LOADING

Type to search

இலங்கை அரசியல்

”தியாக தீபம்” திலீபன் நினைவேந்தல் கொட்டும் மழையிலும் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது

Share

நடராசா லோகதயாளன்

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின் பிரதான நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது.

அந்தவகையில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் பொதுமக்களால் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக தியாதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமான நேரம் யாழில் கடும் மழை பொழிய ஆரம்பித்ததுடன் கடும் மழையினையும் பொருட்படுத்தாது பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் மக்கள் அணிதிரண்டு திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேவேளை திலீபனின் நினைவேந்தலை தழுவி இளைஞர்கள் இருவர் தூக்குக்காவடி எடுத்து திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலானது இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் பிரத்தியேக இடத்தில் திலீபனின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி பல்கலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் . நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தியாக தீபத்தின் நினைவாக மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலியானது இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறவிருந்த நிலையில் நீதிமன்றம் ஊடாக திருகோணமலை துறைமுக பொலிசாரால் குறித்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.

குறித்த தடையினை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் ஆறு நபர்களின் பெயர்களின் விபரங்கள் அடங்கிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், திருகோணமலை துறை முகப் பொலிஸார் தடை விதித்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் கதிரைக்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் நவநீதன் தலைமையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி இடம்பெற்றது.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.