துறைசார் நிபுணர்களின் வெளியேற்றம், இந்த நாட்டின் அழிவுக்கான ஆரம்பமே – சிறீதரன் எம்.பி
Share
அரசியல், பொருளாதார ரீதியாக உறுதித்தன்மையற்றிருக்கும் இந்த நாடு, மீட்சியற்ற நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைத்தான், நாளாந்தம் நாட்டைவிட்டு வெளியேறும் துறைசார் நிபுணர்கள், வல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பறைசாற்றி நிற்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற 0yslans நிறுவனத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
oyslans நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தம்பிஐயா பாலகுமார் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லை ஆதீனத்தின் பிரதமகுரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆளுநரின் செயலாளர் பொன்னம்பலம் வாகீசன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணணித் துறைத்தலைவர் S. சுதாகர், இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ் பிராந்திய நிலைய உதவி இயக்குநர் K.கந்தவேள், இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் யாழ்ப்பாண நிலைய இயக்குநர் A.K. கோகுலன், தேசிய கைத்தொழில் பயிற்சிஅதிகாரசபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் R. திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டுள்ள போதும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கோலோச்சி வரும் oyslans நிறுவனம் ஏராளமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு எனும் வரப்பிரசாதத்தை வழங்கிவரும் நிறுவனமாகவும் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகளை எமது பிள்ளைகள் முறையாகப் பயன்படுத்தி, தமது துறைசார் அறிவையும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்