LOADING

Type to search

இலங்கை அரசியல்

அரைகுறை விடயங்கள் தெரிந்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள் – அனந்தி சசிதரன் தெரிவிப்பு

Share

பு.கஜிந்தன்

திருகோணமலையில் லெப்டினன்ட் கேணல் தியாகி திலீபனுடைய ஊர்தி மீதும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் சிங்கள காடையர்கள் வெறித்தனமாக தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

அண்மைக் காலமாக, அத்துமீறிய சிங்கள குடியேற்றம் மற்றும் புத்த விகாரைகள் அமைப்பது தொடர்பாகவும் போராட்டங்கள் நடாத்தி நாங்கள் எதிர்ப்புகளை எங்களது மக்கள் காட்டிக்கொண்டு இருந்தாலும் கூட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மௌனமாக இருப்பதுடன் இந்த சம்பவங்களையும் பார்த்தும் பாராத மாதிரி இருக்கிறார்.

இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தான் இந்த உண்ணாவிரதத்தினை தியாக தீபம் திலீபன் அவர்கள் கடைப்பிடித்தார். இந்த உண்ணாவிரதம் இருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எந்த தடையும் இருக்கவில்லை.

அவர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இருந்தது. அவர்களை இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற காரணத்திற்காக சுதந்திரமாக அவர்களை நடமாட விடப்பட்டது. ஆனால், அரைகுறை விடயங்கள் தெரிந்தவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள்.

அகிம்சை நாடு என கூறப்படும் இந்தியா ஆயுதங்களையும் பறித்துவிட்டு, திலீபன் அண்ணாவையும் மரணிக்க விட்டது.

உண்மையிலே அந்த தியாகியை நினைவு கூருகின்ற எல்லாருக்குமே தெரியும், விடுதலை புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி போராடவும் தெரியும், தியாக வழியில் போராடவும் தெரியும் என்று. அந்த தியாகியுடைய தியாகத்தை தெரியாத சிங்கள காடையர் கூட்டம் இந்தமாதிரி செய்திருக்கின்றார்கள்.

திருகோணமலை சிங்களவர்களின் இடம் இல்லையே. அது தமிழர்களுடைய மரபுவழி வந்த இடம். விடுதலைப் புலிகள் இருந்த போது சிங்களவர்கள் சொல்லி இருக்கலாமே அது சிங்கள இடம், தங்களுடைய குடியேற்றங்கள் இருக்கின்றன என்று. தற்போது யுத்தம் முடிந்து அப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களவர்கள் மேலோங்கிப் போய் இன்றைக்கு திருகோணமலை தங்களுடைய இடம் என்று சொல்லும் அளவிற்கு தான் சிங்களவர்களுடைய ஆதிக்கம் இருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டபோது இருந்த காணி பூமிகள் கூட தற்போது எங்களிடம் இல்லை.

இதுவே வட பகுதியில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த மாதிரி யாராவது செய்திருந்தால் என்ன நிலைமை என யோசித்து பாருங்கள். இலங்கையில் நீதி சிங்களவருக்கு புறம்பாகவும், தமிழருக்கு புறம்பாகவும் உள்ளது. தமிழ் நீதிபதிகள் சொல்கின்ற தீர்ப்பை மீறி, நீதிமன்றத்தை அவமதிக்கின்ற தரப்பாக தான் சிங்கள இனவாதிகள் செயற்படுகின்றார்கள்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபை கூடிக்கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு சிங்கள காடையர்கள், 83ஆண்டு தமிழர்களை தாக்கி அழித்தது போல செயற்பட்டுள்ளார்கள். நாகரீகமான காலத்தில் கூட அநாகரீகமான முறையில் நடக்கக் கூடிய சிங்கள காடையர்கள் தான் இந்த மண்ணில் இருக்கின்றார்கள் – என்றார்.