LOADING

Type to search

கனடா அரசியல்

அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…

Share

”நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா?

தமிழ்நாட்டிலிருந்து தற்போது அமெரிக்காவிற்கு தனிப்பட்ட  பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் கனடாவில் எதிர்வரும் 09-09-2023 அன்று ஒரு சொற்பொழியை ஆற்ற வருகின்றார். அன்றைய தினம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள  இந்த நிகழ்ச்சியில் ‘பராசக்தியின் செல்லப்பிள்ளை பாரதி’ என்னும் தலைப்பில்  பாடல்களைப் பாடியும் உரையாற்றியும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளார்.

29.08.23

நேரம் காலம் தெரியாமல்
நினைவும் கனவும் புரியாமல்
பாரம் சிறிதும் குறையாமல்
பரவும் ஒருவகை நிம்மதி
ஆரம் விட்டம் என்றெல்லாம்
அளவை எதுவும் இல்லாமல்
ஓரம் நின்று பார்க்குங்கால்
ஒவ்வொரு காட்சியும் சந்நிதி

லூவலாகா..

என்னையா இது? பாஸ்டன் பார்ட்டியா?

சொல்கிறேன், சொல்கிறேன்.. என்ன அவசரம்?

நான் உணவை ரசித்து உண்பேன். ஆஹா ஓஹோ என்று பாராட்டுவேன். எனக்குச் சோறு போட்டவர் எல்லோரும் என் தாய்மார்களே, அவர்கள் என்னைவிட வயதில் இளையவர்களாக இருந்தாலும் அப்படித்தான். கொஞ்சம் அளவுக்கு மீறிப் புகழ்வதாக என் குடும்பத்தார் கருதுவதுண்டு; சில நண்பர்களும், ‘என்னடா அந்தச் சாப்பாட்டைப் போய் ஆஹா ஓஹோ என்றாய்?’ என்று அங்கலாய்ப்பார்கள். என் மனப்பான்மை என்ன தெரியுமா? நான் ஒரு பிச்சைக்காரனாகத்தான் உணர்கிறேன். ஆனால் பராசக்தி என்னைச் செல்லப் பிள்ளையாகத்தான் நடத்தி வருகிறாள்.

ஏன் பிச்சைக்காரன் என்று கருதிக் கொள்கிறேன்? ஒன்று இறையடியார்களின் பணிவு. திருவாசகமோ, திருவருட்பாவோ படித்துவிட்டு, நம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்ள வாய்ப்பே இல்லையல்லவா? இரண்டாவது, உலகத்தில் நாம் காணும் வறுமை. ஒவ்வொரு முறை நான் உண்ணும்போதும், அட்டகாசமாகப் பாராட்டுவதை மட்டும்தான் பார்க்கிறார்கள். உள்ளுக்குள் நான் கூசிப் போகிறேன். அதற்குக் காரணம், வெளியே என்னால் ஒன்றும் செய்ய முடியாத வறுமை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர வளர, வறுமையும் வளர்ந்துகொண்டே வருகிறதே, இது எத்தனை பெரிய அநியாயம்! அவமானம்!

