“நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா; நீதித்துறையை மேலாதிக்க சிந்தனைக்குள் புகுத்த முனைந்தால் நெருக்கடிகளே ஏற்படும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!
Share
(மன்னார் நிருபர்)
02-10-2023)
நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்து அவர் இன்று (2) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“மேலாதிக்கச் சிந்தனையில் சில அரசியல்வாதிகள் இன்னும் செயற்படுவதையே நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் மீதான அழுத்தங்கள் புலப்படுத்துகின்றன.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறிகள், வங்குரோத்துக்குச் சென்றுள்ள நிதி நிலைமைகளால் நாட்டின் மீது சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ள சூழலிது. இவ்வாறுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் கடன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும் சர்வதேசம் திருப்தியில் இல்லை. பல்வகையான பொறிக்குள் நாடுள்ளபோது அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துவதனூடாகவே சர்வதேசத்தின் அபிமானத்தை வெல்ல முடியும்.
ஆணைக்குழுக்களை நிறுவுதல், அரசியலமைப்பில் திருத்தம் செய்தல் என்பவை கண்துடைப்புக்காகவா செய்யப்படுகிறது என்ற சந்தேகங்களைக் கிளறும் வகையிலே சிலரின் செயற்பாடுகள் உள்ளன. பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தெரிவித்த கருத்துக்கள், நீதித்துறையை பாரபட்சத்துக்குள் புகுத்துவதற்கான முயற்சியா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
அதிகாரவர்க்கத்துக்குள் அல்லது பெரும்பான்மை விருப்புக்குள் நீதிமன்றங்களையோ அல்லது அரச நிர்வாகத்தையோ கொண்டுவர முயல்வது ஆரோக்கியமாக அமையாது. முல்லைத்தீவு நீதிபதிக்கு நடந்த கதிபோன்று எவருக்கும் நடைபெறக்கூடாது. அரசாங்கம் இதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
நிதி மற்றும் நீதித்துறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். இல்லாவிடின் பாரிய நெருக்குதல்களுக்கு நாடு உள்ளாவதை தவிர்க்க முடியாது போகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.