இது எப்படி இருக்கு! ஓடாத உழவு இயந்திரங்களுக்கு ஒரு கோடி செலவு
Share
நடராசா லோகதயாளன்
16 வயதினிலே படத்திலே வரும் “இது எப்படி இருக்கு” இன்றளவும் மிகவும் பிரபலம். அந்த செலவடை, முறையற்ற செயல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் வழக்கம் வந்துவிட்டது. அப்படித்தான் ஒரு நிலை வவுனியாவில் ஏற்பட்டுள்ளது.
11 உழவு இயந்திரங்களின் திருத்த செலவு 99இலட்சத்தைக் கடந்தது தொடர்ந்தும் பயன்பாடற்ற நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அவலம் அந்த மாவட்டத்தில் நீடிக்கின்றது.
வவுனியா மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்திற்கு சொந்தமான 11 உழவு இயந்திரங்கள் 99 இலட்சத்து 90 ஆயிரத்து 912 ரூபா 50 சதம் செலவில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் அவை தற்போதும் பாவனையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை கள விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் கமநல சேவை நிலையங்களிற்கு இந்தியத் தூதரகத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 103 உழவு இயந்திரங்கள் உரிய பாவனையோ அல்லது போதிய பராமரிப்போ இல்லாத நிலைமைகள் நீடித்திருக்கையில் அவற்றில் 11 உழவு இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு திருத்தப் பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
அவ்வாறு அளிக்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக, வவுனியா மாவட்ட செயலகத்தினால் 11 உழவு இயந்திரங்களும் வவுனியாவில் இருந்து அநுராதபுரத்திற்கு ஏற்றிச் செல்லப்பட்டு திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த 11 உழவு இயந்திரங்களிற்கும் திருத்த அனுமதி கோரப்பட்டபோது அரச நியமங்களிற்கு ஏற்ப கொள்வனவு அல்லது திருத்தங்கள் தனியாரிடம் எனில் கூறுவிலை கோரலின் அடப்படையிலும் சக அரச திணைக்களம் எனில் நேரடியாகவே செல்ல முடியும் என்ற பொது நியதி உள்ளது.
அதனடிப்படையில், அநுராதபுரம் நீர்ப்பாசணத் திணைக்களத்தின் வாகனத் திருத்தப் பிரிவினால் குறித்த 11 உழவு இயந்திரங்களுக்கான திருத்தச் செலவு மதிப்பீடு வழங்கப்பட்டு அதனடிப்படையில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த உழவு இயத்திரங்களை ஏற்றச் சென்றமைக்கான செலவாக 3 இலட்சத்து 41 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதோடு அதன் திருத்தக் கூலியா 45 இலட்சம் ரூபாவும், எஞ்சியவை உதிரிப்பாக கொள்வனவனவாகவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதியை விவசாயத் திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் சிட்டையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா கமநல சேவை நிரையத்தின் 11 உழவு இயந்திரங்களையும் திருத்தப்பணிகளுக்காக வவுனியா மாவட்ட செயலகம், நீர்ப்பாசன வாகனத்திருத்தற் பிரிவுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கான 9 மில்லியன் 990 ஆயிரம் 912 ரூபா 50 சதம் திருத்தப்பணிச் செலவை விவசாயத் திணைக்களம் வழங்கி குறித்த உழவு இயந்திரங்கள் மீண்டும் கமநல சேவை நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனினும், கமநல சேவைத்திணக்களத்தின் உழவு இயந்திரங்களை திருத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நேரடியாக விவசாயத்திணைக்களம் நேரடியாக நிதியளிக்காது, மாவட்டச் செயலகத்தின் ஊடாக திருத்தப்பணிகள் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் திருத்தப்பணிகள் செய்யப்பட்டதன் பின்னர் அதற்கான நிதியை விவசாயத் திணைக்களம் வழங்கியமைக்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்விகள் கட்டுரையாளரால் எழுப்பபட்டது.
அதன்போது, குறித்த உழவு இயந்திரங்கள் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளிற்காக நியாயமான விலையில் உழவுப் பணியை மேற்கொள்வதற்காக திருத்தம் செய்து தருமாறு கமநல அபிவிருத்தி திணைக்களம் கோரியதன் பெயரில் திருத்தப்பணிகளை நிறைவு செய்து வழங்கியதாக மாவட்டச் செயலகம் அளித்துள்ள எழுத்து மூலமான பதிலில் தெரிவிக்கின்றது.
இதில் சிறப்பு என்னவென்றால், உழவு இயந்திரங்களை திருத்துவதற்கும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரே அனுமதியும் வழங்கியுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய டயமாகும்.
