தின் நோக்கமாகும்.
அதேவேளை,1933ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் 78 ஏக்கர் மட்டுமே தொல்லியல்ப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் உள்ள நிலையில் தறபோது அதனை அண்டிய பகுதியில் மேலும் 300 ஏக்கரை தொல்லியல் திணைக்களம் அபகரிப்பதே சரச்சையின் அடிங்படையாக காணப்பட்ட சூழலில், இப்பயணம் இடம்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில இப்பகுதியில் உள்ள மக்களின் நிலத்தில எவ்வளவு நிலம் விடுவிக்க முடியும் என கண்டுகொள்ளப்படவுள்ளது.
நடைபெற்ற இந்த கள ஆய்வின் போது, பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்திலேயே இந்தப்பகுதியில் குறிப்பிட்ட அளவு தொல்லியல் பிரதேசமாக குறிக்கப்பட்டுள்ளது அரச தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், 78 ஏக்கர் மட்டுமே குறிக்கப்பட்டது எப்படி 300 ஏக்கருக்கும் அதிகமாக விரிவடைந்தது என்று தமிழ் தரப்பில் வினவப்பட்டது.
இது தொடர்பிலான பதில் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ள பதிலில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அறிக்கைக்கு பிறகு மேலும் சில ஏக்கர் காணி விடுவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.