எனக்குக் கர்ம வினை, விதி எல்லாவற்றிலும் நம்பிக்கை உண்டு. ஆனால், அவற்றை என்மீதுதான் பொருத்திக் கொள்வேனே தவிர, மற்றவர்கள் அல்லல் படும்போது அவர்களை அந்த சித்தாந்தத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டேன். இப்படித்தான் என் குருநாதர் என்னைப் பழக்கினார். தட்டில் உணவை வைத்து உண்ணும்போது, சுற்றிலும் சூம்பிப் போன குழந்தைகள் கையை நீட்டிப் பரிதாபமாகக் கேட்பது போலிருக்கும். “உண்ணுங்கால் உள்ளத்தே ஊர்ப்பசியின் ஓலமெழும்.” எனவே, வெளியே தெரிவதில்லை என்றாலும், ஒவ்வொரு முறை உண்ணும்போதும், உள்ளுக்குள் குற்ற உணர்வால் ஓர் உளைச்சல் என்னைத் துளைக்கத்தான் செய்கிறது. “ஞான வைராக்ய சித்யர்த்தம், பிக்ஷாம் தேஹி ச பார்வதி,” ஞானமும், வைராக்யமும் எய்தவே உணவு தா தாயே! என்னும் பிரார்த்தனையைச் செய்யத் தவறுவதில்லை. அதேபோல, குருநாதர் சொல்லித் தந்தபடி, உண்டபின் கையைக் கழுவும்போது, ‘பசி, தாகம் என்னும் நரகங்களில் பரிதவிப்பவர்களுக்கு, நான் உண்ட நிறைவு போய்ச் சேரட்டும்,’ என்று மனத்தில் நெகிழ்ந்துதான் கழுவுவேன். சோறு போடும் எல்லோரையும் – மனைவியிலிருந்து தொடங்கி – மனமாரப் பாராட்டுவேன். நன்றி சொல்வேன். என் வாழ்க்கையே பராசக்தி போட்ட பிச்சை என்னும்போது உணவு எம்மாத்திரம்! அது கிடைக்கும் என்று நான் எப்படி அனுமானித்துக் கொள்ள முடியும்?

அப்பாதான் முதன்முதலில் உணவுக்குக் காட்ட வேண்டிய மரியாதையைக் கற்றுத் தந்தார். நான் தட்டில் மீதி வைத்ததால், என்னடா இது என்று கேட்டார். ஒண்ணுமில்லப்பா, காக்காய்க்கும், நாய்க்கும் என்றேன். ‘அடேய்! அதற்கு வைத்துவிட்டு அப்புறம் நீ தின்ன வேண்டும், உன் எச்சிலையா போடுவது?’ என்று ஒரே போடாய்ப் போட்டார். அசெளகரியமான அசடு வழிதலுக்குப் பின்னர், ‘கேளுடா! அன்னம் ந நிந்த்யாத்! தத் வ்ரதம்.’ என்றார்.

உணவை வீணாக்காதே! அதுதான் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய விரதம். ஒன்பது வயதிலிருந்து உணவு விஷயத்தில் அப்பா சொன்னபடிதான் நடந்து வருகிறேன்.

சாப்பிடும்போது நான் செய்யும் ஆனந்த ஆர்ப்பாட்டம் நண்பர்கள் நடுவே பிரபலமாகி விட்டது. எங்கள் “பாரதி யார்?” குழுவிலும் அப்படித்தான். ஒத்திகை முடிந்து உண்ணும்போது, முதல்வாய்க்கே “ஆஹா!” என்பேன். உடனே ரங்காவும், தர்மாவும், “சாப்புட்றா ரமணா1 அப்றம் பாத்துக்கலாம்!” என்று கூவுவார்கள். அது என்னுடைய வசனம்தான். என்னைச் சொல்ல விடாமல் அவர்களே நான் சொல்வது போலச் சொல்லிக் காட்டுவார்கள்!

என் மகள், அதாவது மருமகள், அதாம்ப்பா ப்ரியா, வெந்தயக் கீரைப் பருப்பும், காலிப்ளவர், உருளைக்கிழங்கு, வெங்காய வதக்கலும் போட்டு, முதல் பந்திக்கு முந்தின பந்தியிலேயே உட்கார்த்திவைத்து அன்போடு பரிமாறிய போது இவை அத்தனையும் நினைவுக்கு வந்தன.

வீட்டைச் சுத்தம் செய்யப் பணியாளர்கள் வருகிறார்கள், நாம் வெளியே போய்விட்டு வருவோம் என்றாள் ப்ரியா. எல்லோரும் மிருகக் காட்சி சாலைக்குக் கிளம்பினோம் – கொஞ்சம் பந்துக்களைப் பார்த்துவிட்டு வரலாமென்று.