இதேவேளை, திருத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு உழவு இயந்திரங்களிற்குமாக கொள்வனவு செய்த உதிரிப்பாகங்களின் பெறுமதியினைவிடவும் திருத்தச் செலவு, ஏற்றி இறக்கல் செலவு, கண்காணிப்புச் செலவு, ஊழியர் செலவு, எதிர்பாராச் செலவு எனப் பட்டியலிடும் தொகைகளே மிக அதிகமாக காணப்படுகின்றன.
இதிலே 11 உழவு இயந்திரங்களிறகும றிம், மக்காட் உள்ளிட்டவைக்கு வர்ணம் பூசியதா 550 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக காணக்கு காண்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு திருத்தம் செய்த உழவு இயந்திரங்கள் அனைத்தும் 2022ஆம் ஆண்டு 8ஆம் மாதம் திருத்தம் செய்தபோதும் அதற்கான சிட்டையாக வழங்கப்பட்ட விலைப்பட்டியல் இலக்கங்கள் அனைத்தினதும் தொடரிலக்கங்கள் அப்போது தான் இலக்கம் ஒன்றில் இருந்தே ஆரம்பித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு திருத்தப்பணிகளுக்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகுதியில், 40 மில்லியன் ரூபா உதிரிப்பாக செவாகவும் ஏனைய 60சதவீதம் திருத்தச் செலவு, நிர்வாகச் செலவு, உதவியாளர் செலவு எனக் கணக்கிடப்பட்டுள்ளதனால் திருத்துவதற்கு முன்னர் இந்த உழவு இயந்திரங்கள் காணப்பட்ட பெறுமதியில் இருந்து 10 மில்லியன் ரூபா அதிகரித்து காணப்படவில்லை மாறாக வெறுமனே 5 மில்லியன் ரூபா பெறுமதி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அதிகமாக செலவு செய்து திருத்தம் செய்ததாக கூறப்படும் 11 உழவு இயந்திரங்கள் ஏன் பாவனையின்றி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கமநல சேவைத்திணைக்களத்தினைக் கோரியபோது, மிக நீண்ட இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் மூன்று உழவு இயந்திரங்கள் தற்போது மீண்டும் இயங்கவில்லையென கமநல சேவைத் திணைக்களம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளது.
மேற்படி, 11 உழவு இயந்திரங்களிலும் மேற்கொண்ட திருத்தப் பணியினை தனியாரிடம் கூறுவிலை கோரி மேற்கொண்டிருப்பின் சுமார் 600 ஆயிரம் ( 60 லட்சம்) ரூபாவுடன் மேற்கொண்டிருக்க முடிமென வவுனியா மாவட்டத்தில் உழவு இயந்திர திருத்தகம் ஒன்றை நீண்டகாலமாக நடாத்தும் வாகன திருத்த உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், வவுனியா கமநல சேவைத் திணைக்களத்துக்குச் சொந்தமான உழவு இயந்திரங்களில் 11ஐ மட்டும் தெரிவுசெய்தமைக்கான காரணம், அவற்றை நீர்பாசன வாகனத் திருத்தும் பிரிவு ஆகியவற்றிடம் வினாக்களைத் தொடுத்தபோதும் அதற்கான உரிய பதிலகள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த 11 உழவு இயந்திரங்களின் திருத்தத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட உதிரிப் பாகங்களின் மொத்த விலை 42 லட்சத்து 29 ஆயிரத்து 829 ரூபா 50 சதமாகவும், ஏற்றிச் சென்ற கூலி 3 லட்சத்து 41 ஆயிரம் ரூபாவும், வர்ணம் பூசிய செலவாக 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா சிட்டை இடப்பட்டுள்ளமை தொடர்பில் கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது இதற்கான திருத்தச் செலவு விபரங்களை மாவட்டச் செயலகத்தில் பெறுமாறுகூறியதன் அடிப்படையில் இவை மாவட்டச் செயலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரிப் பெற்ற விபரங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டன.
இதையெல்லாம் காணும் போது ”பாமா விஜயம்” திரைபப்டத்தில் வரும் “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்கிற பாடலே நினைவுக்கு வருகிறது.
இதேநேரம் இதேகாலத்தில் இந்திய அரசினால் கிளிநொச்சிக்கு வழங்கப்பட்ட 100 உழவு இயந்திரஙகளிற்கும் அந்த மாவட்ட கமநல சேவை நிலையம் அரச பெறுமதி கணிப்புத் திணைக்களம் மூலம் மேற்கொண்ட பெறுமதி கணிப்கில் 8 லட்சத்தில் இருந்து 12 லட்சத்தை எந்த உழவு இயந்திரத்தின் பெறுமதியும் தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.