LOADING

Type to search

கதிரோட்டடம்

50வது ஆண்டை பூர்த்தி செய்யும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினை ‘உடைத்தெறியும்’ நோக்கில் ‘சில’ நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் ஒன்றுகூடிய ‘சில’ ‘குழப்பவாதிகள்’

Share

கதிரோட்டம் 24-11-2023

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர். மறைந்த தமிழ் அறிஞரும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாகப் பாராட்டப்பெற்ற குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களே ஆவார்.

அவரது ஆழமான சிந்தனையும் இதயசுத்தியோடு இயங்கியும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை பண்பாடு என்னும் ‘தண்ணீர் ஊற்றி’ வளர்த்த பெருந்தன்மையும் இதுவரையில் ஒருவரிடத்திலும் நாம் கண்டதில்லை.

மலேசியா, கனடா. தென்னாபிரிக்கா. பிரான்ஸ், இலங்கை. இந்தியா. ஜேர்மனி போன்ற நாடுகளில் சிறப்பான முறையில் பண்பாட்டு மாநாடுகளை நடத்தி அவற்றை வெற்றிகரமாக பாராட்டுக்கள் குவிந்த விழாக்களாக நடத்துவதற்கு முன்னின்று உழைத்த பெருந்தகை ‘ஆவணக்காப்பக நாயகன்’ குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களையும் அவரோடு அவ்வப்போது சேர்ந்து உழைத்த உயர்ந்த இந்த இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர்களையும் நாம் இந்த நாளில் நினைத்துப் பார்க்கின்றோம்.

கனடாவில் 1996ம் ஆண்டு பிரமாண்டமான முறையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டை நடத்திய மறைந்த தலைவர் செல்லையா அவர்கள் தொடக்கம் பின்னர் தொடர்ச்சியாக தலைமைப் பதவிகளை வகித்த அன்பர்களையும் அவற்றிலும் மேலாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகமாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் அவர்களையும் நாம் போற்றி மகிழ்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து தற்போதைய தலைவராக உள்ள திரு வினாசித்தம்பி துரைராஜா அவர்களின் முயற்சியால் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகரிக்கப்பட் அமைப்பாக முக்கியத்துவத்தை பெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை பயன்படுத்தி சில ‘புல்லுருவிகள்’ கனடாவிலும்; சதித் திடடங்களைத் தீட்டினார்கள். அவர்களில் சிலர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டார்கள்.

இவற்றையெல்லாம் முறியடித்து திரு வினாசித்தம்பி துரைராஜா அவர்களும் திரு சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் தீவிரமாகச் செயற்பட்டு செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் அவர்களின் பக்கத்துணையோடு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தனித்துவத்தையும் சிறப்பை பாதுகாத்தனர்.மிகுந்த பொருட்செலவில் இயக்கத்தின் ‘இலட்சனை’ மற்றும் பெயர் ஆகியவற்றை பாதுகாத்து கனடாவில் இயங்கும் தலைமையகக் குழுவிடம் ஒப்படைத்தார்கள்.

இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதாகும். எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிக்கும் உன்னத இயக்கமாகவும் மேலும் உலகின் பல நாடுகளிலும் தலைமைகத்தின் அங்கீகாரத்தோடு கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை ‘உடைத்தெறியும்’ நோக்கோடு தமிழ்நாட்டில் மாநாடு என்ற பெயரில் சிறு சிறு கூட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு அரசாங்கத்தையும் அறிஞர் பெருமக்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் இந்த ‘போலிகளை’ இனங்கண்டு ஓதுக்க வேண்டும் என்ற குரலாக எமது இவ்வாரக் கதிரோட்டம் உங்களுக்காய் படைக்கப்படுகின்றது. இந்தச் செய்தி தமிழர் வாழும் நாடுகளில் இயங்கிவரும் ஊடக நிறுவனங்களின் பார்வைக்கும் சென்றடைய வேண்டும் என்றும் எண்ணுகின்றோம்.!