ஊபர் ஓட்டுனர் ரோனி, ‘பின்’ நம்பர் கேட்டார். பின்சீட்டிலிருந்த ப்ரியாவுக்கு அப்படி ஒரு நம்பர் வந்து சேரவே இல்லை. இருவரும் முயன்று இருவரும் தோற்று, இறுதியில் ரோனி வண்டியைக் கிளப்பினார். அவருடன் பேச்சுக் கொடுத்தேன். நான் பேசப் பேச அவர் தன் மனத்தைத் திறந்தார்.

“நான் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் உகாண்டாவைச் சேர்ந்தவன். இடி அமீன் காலத்தில் இந்தியர்களை அவன் வெளியேறச் சொன்னது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்களில் பலரும் பிழைப்பு தேடி வெளி நாடுகளுக்குச் சென்றோம். அப்படித்தான் நான் அமெரிக்காவுக்கு வந்தேன்.

அப்பா கண்டிப்பாக வளர்த்தார். ஒவ்வொரு முறை விடுமுறைக்கும் வெவ்வேறு அத்தைகள் வீட்டுக்குச் செல்வோம். அவர்களும் நாங்கள் தவறு செய்தால் எங்களைத் திருத்துவார்கள். பெரியவர்களிடம் பெற்ற ஞானம் இப்போது பயன்படுகிறது. அன்றைக்கு அவர்கள் சொல்லும்போது சிரமமாகத்தான் இருந்தது, எரிச்சல் வந்தது. இன்றைக்கு அவர்களுடைய அருமையும், அவர்கள் புகட்டிய பண்புகளின் பெருமையும் புரிகிறது.

என் அப்பா சொல்வார், “Life is lived by looking forward but understood only by looking backward.” முன்னே நோக்கித்தான் வாழ்க்கை வாழப்படுகிறது. பின்னே திரும்பித்தான் வாழ்க்கை புரிந்துகொள்ளப் படுகிறது.

(டாக்சி ஓட்டுனர் சொன்ன இந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களையும் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)

“இன்றைக்கு நாம் சந்தித்தோம் என்றால் அது இறைவனின் ஏற்பாடு. ஏனென்றால், யாரிடமும் நான் இத்தனை பேசுவதில்லை. யாரும் என்னிடம் பேச்சுக் கொடுப்பதுமில்லை. நீங்கள் என்னைப் பேசத் தூண்டினீர்கள். நீங்கள் இந்தியர் என்றதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இறைவன் அருளிருந்தால், நாம் மறுபடி சந்திப்போம்” என்று விடைபெற்றுக் கொண்டார் ரோனி.

ஆப்பிரிக்கா என்பது இயற்கைச் செல்வங்கள் மட்டுமல்ல, செழுமையான கலாசாரத்திலும் மேன்மையானது. முன்னது சுரண்டப்பட்டது. பின்னது அழிக்கப்பட்டது. வெள்ளையர்கள் கால்வைத்த எந்த மண்ணின் கதையும் இப்படித்தான் ஆனது.

“இன்றைக்குள்ள தலைமுறையினருக்கு நம்முடைய பழம்பெருமையை எடுத்துச் சொல்வோர் குறைவு. சொன்னால் கேட்கின்ற மனநிலையில் அவர்கள் இல்லை. அதனால்தான் பெரும்பாலானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிப்போய், வாழ்க்கையையே வீணாக்கிக் கொள்கிறார்கள். என் இளைய மகனுக்குப் பத்து வயதாகிறது. அவனுக்கு இரண்டு வயதாகும்போது பார்த்தேன். அப்புறம் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அவனுக்குப் பெல்ட் அணிவதோ, ஷூ லேஸ் அணிவதோ நானல்லவா சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்? அவன் பாட்டிக்குத்தான் பாவம் கூடுதல் வேலை.”

