LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையை பயன்படுத்துங்கள் தமிழ் கட்சிகளிடம் அன்ன ராசா வேண்டுகோள்

Share

பு.கஜிந்தன்

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையை பயன்படுத்துங்கள் தமிழ் கட்சிகளிடம் அன்ன ராசா வேண்டுகோள்

இலங்கை வரவுள்ள இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடத்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திபின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு கடல் ஊடாக தொடர்ச்சியாக அதிகளவிலான போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

வடக்கு கடலூடாகக் கடத்தப்படும் போதை பொருட்கள் தரை மார்க்கமாக தென்னிலங்கை நோக்கி கொண்டு செல்லப்படுவதுடன் குறித்த கடத்தல் செயல்பாட்டில் பண முதலைகள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம் வேகமாக இடம்பெற்றுவருகிறது.

குறித்த வியாபாரத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சில பிரபல வர்த்தகர்கள் ஈடுபட்டு வருவதாக அறியக் கிடைக்கும் நிலையில் அவர்கள் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் வடக்கு கடலூடாக இம்பெறும் போதை வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியக் கடற்படையின் உதவி அவசியமாகக் கருதப்படும் நிலையில் இலங்கை வருகை தரும் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரிடம் தமிழ் கட்சிகள் பேசி எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவிடம் வழக்கமாக 13வது திருத்தம் அரசியல் தீர்வு என தமிழ் கட்சிகள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இம்முறையாவது சட்டவிரோத போதை வியாபாரம் மற்றும் எல்லைதாண்டிய இந்தியப் படகுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரிடம் பேசுங்கள்.

ஏனெனில் வடக்கு மாகாணத்தை தளமாக கொண்டியங்கும் போதைப் பொருள் வியாபாரம் எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.