இலங்கைக்கு மேலும் ஒரு சீன ஆய்வுக் கப்பல் வருகை
Share
நடராசா லோகதயாளன்.
சீனாவின் சியா யான் 06 என்ற ஆய்வுக் கப்பல் இலங்கை வருவது இப்போது உறுதியாகியுள்ளது.
அந்தக் கப்பல் வருமா வராதா என்ற சர்ச்சையின் மத்தியில் நிகழ்விற்கான அழைப்பிதழை சீனத் தூதரகம் விநியோகித்து வருகின்றது.
சினாவின் சியா யான் 06 கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கூறினாலும் திட்டமிட்ட திகதியில் கப்பலை கொண்டு வருவதில் சீனா உறுதியாகவே இருந்து வருகின்றது என்பது இந்த அழைப்பிதழ் விநியோகத்தின் மூலம் தெரிகின்றது.
சீனாவில் இருந்து கப்பல் புறப்பட்டு இந்தியாவின் கிழக்கு திசையில் ஒரு மாதம் ஆய்வு செய்து. அதனை நிறைவு செய்து தற்போது உணவு, தண்ணீருக்காகவும் இலங்கையுடனான ஆய்வுப் பணிக்காகவும் இலங்கை நோக்கி பயணிக்கிறது.
இலங்கையில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்குரிய ஆய்வின் பின் மீண்டும் இந்தியாவின் மத்திய பகுதிக்கு அப்பாலுள்ள சர்வதேசக் கடற்பரபிலும் சீனாவின் இந்த ஆய்வுக் கப்பல் ஆய்வில் ஈடுபடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையின் கடலில் நீர் நிலை ஆய்வு மற்றும் கடலின் அடியிலான ஆய்வுகளில் இக்கப்பல் ஈடுபடவுள்ளது. நீர்நிலை ஆய்வு என்பது எங்குமே சர்ச்சைகள் கொண்ட ஆய்வாகவே காணப்படும். அதிலும் அடிப்படுகை ஆய்வு என்பதே ஒரு பரரிய விளைவுகளையும் ஏற்படுத்தும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தக் கப்பல் ஒக்டோபர் 25ஆம் திகதி வருவதற்காக அனுமதி கோரப்பட்டபோதும் நவம்பர் 25ஆம் திகதி வருமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இவற்றின் மத்தியிலும் ஒக்டோபர் 25ஆம் திகதி வரும் கப்பலில் இலங்கை ஆய்வாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் நால்வரை ஏற்றி 10 நாள் ஆய்வில் ஈடுபட்ட பின்பு மீண்டும் துறைமுகம் வந்து ஏற்றிய இலங்கையரை இறக்கிய பின்பு கப்பல் இலங்கையில் இருந்து தனது பயணத்தை மற்ற திசையை நோக்கி ஆரம்பிக்கும்.
இலங்கை விஞ்ஞானகளை இறக்கிய பின்பு நாட்டில் இருந்து செல்லும்போதும் அந்தக் கப்பல் ஆய்வில் ஈடுபட்டவாறே செல்லும் என்று அறிய முடிகிறது.
இவ்வாறு இடம்பெறவுள்ள ஆய்வின் ஆரம்ப்ப் பணியில் கலந்துகொள்ளுமாறு சீனாவின் தென் சீனக் கடல் ஆய்வு நிறுவனம், சீன அறவியல் அகடமி கடித தலைப்பில் இந்த அழைப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே இதனை இந்தியா சந்தேக கண்கொண்டு பார்க்கின்றது. இதனால் கப்பல் தொடர்பான விடயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது.