LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலவச மருத்துவ சேவைக்கு சாவு மணி அடித்து வைத்தியத்துறையை தனியார் மயப்படுத்தும் முயற்சி

Share

– அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

பு.கஜிந்தன்

இலவச மருத்துவ சேவைக்கு சாவு மணி அடித்து வைத்தியத்துறையை தனியார் மயப்படுத்தும் முயற்சி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நாங்கள், இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு தொடர்பாக சொல்லிக் கொண்டு வருகின்றோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதன் அடிப்படையில் நாங்கள் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் பொழுது நிறைய முன்மொழிவுகளை கொடுத்திருந்தோம். அந்த சந்திப்புகளில் சாதகமாக பரிசீலிப்பதாக கூறியிருந்த போதிலும் இன்று வரை அந்த மருந்துகளுக்கும், சத்திர சிகிச்சை உபகரணங்களுக்குமான தட்டுப்பாடுகள் சரிவர நிவர்த்தி செய்யப்படவில்லை.

மேலும் நாங்கள் கூறியிருந்தோம் அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற போது நோயாளிகள் மருந்துகளை தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ வாங்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.

இந்த நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளின் விலைகள் அதிகரித்து இருந்தமையால் மக்கள் அதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தார்கள். அதனால் உயிராபத்தான நிலையில் அதிக வைத்தியசாலை அனுமதிகள் ஏற்பட்டிருந்தன.

இப்போது அரசாங்கம் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் நமது அவதானிப்புகளின் அடிப்படையில் உதாரணமாக ஐந்து ரூபாய்க்கு குறைவாகவே விலை குறைப்புகள் இருந்துள்ளன. அதாவது விலைகள் பெரிய அளவில் குறைக்கப்படவில்லை.

எமது நாட்டின் அனைத்து துறைகளிலும் இருந்து நிபுணர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகவும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையீனம் காரணமாகவும் எமது நாட்டில் இருந்து புத்திஜீவிகள் வெளியேறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எமது சுகாதாரத் துறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நாங்கள் முற்கூட்டியே மக்களுக்கும், அரசாங்கத்துக்கும். தெளிவுபடுத்துவது வழமை. அதனடிப்படையில் நாங்கள் ஒரு வருடத்திற்கு முதலே இதை கூறத் தொடங்கியிருந்தோம். இன்று வரை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 850 வைத்தியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். அதில் 300 வைத்திய நிபுணர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட தர வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள்.

வைத்தியர்கள் மாத்திரமல்ல தாதியர்கள், துணை மருத்துவ உதவியாளர்கள் ஆகியோரும் இந்த நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு வைத்தியத்துறை சார்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது இலவச மருத்துவத்திற்கு மிகவும் பாரிய பின்னடைவு ஏற்படும்.

இலங்கையில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பது, நமது நாட்டில் உள்ள 95 வீதத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்களை கொண்ட சங்கமாகும். ஆகவே எமது அவதானிப்புகளின் அடிப்படையில், இவ்வாறு மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடுகளையோ, மருந்து தட்டுப்பாடுகளையோ நீக்காமல் இருப்பதும் மற்றும் வைத்தியர்கள் இந்த நாட்டை விட்டு செல்வதை தடுக்காமல் இருப்பது என்பது நாங்கள் ஏற்கனவே கூறியவாறு இந்த இலவச மருத்துவ சேவைக்கு சாவு மணி அடித்து சுகாதார சேவையை முற்றாக தனியார் மயப்படுத்துவதற்குரிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.