கடல் கொள்ளையர்கள் என எமது மீனவர்களை வர்ணிப்பது வேதனையளிக்கிறது – எம்.வி.சுப்பிரமணியம்
Share
பு.கஜிந்தன்
அண்மைக்காலமாக இந்தியாவில் ஒரு பேசு பொருளாக, இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய மீனவர்களை தாக்கி அவர்களிடம் கொள்ளையடித்து சென்றதாக ஒரு தொனிப் பொருளை வைத்துக்கொண்டு இந்திய ஊடகங்கள், இந்திய மீனவ அமைப்புகள் உட்பட குறிப்பாக அண்ணாமலை அவர்களும் அதனை பூதாகரமாக பறைசாற்றி வருகின்றார் என வடக்கு மாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான எம்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயத்தில் இந்தியா ஒன்றை கவனிக்க வேண்டும். 1987 இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து இன்று வரைக்கும் எமது கடலை கொள்ளை அடித்து செல்பவர்கள் இந்திய இழுவை மடித் தொழிலாளர்கள். இந்திய இழுவை மடி தொழிலாளர்கள் தான் எங்களுடைய வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் எமது மீனவர்களை கொள்ளையர்கள் என வர்ணிப்பது மிகவும் வேதனையான விடயம்.
ஏறக்குறைய நான் 55 வருடங்களாக கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். இதுவரைக்கும் வடபுலத்து மீனவர்கள் கடலில் கொள்ளை அடித்ததாக வரலாறுகள் இல்லை. இந்த ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு இதை பெரிதாக கொண்டு போவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது.
சீனாவினுடைய காய் நகர்த்தல் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. சீனர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள். இரு தினங்களுக்குள் சீன தூதுவர் வர இருக்கின்றார். அதுவும் கடல் வளங்களையும் கடலையும் ஆய்வு செய்வதற்கு வருகின்றார். இவ்வாறு வருகின்ற குழுவினர் இலங்கைக்கு சொந்தமான தீடைகளையெல்லாம் பார்வையிட போகின்றார்கள் என்று சொன்னால் இது இந்தியாவிற்கு பெரிய ஒரு தலையிடியாக இருக்கின்றது.
அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா தனது வேலையையும் முடுக்கி விட்டு இருக்கின்றது. இந்தியா வந்து இந்த கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு கச்சதீவை வாங்கினால் பிரச்சினையை முடிந்து விடும் என்று ஒரு பக்கமும், கச்சதீவை வாங்கினால் கடல் கொள்ளையர்கள் பிரச்சினை இருக்காது என்று இன்னொரு பக்கமும் கூறுகின்றது.
இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் திரைமறையில் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பது எமக்கு நன்றாக தெரியவில்லை. இருந்தும் இரு தினங்களுக்கு முன்னர் இங்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வந்த நோக்கமும் எதுவாக இருக்கும் என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அவர் வந்த இடமும் தெரியாது போன தடவை தெரியாமல் போய்விட்டார். ஒரு மத்திய அமைச்சர் இன்னொரு நாட்டுக்கு வருவதாக இருந்தால் மாத கணக்கிலே அவருக்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் செய்து அறிவித்து வருவது வழக்கம் ஆனால் இவர் வந்த இடமும் தெரியாது போன தடமும் தெரியாமல் போய்விட்டார்.
சில வேளைகளில் திரை மறையிலே கொழும்பிலே கச்சதீவு சம்பந்தமாக சில பேச்சுகளையும் பேசியிருக்கலாம். அது பேசுவதற்கு இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. நாங்கள் உங்களுக்கு பல கடன்கள் தந்து இருக்கின்றோம் பல உதவிகளை செய்திருக்கின்றோம். கச்சதீவை ஒரு இணக்கப்பாட்டிலே நாங்கள் விட்டு விலகினோம். அதனை மீண்டும் தாருங்கள் என கேட்டு இருக்கலாம்.
அல்லது குறிப்பாக சீனாவிற்கு அம்பாந்தோட்டையை கொடுத்து இருக்கிறீர்கள். அதேபோல கச்சதீவை எங்களுக்கு தாருங்கள் என கேட்டிருக்கலாம். அப்படியான சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அவர் வந்த நோக்கமும் அதுவாக இருக்கும் என சந்தேகம் எழுகின்றது எனக்கு.
இதற்கு முன்னுதாரணமாக இந்த கச்சதீவை கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவுக்கு வந்துவிட்டதோ அல்லது பரிசீலித்து கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. இருந்தும் இந்தியாவின் வற்புறுத்தலை அல்லது அவர்களுடைய நெருக்குவாரத்தை தாங்க முடியாமல் சில வேளைகளில் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு கச்சதீவை கொடுக்கலாம். கொடுக்கப் போகும் பொழுது வடபுலத்து மீனவர்களுடைய பாரிய எதிர்ப்பை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கான முன்னோடியாக அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலூடாக அவர்களுடைய சூத்திரதாரியாக வடக்கிலே இருக்கின்ற ஒரு பிரமுகரை வைத்து இந்த கடல் கொள்ளையை அல்லது கடல் அனர்த்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என எனது ஊகம் சொல்கின்றது.
இவ்வாறு பின்புலத்திலே பெரிய ஒரு பிரமுகர் இருக்கிறார். அவரை நம்பி சில தொழிலாளர்கள் கடலில் இறங்கி இந்திய இழுவை படகாகளை தாக்கி அதில் கொள்ளையடித்தோ அல்லது சில பொருட்களை அடுத்தது வந்ததாக நாங்கள் சில மாதங்களுக்கு முன்னர் அறிந்தோம். இதுவும் அரசாங்கத்தினுடைய ஒரு திட்டமிட்ட செயல் ஆகும்.
கச்சதீவை கொடுக்கும்போது, இலங்கை மீனவர்கள் பாரிய எதிர்ப்பை தெரிவிக்கும் போது அங்கே “நீங்கள் கடலிலே கொள்ளை அடித்தீர்கள், இந்திய மீனவர்களை தாக்கினீர்கள் அதன் காரணமாகவே இந்தியாவின் அழுத்தம் எங்களுக்கு கூடுதலாக வந்தது. ஆகையால் இந்த கச்சதீவை கொடுக்க வேண்டி வந்தது. அல்லது வரும்” என்ற கருத்தை கொண்டு வருவதற்காக இங்கே உள்ள சூத்திரதாரி இந்த வேலையை செய்து இருக்கின்றார் என்பதுதான் எனது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.