LOADING

Type to search

இலங்கை அரசியல்

”கோணேஸ்வரத்தை பெருங்கோயிலாக புனரமைப்புச் செய்ய இந்திய அரசு உதவும்”

Share

நடராசா லோகதயாளன்


இலங்கையின் ஐந்து ஈஸ்வரத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோனேஸ்வரத்தை பெருங்கோயிலாக புனரமைப்புச் செய்ய இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று, அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள இந்திய நிதியமைச்சர் கிழக்கு மாகாணத்தின் தலைநகருக்குச் சென்று அங்கு திருக்கோனேஸ்வரம் கோவிலில் வழிபட்டார். பின்னர் அந்நகரில் இந்தியாவின் முன்னணி அரச வங்கியாக ‘பாரத ஸ்டேட் வங்கியின்’ கிளை ஒன்றையும் அவர் திறந்துவைத்தார்.

திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும் என்று வியாழக்கிழமை (2) முற்பகல் திருக்கோணேஸ்வரரின் புனித பூமியில் வைத்து இந்த உறுதிமொழியை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். 

திருக்கோனேஸ்வரம் சென்ற போது, ஆலய நிர்வாகிகள் அவரை வரவேற்று உரையாடினர். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் அப்போது ஆலய நிர்வாகிகள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

”போர்த்துகேயர்களால் அழிக்கப்பட்டு, ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை இன்று ஓரளவு பேணிப் பாதுகாக்கின்றோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயத்தையும் மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கருங்கற்களால், பெருங்கோயிலாக புனரமைத்து தர இந்தியா முழு உதவி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆலய நிர்வாகத் தலைவர் துசியந்தன் உட்பட பலரும் அந்த உரையாடலின் போது உடனிருந்தனர்.

இந்த கோரிக்கையைச் செவிமடுத்த இந்திய நிதி அமைச்சர், மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கோணேஸ்வரத்தையும் புனரமைக்க உதவ முடியும் என்று தெரிவித்தார்.

அதற்கான முன்னேற்பாடுகள், முறைப்படியான கோரிக்கைகள், அனுமதிகளைப் பெறுவதற்கான நடவடிகைகளை மேற்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமன் அம்மையார் உற்சாகத்தோடு தெரிவித்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது” – என ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.