LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியா வடக்கில் இரு ஆண்டுகளில் இரண்டு கோடி மோசடி; அறவிட முடியாத கையறு நிலையில் நிர்வாகம்.

Share

நடராசா லோகதயாளன்

வவுனியா வடக்கு கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர்களின் சம்பளம், கடன்கள், படிகள் என 2 கோடியே 20 லட்சம் ரூபா மோசடியில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத நிலமையும் மோசடி நிதியை மீளப்பெறாத சூழலே நீடிக்கின்றது. இந்த மோசடியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த செய்தியாளர் அம்பலப்படுத்தியுள்ளார்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை இந்த மோசடி இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் மேற்கொண்ட ஆரம்ப புலனாய்வு விசாரணை அறிக்கையில் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

அந்த கல்வி வலயத்திலே 2013 ஏப்பிரல் முதல் 2015 மார்ச் வரையான இரண்டு ஆண்டுகளில் 15 லட்சத்து 57 ஆயிரத்து 970 ரூபா மோசடி செய்யப்பட்டு அவை அங்கே பணியாற்றும் ஒருவர் தனது 4 வங்கி கணக்கு இலக்கங்கள் ஊடாக அப்பணத்தை கையாடல் புரிந்துள்ளார். இந்த வழியை வலய மட்டம் கண்டுபிடிக்காத நிலையில் அதேவழியை பின்பற்றி அதன் பின்பு இப்பணிக்கு வந்த உத்தியோகத்தரும் 2018 யூன் முதல் 2020 ஒக்டோபர் வரையான 28 மாத காலப் பகுதியில் தனது 6 வங்கி கணக்குகள் ஊடாகவும் இந்த 2 கோடியே 4 லட்சத்து 27 ஆயிரத்து 459 ரூபா பண மோசடி செய்துள்ளார்.

இக்காலப் பகுதியில் 2019ஆம் ஆண்டு மே மாதம் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பிய 5 லட்சத்து 72 ஆயிரத்து 587 ரூபாவினையும் இதே உத்தியோகத்தர் தனது கணக்கிற்கும் வேறு இரு உத்தியோகத்தர்கள் கணக்கிற்கும் பங்கிட்டு வைப்புச் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு மோசடி செய்த உத்தியோகத்தர் தான் பணியாற்றிய 3 ஆண்டுகளில் பெற்ற அரச சம்பளம் 20 லட்சம் ரூபாவாகவும் மேற்கொண்ட மோசடியின் மூலம் ஈட்டிய தொகை 2 கோடி ரூபாவாகவும் காணப்படுகின்றது.

இரண்டு கோடி ரூபாவை மோசடி செய்தவர் வலய கல்வி அலுவலகத்தில் தான் பணியற்றும் அதே பொறுப்பில் முன்பு பணியில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற இரு உத்தியோகத்தர்களின் பெயரிலும் சுமார் 13 லடசம் ரூபா பணம் வைப்புச் செய்துள்ளார் என்பதும் ஆரம்ப புலன் விசாரணையில் கண்டுகொள்ளப்பட்டுள்ளது..

2013 ஆம் ஆண்டு முதல் இதே வகையான மோசடி ஆரம்பித்து கண்டு பிடிக்கும் வரையான காலத்தில் வவுனியா வடக்கு கல்வி அலுவலகத்தில் 5 கணக்காளர்கள் மாறியுள்ளதோடு 3 வலயக் கல்விப் பணிப்பாளர்கள், 3 விடய எழுதுநர்கள் என 11 பணியாளர்கள் மாற்றலாகியுள்ள போதும் மோசடி மட்டும் கண்டு பிடிக்கப்படவில்லை

தற்போது இது 2021 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டிருப்பினும் அதிக தொகையை எடுத்த ஒரு உத்தியோகத்தர பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டு எஞ்சிய உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை அல்லது விசாரணைக்குள்ளும் உள்வாங்கப்ப்டாலும் பொறுப்பாக பணியாற்றிய மேலதிகாரிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.

