LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியா வைத்தியசாலையிலிருந்து வெளிநாடு சென்ற 11 வைத்திய நிபுணர்கள்

Share

வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன் அறிவிப்பு

(2-09-2023)

வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த வருடம் 6 ஆம் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். அதன்படி வைத்தியர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றுள்ளார்கள்.

விசேட வைத்திய நிபுணர்கள் 272 பேர் சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வேலை செய்வதற்கான பொருத்தமான வளங்கள் இன்மை, இடவசதிகள் போதாமை போன்றனவே இதற்கு காரணம்.

தற்போது பிரதான வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளுக்கு ஆட் பற்றாக்குறை ஏற்படுகிறது. வைத்தியர்களுக்கான மருந்துகள், விடுதிகள், பாதுகாப்பு பிரச்சினை என்பன இதற்கு காரணங்களாகும். வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒரு வைத்திய நிபுணர் கூட இல்லை.

வவுனியாவிற்கு அண்மையில் உள்ளவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கே வருகிறார்கள். ஆட் பற்றாக்குறை வவுனியா வைத்தியசாலையிலும் ஏற்படுமாக இருந்தால் நிலைமை மோசமாக அமையும். வவுனியா வைத்தியசாலைக்கு அண்மையில் ஒரு வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய நியமனக் கடிதத்தில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களையும் பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு வைத்திய நிபுணர் எவ்வாறு 4 மாவட்டங்களை பார்க்க முடியும். அவ்வளவு தூரம் எங்களிடம் வைத்திய நிபுணர்கள் இல்லை. வைத்தியர்களுக்கான வேலை செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் இன்னும் பல வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும்.

இன்னும் 5000 இற்கு மேற்பட்டோர் செல்வதற்கு தயாரான நிலையில் உள்ளனர். இதனை தடுக்க வேண்டுமானால் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அவர்கள் விருப்பத்துடன் வேலை செய்யக் கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் வவுனியா மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதி வரை வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 05 சாதாரண வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து 03 சாதாரண வைத்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மக்களுக்கு பாதிப்பே. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு எமது சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் எனத் தெரிவித்தார்.