“அன்றைக்குப் பெரியவர்கள் கண்டிக்கும்போது புரியவில்லை. இப்போது அவர்கள் அருமை புரிகிறது. நாம் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று தெரிகிறது,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

உங்களுக்கு ரோனிதான் பெயரா? என்று அனு கேட்டாள். அந்தக் கேள்வி அவரைச் சிந்திக்கத் தூண்டியது. “காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் உகாண்டாவும் ஒன்று. அதன் விளைவாக நாங்கள் வழக்கத்திலிருந்த எங்கள் பெயர்களையும் இழந்தோம்.”

அனுவா விடுவாள்? அடடா! உங்கள் பெயர்களுக்கெல்லாம் ஒரு பின்னணி, அடையாளம், ஓர் அர்த்தம் இருக்குமே!

“ரோனி என்பது இங்கு வந்த பெயர். அதற்குப் பொருளொன்றும் கிடையாது. லூவலாகாவுக்கு என்ன பொருள் என்பதோ எனக்குத் தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஆம், அதுதான் என் பகாண்டா மொழிப் பெயர்,” என்றார் அந்த டாக்சி ஓட்டுனர்.

அம்மாடி! கட்டுரையின் முதல் வார்த்தைக்கு விளக்கம் சொல்லி முடித்து விட்டேனா!

மிருகக் காட்சி சாலையில் இரண்டுமணி நேரம்தான் இருந்தோம். மாலை ஐந்து மணிக்கு, விலங்குகளுக்கான உணவு இடைவேளை! அப்போது ஒருமணி நேரம் மூடி விடுகிறார்கள். அதன் பிறகு ஆறு மணிக்கு மறுபடித் திறக்கிறார்கள். நாங்கள் ஐந்து மணிக்கெல்லாம் வெளியேறி விட்டோம். மீண்டும் ஊபர். இந்த டிரைவர் அதிகம் பேசவில்லை. வரும் வழியில் எங்கள் “பாரதி யார்?” நாடகத் தயாரிப்பாளர்/இயக்குனர் திரு எஸ்பிஎஸ் ராமனை நினைத்துக் கொண்டேன். ஏன்? இங்கே அருமையான கால்ஃப் கோர்ஸ் இருக்கிறது. இறைவன் அருளால் நாடகம் போட இங்கே வந்தால், அவருக்கு இங்கே விளையாட வசதி ஏற்படுத்தித் தரவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

ப்ரியாவின் காபி, புத்துணர்ச்சியைத் தந்தது. வீட்டுச் சொந்தக்காரரின் மனைவி திருமதி கிரண் வந்தார். அனுவைப்போல் அவரும் பம்பாயில் இருந்தவர். பேச்சுக்குக் கேட்பானேன்? தடிதடியாய் அருமையாக இரண்டு ஊத்தப்பம் வார்த்துப் போட்டாள் ப்ரியா. கிரண் வீட்டில் செய்து வந்திருந்த ‘பனானா ப்ரெட்’ அருமையாக இருந்தது. பெருங்காயம் போட்ட மோரைக் குடித்து நிமிர்ந்து கொண்டேன்.

பேத்தி, சுற்றிச் சுற்றி வந்து பல காரியங்கள் செய்தாள். பாத்திரங்களை எடுத்து வைத்தாள். எது கேட்டாலும் கேட்டு முடிக்குமுன்னே ஓடிவந்து அன்புடன் பரிமாறினாள். ப்ரியா பாஷையில் ‘ஒரே துடிக்குது புஜ’மாய் இருந்தாள்.

எனக்கென்னமோ, மிருகக் காட்சி சாலையில் அந்த தாய் கொரில்லா என்னைப் பார்த்த பார்வை சரியில்லை என்றே தோன்றியது. ‘எலேய்! உள்ள இருக்க வேண்டியவன் நீ! வெளிய நின்னுகிட்டு போட்டாவாலே புடிக்க?” என்று கேட்பது போலவே இருந்தது. கூடவே, ஜெயகாந்தனின், அவர்கள் வெளியே இருக்கிறார்கள் என்ற கதையும் ஞாபகம் வந்தது.

சீக்கிரமாய்த் தூங்கிவிட்டால் கொஞ்சம் உண்மைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்..