LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் கிணறு வெட்டிய ரசீது உண்டு கிணற்றைக் காணவில்லை.

Share

நடராசா லோகதயாளன்


தமிழகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு நடிப்பில் தனக்கென்று தனியொரு முத்திரையை பதித்து காலங்களை கடந்து ரசிகர்கள் மனதில் நிற்கும் நகைச்சுவை காட்சிகளை அளித்துள்ளார். அதில் அமரத்துவம் வாய்ந்த பல காட்சிகள் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சியமைப்பு, நடிப்பு, வசனம், இயக்கம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, அது சமகாலத்தில் சமூகத்தில் நிலவும் அவலங்களை தோலுரித்து காட்டுவதே மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவ்வகையில் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக சில நகைச்சுவை காட்சிகள் சமூக அவலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு அவை சமூக மாற்றத்திற்கு உதவியுள்ளதையும் காண முடிகிறது.

அவ்வகையில் “வைகைப் புயல்” என்று அறியப்படும் வடிவேலு அவர்கள் நடித்த “கிணற்றை காணோம்” நகைச்சுவ பல செய்திகளை கூறியது. இந்திய அரசமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பிலுள்ள ஊழல்களை அது வெட்ட வெளிச்சமாக்கியது. லஞ்ச ஊழல்கள் எந்தளவிற்கு தலைவிரித்து ஆடுகிறது என்பதே அந்த நகைச்சுவையின் அடிநாதம். அதிகார படிநிலை எப்படி லஞ்ச லாவண்யத்தில் திழைத்து ஊறியுள்ளது என்பதை மிகவும் அற்புதமாக தனது நடிப்பின் மூலம் அவர் வெளிப்படுத்தியிருப்பார்.

சட்டரீதியாக அவர் கிணறு வெட்டியதை கண்டதாக அதிகாரி கொடுத்த கடிதமே அவர் தப்பிக்கவும், அந்த நகைச்சுவை பரிமளிக்கவும் காரணமாக அமைந்தது.

இந்த நகைச்சுவை தமிழ்நாட்டின் தென் பகுதியில் ஒரு ஊரில் நடப்பதாக கதையில் இடம்பெற்றிருக்கும். இப்போது தென் தமிழ் நாட்டிற்கு அருகாமையிலிருக்கும் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலும் இதே போன்று “கிணற்றை காணோம்” கதை அரங்கேறியுள்ளது. அதாவது ஊழலுக்கு சாதி, மதம், இனம், ஆண், பெண் என வேறுபாடுகள் ஏதும் கிடையாது என்பதை மன்னார் சமப்வம் நிரூபிப்பதாக உள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்குப் பகுதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக  வடக்கு கூட்டுறவுத் துறையின் கீழ் ரெக் சிலோன் நிறுவனத்தின் ஆலோசணையில் 500 மில்லியன் ரூபாவில்  சிறு கைத்தொழில்சாலைகள் உருவாக்கம் என்ற  திட்டத்தில் மன்னாரில் அமைத்ததாக மாவட்டச் செயலகம் எழுத்தில் வழங்கிய தொழிற்சாலை இன்றுவரை  மாவட்டத்தின் எப்பாகத்திலும் காணப்படவில்லை.

இந்த திட்டத்தின் கீழ் மன்னர் மாவட்டத்திற்கு கிடைத்த  திட்டங்கள் எவை, அதற்கான செலவு எவ்வளவு, திட்டத்தின் நிலை என்ன என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

அவ்வாறு விண்ணப்பித்த  தகவல் அறியும் சட்டத்தின் மூலமான விண்ணப்பத்திற்கான பதிலில் மாவட்டத்திற்கு 4 திட்டம் கிடைத்ததாகவும் அந்த நான்கின் மொத்தப் பெறுமதி 100 மில்லியன் 570 ஆயிரம் ரூபா எனவும் இதில் ஓர் திட்டம் வலை உற்பத்தி நிலையம் அதற்கான செலவு 48 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த வலைஉற்பத்தி நிலையத்தின் மூலம் 37 மீனவ சங்க அங்கத்தவர்கள் நேரடி நன்மை அடைவதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் 5 மாவட்டத்திலும் மாவட்டச் செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தில் மன்னாரிற்கு கிடைத்த ஏனைய திட்டங்கள் இயங்குவதாக மாவட்டச் செயலகம் பதிலளித்த போதும் அவையும் தற்காலகமாக தடைப்பட்டே உள்ளதாக கூட்டுறவுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேநேரம் வலை உற்பத்தி நிலையம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தின்  பதிலில்  வலை உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்போது  தற்காலிகமாக இடை நிறுத்ப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தில் எழுத்தில்  பதிலளிக்கப்பட்டுள்ளது.

இடை நிறுத்தப்பட்ட வலை உற்பத்தி நிலையத்தில் எதற்காக பணி நிறத்தப்பட்டது என அறிவதற்காக  குறித்த வலை உற்பத்தி நிலையம் எங்கே உள்ளது அதனை மன்னாரில்  எந்த கூட்டுறவுச் சங்கம் மேற்பார்வை செய்கின்றது என மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விழி பிதுங்குவது மட்டுமன்றி  இவ்வாறானதொரு வலை உற்பத்தி நிலையம் மாவட்டத்தின் எப்பாகத்திலும் ஆரம்பிக்கப்பட்டதான தகவல் எமக்கு எந்தக் காலத்திலும் சமர்ப்பிக்கப்படவில்லை என்கின்றனர்.

கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரகளின் பதி்ல் தொடர்பில் கூட்டுறவுத் திணைக்கள அதிகாரகளிடம் தொடர்புகொண்டபோது அவர்களும் இத்திட்டம் மன்னாரில் இருப்பதனை உறுதி செய்ய முடியவில்லை. அவ்வாறானால் மாவட்டச் செயலகங்கள் ஊடாக முன்னெடுத்த இத்திட்டங்களில் எந்த திட்டம் கிடைத்தது அதில் எவை முன்னெடுக்கப்பட்டன, அதில் எத்திட்டங்களிற்கான நிதி விடுவிக்கப்பட்டன என்ற தகவல்கள் கூடவா மாவட்டச் செயலகங்களில் பேணப்படவில்லை அல்லது இத்திட்டத்திற்கு நிதி அனுமதிக்கப்பட்டும் திட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லையா என்ற கேள்விக்கு மாவட்டச் செயலகமே பதிலளிக்க வேண்டும்.

இறுதியில் வடிவேலின் நகைச்சுவை பாணியில் கிணறு வெட்டிய ரசீது உண்டு ஆனால் கிணற்றை காணவில்லை என்னும் நிலையை மன்னார் மாவட்டச் செயலகம் உருவாக்கி விட்டது.