LOADING

Type to search

இலங்கை அரசியல்

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய முன்றலில் விசேட வழிபாடு

Share

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு செப்-12 ஆம் திகதியான இன்று, மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலையை வேண்டி, குரலற்றவர்களின் குரல் அமைப்பு, நல்லூர் ஆலய முன்றலில் 17 தேங்காய்களை உடைத்து விஷேட வழிபாட்டினை மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்ட குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அவர்கள்,

“மூன்றரை தசாப்த காலமாக நீடித்த யுத்த சூழலின் ஒற்றைச்சொல்லாக ‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்கின்ற பேசுபொருள் இதுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு, அரசு உடனடியாக முற்றுப்புள்ளியிடவேண்டும். அதைவிடுத்து, கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, பின்னர் அவ்வாறானவர்களை பிணையில் விடுவித்துவிட்டு, ‘நாம் நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்துள்ளோம்’ என சர்வதேச அரங்கில் உரத்துக்கூறிவருகிறது அரசு. ஆனால்,15முதல் 28ஆண்டுகளாக 17 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, உண்மை நிலையை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே அறிக்கையிடலோடு மாத்திரம் தமது மனித உரிமை செயற்பாடுகளை ட்டுப்படுத்திக்கொள்ளாது இலங்கை அரசுக்கு தொடர் அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும். இதனூடாகவே போர் ஓய்ந்த நாட்டில் நிரந்தரமான நல்லிணக்கத்தை உறுதிசெய்யமுடியும்” என தெரிவித்துள்ளார்.