இருந்தபோதும் மாகாண பிரதம செயலாளரினால் இது தொடர்பான ஆரம்ப புலனாய்வு விசாரணை ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் இந்த வலயத்தில் பணியாற்றிய 8 கணக்காளர்கள், 3 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட 35 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு கோவையிடப்பட்டுள்ள போதும் எந்த சட்ட நடவடிக்கைக்கும் கொண்டு செல்லப்படவில்லை என மாகாண கல்வித் திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம கோரிய வினாவிற்கு வழங்கிய பதிலில் உறுதி செய்கின்றது.

இவ்வாறெல்லாம் மோசடியில் ஈடுபட்ட உத்தியோகத்தர் ஓர் முகாமைத்துவ சேவை உத்தியோகத்ராகவும், 2013 ஏப்பிரல் முதல் 2015 மார்ச் வரையான இரண்டு ஆண்டுகளில் 15 லட்சத்து 57 ஆயிரத்து 970 ரூபா மோசடி செய்த உத்தியோகத்தர் வழியை பின்பன்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு 2013 ஏப்பிரல் முதல் 2015 மார்ச் வரையான இரண்டு ஆண்டுகளில் 15 லட்சத்து 57 ஆயிரத்து 970 ரூபா மோசடி செய்த உத்தியோகத்தர் இதே மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் தற்போது வரையில் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.

இந்த நிலையில் இரண்டு கோடியை தாண்டிய பணத்தை மோசடி செய்த உத்தியோகத்தரை தற்போது திணைக்களத்தினால் எங்கு இருக்கின்றார் எனக் கண்டுகொள்ளவும் முடியவில்லை. இவை தொடரபில் 35 பேரடம் ஆரம்ப புலனாய்வு விசாரணை மேறகொண்ட வடக்கு மகாண பிரதம செயலாளர் அலுவலகம் 9 உத்தியோகத்தர்கள் மீது வரைபுக் குற்றச் சாட்டுக்களை 2021-06-01இல சமர்ப்பித்துள்ளது.

இவ்வாறெல்லாம் மோசடி இடம்பெற்று ஆரம்ப புலன் விசாரணை, வரைபுக் குற்றச் சாட்டு என திணைக்கள நடவடிக்கை உள்ளக ரீதியில் இடம்பெற்றாலும் மோசடி அல்லது கையாடல் செய்த பணம் மட்டும் மீளச் செலுத்தப்படவில்லை.

பணத்தை மீளச் செலுத்த தவறிய உத்தியோகத்தரிற்கு எதிராக எந்த நீதிமன்றிலும் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கு தாக்கல் செய்யாதமை மட்டுமல்ல வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த நிதி மோசடி தொடர்பில் வவுனியா மாவட்டத்தின் எந்தப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடும் பதிவு செய்யப்படவும் இல்லை எனபது மேலும் பல ஐயங்களை ஏற்படுத்துகின்றது. இதற்கு ஒப்பிற்கு வெறுமனே கொழும்பில் உள்ள லஞ்ச, ஊழல் தடுப்பு பிரவில் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யாதமை மட்டுமன்றி வவுனியா மாவட்டத்தில் இந்த நிதி மோசடி தொடர்பில் வவுனியா மாவட்டத்தின் எந்தப் பொலிசிலும் முறைப்பாடு செய்யாதமைக்கு ஓர் அதகாரம் மிக்க அரசியல்வாதியின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகன்றது.

மாகாணத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் ஓர் நிணைக்களத்தில் மோசடி அல்லது களவு இடம்பெற்றால் அதற்கு திணைக்கள ரீதியில் ஓர் விசாரணையும் சட்ட ரீதியில் உடனடியாக பொலிசில் ஓர் முறைப்பாடும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே பொதுவான ஏற்பாடு என்றார்.

இவ்வாறு அரச திணைக்கள மோசடிகளில் இழக்கும் நிதியை மீளப்பெறுவது என்பது மிக அரிதாகவே இருப்பதோடு இவற்றினை அறவிட சட்ட ஏறபாடுகள் போதிய அளவில் இல்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.