‘தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கேள்விக்கு அமைச்சர் நிமல் பதில்!
Share
மன்னார் நிருபர்
6-10-2023)
தலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததாவது,
“தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்தவண்ணமுள்ளன. தலைமன்னாரிலிருந்த உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றுக்குப் பதிலாக புதிய உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
பட்ஜெட்டில் 600 மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பாராளுமன்றம் விடுவித்ததும் விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் பேச்சு நடத்த எதிர்வரும் 16இல், இந்தியா செல்லவுள்ளேன்” என்றார்.
இவ்விடயங்களை ஆராயும் பொருட்டு அமைச்சர் ஏற்கனவே தலைமன்னார் பகுதிக்கு விஜயம் செய்திருந்த வேளையில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரை சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பாராளுமன்றத்திலும் அமைச்சரை அடிக்கடி சந்தித்து, இக்கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றிய பல கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.