பியர் ரூடோ கண்ட அமைதிக் கனவும், இன்றைய நிலையும்
Share
நூறாவது பிறந்தநாள். புரட்டாதி 24- 2023
படம் முத்துத்தம்பி பேராயிரவர்
(முன்னாள் அதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி)
அமரர் பேராயிரவர் எழுதிய கட்டுரையில் சிலபகுதி.
பிறந்த நாட்டில், 45 வருட ஐனநாயக சுதந்திர ஆட்சி, பேரின சர்வாதிகார இருளில் முடிந்துள்ளது. மனிதனின் அகத்தில், அவனது திறந்த தூய உள்ளத்தில் ஊறும் அன்பில்தான் சமாதான அமைதி உருவாகிறது. அதே அகத்தினை மூடிய இருளில்தான் நிறவெறி. போர், பயங்கரவாதம் உருவாகிறது. தன்னுள் சமாதானத்தை உணர்ந்த மனிதன், அதை மேலும் அனுபவிக்க, சமாதானத்தை விரும்புகிறான். மனிதன் தனது சமாதான வேட்கை சமூகத்தால் தடை செய்யப்பட்டால், அதை அனுபவிக்க துறவியாகிறான். அல்லது எங்களைப் போல் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து தப்பிப் பிழைக்கிறான். அல்லது ஐனநாயகத்தில் நம்பிக்கை இழந்த நிலையில். துப்பாக்கியில் நம்பிக்கை வைக்கிறான். இந்தநிலை இலங்கையில் உண்டு.அந்த நாட்டு அணுகு முறைகள் இங்கே ஒவ்வாது.
கனடா ஒரு திறந்த ஐனநாயக நாடு. அகதிகளுக்கு, உலகில் சிறந்த புகலிடம். முதல்தரமான கல்வித்திட்டம். U.K. U.S.A போன்று ஒரு melting pot அல்ல. அங்கே படிப்படியாக, சகல இனங்களும் உருக்குலைந்து ஒன்றாக ஒன்றுபடவேண்டும். இங்கே மனிதநேயம்கொண்ட நாகரீகமான பல்கலாச்சாரக் கொள்கை.
அண்மையில், நாம் செய்த புண்ணியம், கனேடிய அரங்கில் இரு பெரும் சிந்தனைச் சிற்பிகள் செல்வாக்கு பெற்றிருந்தனர். ஒருவர் முன்னாள் பிரதமர் பியர் ருடோ. மற்றவர் மாஷல் மக்லூகன் ரூடோ. நேருவின் நண்பர். இந்திய ஞானத்தை மதிப்பவர்.
ஒரு மனிதன் ஆத்மீகத்தில் உள்ளே ஆழமாகப் போக அவன் உலகளாவிய தன்மை பெறுகிறான் என்பது எமது பாரம்பரியக் கொள்கை. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப செய்தித் தொடர்பு சாதனங்கள், உலகத்தை ஒரு சிறிய கிராமமாக்குகின்றன. அதே போல மனிதனையும் ஒரு உலக மனிதனாக்குகின்றன, என்கிறார் மாஷல் மக்லூகன். இருவரின் சிந்தனையில், ஆத்மீகமும் விஞ்ஞானமும் ஒருங்கிணைந்து cultural mosaic திட்டம் உருவானது.
ஐப்பசி மாதம் 1971 ஆண்டு, பிரதமர் ருடோ பல்கலாச்சாரத்திட்டத்தை பாராளுமன்றத்தில் பின்வருமாறு பிரகடனம் செய்தார்.
‘ கனேடிய மக்களின் கலாச்சார சுதந்திரத்திற்கு சிறந்த உத்தரவாதம் பல்கலாச்சரத்திட்டம் தான். தேசிய ஒருமைபாடு, பேச்சோடு நின்றுவிடாது உண்மையில் உருவாக வேண்டுமாயின், அது ஒவ்வொரு தனி நபரின் கலாச்சாரத் தனித்துவத்தின் இரசனையில் பிறக்கும் தன்நம்பிக்கையில,; உதிக்க வேண்டும். தனது கலாச்சாரத்தை மதிப்பவன்தான் பிற கலாச்சாரங்களையும் மதிப்பான், பகிர்ந்து கொள்வான்.’
ருடோவின் திட்டத்திற்கு அமைய பாடசாலைகளில், இன்று பாரம்பரிய வகுப்புக்கள் நிலையாகிவிட்டன. ஆனால், தமிழ் பெற்றோரின் அக்கறையின்மையால் விரைவில் அற்றுப் போகலாம.;
ஒரு தமிழ் பிள்ளை பல்கலாச்சாரம் உள்ள ரொரன்டோவில் தனது பாரம்பரியத்தை அறியாவிட்டால், cultural conflict உருவாகி Identity Crisis உருவாகலாம்.
தன்னை அறிய தமிழ் மொழி நன்கு உதவும். தன்னை அறிய, தன்நம்பிக்கை, கௌரவம், கம்பீரம், பிறக்கும். பிற கலாச்சாரங்களை மதிப்பான். மேலும் அப்படிப்பட்டவனை இனவெறி ஒன்ரும் செய்ய முடியாது, கல்வியால்தான் உடைக்க முடியும்.
ருடோவின் கனவு சித்தப்பிரமை அல்ல. கனடாவில் அது சாத்தியமாகும்.