LOADING

Type to search

இலங்கை அரசியல்

கப்பலும் அமைச்சரும் தூதுவரும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

இந்த வாரம் சீனத் தூதுவர் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். நலிவுற்றவர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதியினருக்கு நிவாரணமும் வழங்கினார்.

குடிமக்கள் சமூகங்களை சேர்ந்தவர்களோடு ஜெட் விங் ஹோட்டலில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. சந்திப்பின்போது சீனா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. அரசாங்கத்தை ஆதரிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் சிங்கள பௌத்த மயமாக்கலையும் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று சிவில் சமூக பிரதிநிதிகள் எடுத்துக் கூறினார்கள். இலங்கை இனப்பிரச்சினைக்கு சீனா எப்படிப்பட்ட ஒரு தீர்வை முன்வைக்கின்றது என்றும் கேட்கப்பட்டது. அந்தத் தீர்வை சீனா தன்னுடைய உத்தியோகபூர்வ நிலைபாட்டாக வெளிப்படுத்துமா என்றும் கேட்கப்பட்டது

ஆனால் அவர் எல்லாவற்றுக்கும் ஒரு ரெடிமேட் பதிலை கூறினார். சீனா ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாது என்பதே அது. தாங்கள் இலங்கைத் தீவில் உள்ள மூன்று இனங்களையும் சமமாகப் பார்ப்பதாகவும், மூன்று இனங்களுக்கும் சமமாக உதவுவதாகவும் அவர் கூறினார். பெருந்தொற்று நோய்க் காலத்தில் சீனா தனது தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்கிய பொழுது, அவை குறிப்பாக வடக்கு கிழக்குக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் எப்படிப்பட்ட அபிவிருத்தி சார் பொருளாதார நடவடிக்கைகளில் சீனா ஈடுபடலாம் என்பதை அவர் ஆர்வமாக கேட்டார். அதே சமயம் சீனாவின் முதலீடுகளை வெளிநாடு ஒன்று தடுக்கிறது என்ற தொனியும் அவருடைய பதில்களில் காணப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனா கட்ட முயன்ற மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டத்தை இந்தியா தடுத்ததையும், யாழ் பல்கலைக்கழகத்தோடு இணைந்து சீனப் பல்கலைக்கழகம் முன்னெடுக்கவிருந்த சில புலமைச் செயற்பாடுகளை இந்தியா தடுத்தது என்பதையும் அவர் மறைமுகமாகக் கூறினார்.

ஆனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பகை இல்லை, நட்புதான் உண்டு என்றும்,தமிழ் மக்களுக்கு உதவும் விடயத்தில் சீனாவிடம் உள்நோக்கங்கள் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது என்றும் தெளிவாகச் சொன்னார்.

இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வை சீனா முன் வைக்கிறது என்பதனை கடைசிவரை கூறவே இல்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்திலும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு போன்ற விடயங்களில் சீனா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்ற வாக்குறுதி எதையும் அவர் வழங்கவும் இல்லை.

சீனத் தூதர் யாழ்ப்பாணம் வருவதற்கு சில நாட்களுக்கு முன் இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வடக்கு கிழக்கு வருகை தந்திருந்தார். அது ஓர் அரசு முறைப் பயணம் அல்ல என்று கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் வேட்டியணிந்து காணப்பட்டார்கள். இந்திய ராஜதந்திரிகள் வழமையாக அணியும் ஆடைகளோடு காணப்படவில்லை. நிர்மலா சீதாராமன் வடக்கிலும் கிழக்கிலும் பல பகுதிகளுக்கும் சென்றார்.

குறிப்பாக, தெற்கில் பௌத்த மகா நாயக்கர்களைச் சந்தித்தார்.அத்துடன்  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளை பலப்படுத்துவதற்கான செயல்திட்டங்களுக்காக 15 மில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஆவணங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறப்பட்டன.

கிழக்கில்,நிர்மலா சீதாராமன் திருக்கோணேஸ்வரம் சென்றார். திருக்கோனேஸ்வரத்தை புனரமைப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று அங்கு அவரைக் கண்ட இந்து மத அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஏற்கனவே திருக்கேதீஸ்வரத்தைப் புனரமைப்பதற்கு இந்தியா நிதி உதவி வழங்கியது போல திருக்கோணேஸ்வரத்துக்கும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.

யாழ்ப்பாணத்தில் அவர் நல்லூர் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கே அந்த கோவிலுக்கு வந்திருந்த தமிழ் மக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். வடக்கிலும் கிழக்கிலும் அவர் கோவில்களுக்கு விஜயம் செய்ததைத் தவிர அரசியல்வாதிகளைச் சந்திக்கவில்லை.

நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றது. அக்கப்பல் வரக்கூடாது என்று இந்தியா இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு முன்னரும் அப்படி ஒரு கப்பல் கடந்த ஆண்டு வந்தது. அதைத் தடுக்க இந்தியாவால் முடியவில்லை. இந்தக் கப்பலும் இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கைக்குள் நுழைந்தது. இங்கு அது சில நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டதாக சீனத் தூதரகம் கூறுகிறது. அது ஒரு ஆராய்ச்சி கப்பல் தான் என்றும் அது பலனாய்வு நடவடிக்கைகளுக்காக நாட்டுக்குள் வரவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். உலகில் எந்த ஒரு புலனாய்வுக்கப்பலும் புலனாய்வு நோக்கங்களுக்காகத்தான் ஒரு கடற்பரப்புக்குள் வருவதாக கூறிக்கொண்டு வருவதில்லை. அவை வர்த்தக நோக்கங்கள் அல்லது ஆராய்ச்சி நோக்கங்கள் போன்ற ஏதோ ஒரு மறைப்பின் கீழ் தான் ஒரு நாட்டின் கடற்பரப்புக்குள் நுழைகின்றன. ரணில் விக்கிரமசிங்க எதையோ மறைக்க முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. கடனை மீள கட்டமைப்பதற்கு சீனாவிடம் தங்கியிருக்கும் அவருக்குச் சீனக் கப்பல்களை உள்ளே வர விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

சீனக் கப்பல் வருவதற்கு சில நாட்களுக்கு முன், கடந்த மாதம் 18ம் திகதி இந்தியக் கடற்படைக் கப்பலான .என்.எஸ்.ஐராவட்INS ‘Airavat’- கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றது. இங்கு அது இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியது.அது ஏற்கனவே அரசுக்கும்அரசுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்படி நிகழ்ந்த வழமையான ஒரு வருகை என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் ஒரு சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வர இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது என்ன  தெரிகிறது? பிராந்தியத்தில் தமிழ் மக்களின் தாயகத்துக்குள்ள கவர்ச்சியை அது  காட்டுகிறதா?

வடக்கு கிழக்கில் தங்கள் நடவடிக்கைகளுக்கு பின் மறைவான நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது என்று சீன தூதுவர் கூறுகிறார். இலங்கைத் தீவில் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சீனா தன் முதலீடுகளை, உட்கட்டுமான விருத்தி, அபிவிருத்தி போன்ற தலைப்புகளின் கீழ் தான் முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அவை நீண்ட எதிர்காலத்தில் சீனாவின் பாதுகாப்பு இலக்குகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலானவை என்று மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன.

சிறிய இலங்கை தீவு அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய மூன்று பேரரசுகளின் நலன்களும் முட்டி மோதும் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரிடத்தில் அமைந்திருக்கின்றது.இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாகத்தான் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக துன்பப்படுகின்றார்கள். எல்லாப் பேரரசுகளும் தத்தமது நலன்களுக்கு ஏற்ப தமிழ் மக்களைக் கையாண்டு விட்டுப் போக பார்க்கின்றன.

குறிப்பாக அண்மையில் மாலை தீவுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா இலங்கை மீது தனது கவனத்தை அதிகம் குவிக்க விரும்பும். மாலை தீவுகளில் கடந்த செப்டம்பர் நடந்த பொதுத் தேர்தலில் சீனாவுக்கு சார்பான ஒரு தலைவர் வெற்றி பெற்றிருக்கிறார். “மாலதீவில் உள்ள இந்திய படைகளை வெளியேற்றுவோம்என்ற கோஷத்தோடு அவர் தேர்தலில் போட்டியிட்டார்.. 2008 ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக அங்கே சீனாவுக்கு சார்பான ஓர் எதேச்சாதிகாரி ஆட்சியில் இருந்தார். 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அத்தேர்தலில் இந்தியாவுக்குச் சார்பாக ஒரு தலைவர் வெற்றி பெற்றார்.அவர் இந்திய துருப்புக்களை நாட்டுக்குள் இறக்கினார். நாட்டின் கப்பல் கட்டும் துறைமுகங்களைக் கட்டியெழுப்புவதற்கே இந்தியத் துருப்புக்கள் வந்திருப்பதாக அவர் விளக்கமும் கொடுத்தார். துறைமுகங்கள் கட்டி முடிக்கப்பட்டதும் இந்தியத் துருப்புக்கள் வெளியே போய்விடும் என்றும் வாக்குறுதியளித்தார்.எனினும், இந்தியத் துருப்புக்களை வெளியேற்றுவோம் என்ற வாக்குறுதியை வழங்கிய, சீனாவுக்கு நெருக்கமான ஜனாதிபதி வேட்பாளர் கடந்த செப்டம்பர் மாதம் வெற்றி பெற்றிருக்கிறார்.

மாலை தீவுகளில் சீனா ஏற்கனவே பலமாகக் காலூன்றி விட்டது. இலங்கைத் தீவைப் போலவே மாலை தீவுகளும் சீனாவின் கடனாளிதான். இப்பொழுது மாலத்தீவுகளில் இந்தியாவின் பிடி ஒப்பீட்டளவில் தளர்ந்து போய்விட்டது. இந்நிலையில் இலங்கைத் தீவிலும் இந்தியாவின் பிடி பலமாக இல்லை என்பதைத்தான் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதிக்கப்பட்டமை உணர்த்துகின்றதா?

இப்படியாக இரண்டு பேரரசுகளும் இலங்கை மீதான தமது பிடியை பலப்படுத்த எத்தனிக்கும் ஒரு காலச் சூழலில் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? நிர்மலா சீதாராமன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை. சீனா ஜெனிவாவில் மிகத் தெளிவாக அரசாங்கத்தின் பக்கம் நிற்கின்றது. இந்நிலையில் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இந்த இரண்டு பேரரசுகளையும் கையாள்வதற்கு தேவையான உபாயங்களை வகுப்பது யார்