LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் முசலியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட மக்கள்.

Share

மன்னார் நிருபர்

10.11.2023

பாலஸ்தீனம் மற்றும் ஹாசா பகுதிகளில் இஸ்ரேல் படைகளினால் அப்பாவி பெண்கள் சிறுவர்கள் கொன்று குவிக்க படுவதற்கு எதிராகவும் இஸ்ரவேல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு எதிராகவும் வெள்ளிக்கிழமை (10-11-2023) மதியம் 1.30 மணியளவில் சிலாவத்துறை சுற்றுவட்ட பகுதியில் ஒன்று கூடிய முஸ்லிம் மக்களால் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் கொடூர யுத்தத்திற்கு எதிராக மௌனமாக இருக்கும் முஸ்லிம் நாடுகள் தங்கள் மெளனத்தை களைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் அதிக பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரியும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி சமாதானத்தை நிலை நாட்டுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை இல்லாமல் ஆக்கு,பாசிச இஸ்ரேலின் அடக்குமுறையை கண்டிப்போம்,சர்வதேசமே மனித படுகொலையை நிறுத்த சொல்,பாலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழ விடு, போர் குற்றம் புரியும் இஸ்ரேல் உன் போர் குற்றங்களை நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முசலி பகுதியை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் நிறுத்த வேண்டும் எனவும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரி இன்றைய தினம் முசலி பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.