LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண நீதிமன்றங்களின் வரலாற்றில் ஒரு எழுச்சி!

Share

சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் நலன்களை கவனிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜர்!

நீதிவான் வழங்கிய சில கட்டளைகளின் முடிவிலே ஐவரை கைது செய்யுமாறு உத்தரவு!

பு.கஜிந்தன்

சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் ஐவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

இறந்தவரின் நலன்களை கவனிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இன்றையதினம் ஆஜராகி இருந்தனர். சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தின் பேரிலே அதாவது இன்றையதினம் சாட்சியமளித்த ஐந்து சாட்சிகளிலே மூன்றாவது சாட்சியாக சாட்சியமளித்த நபர் இறந்தவர்களுடன் சமகாலத்தில் தானும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறியிருப்பதன் அடிப்படையிலேயே அவரின் சாட்சியங்களின் அடிப்படையில் அவரால் கூறப்பட்ட இரண்டு பொலிஸ் அலுவலர்களை கைது செய்து நீதிமன்றம் முன்னாலே முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மாண்புமிகு நீதிமன்றம் இன்றையதினம் கட்டளையிட்டது.

மேலும் இந்த சாட்சி தனது வாக்குமூலத்திலே தான் பொலிஸ் நிலையத்திற்கு வெளியிலே சில இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் அந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று அந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்கும், விஞ்ஞானபூர்வமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்குமாக கட்டளை ஒன்றை ஆக்குமாறு இன்றையதினம் பொலிஸ் தரப்பில் ஆஜராகியிருத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இளங்கக்கோன் விண்ணப்பம் செய்ததன் பேரிலே அதற்கான கட்டளையும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் இவ்விதம் அனைத்து செல்லப்படுகின்ற பொழுது அவருடைய நலன்களை உத்திரவாதப்படுத்துவதற்கு சட்டத்தரணிகளால் பெயர் குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகள் அவருடன் கூடச் செல்வதற்கு மாண்புமிகு நீதிமன்ற அனுமதி வழங்கி உள்ளது.

இதைவிட குறித்த சாட்சியினாலே அங்க அடையாளங்கள் விவரமாக குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் விவரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிமன்ற கட்டளை வழங்கியுள்ளது.

இதைவிட இன்றையதினம் மன்றுக்கு வந்து சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி அவர்கள் தன்னுடைய சாட்சியத்திலே இறந்தவருடைய உடலில் காணப்பட்ட காயங்களை விவரித்ததோடு அந்த காயங்கள் தொடர்பான தன்னுடைய அபிப்பிராயத்தையும், காயங்கள் மூலமாகத்தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்பதனையும், மரணம் ஏற்படுவதற்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது தான் பிரதான காரணமாகவும் இருந்தது கூறி இருக்கின்றார்.

இது ஒரு உயர் மனித உயிர் போக்கல் அல்லது மனித ஆட்கொலை என்ற அபிப்பிராயத்தை கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்றும் நீதிமன்று சுட்டி காட்டி இருக்கிறது.

மேலும் இந்த இரண்டு பொலிஸ் அலுவலர்களும், கடந்த காலங்களிலே சில வழக்குகளிலே நிகழ்ந்ததைப் போல ஒருவேளை இன்றைய மரண விசாரணை நடவடிக்கைகளின் பின்னணியிலே நாட்டை விட்டு செல்ல கூடும் என்ற அச்சத்தினை சட்டத்தரணிகள் வெளிப்படுத்தி அவர்களுக்கு பிரயாணத் தடை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாத விதத்திலே பிரயாண தடையினை பொலிஸ் துறை நடைமுறைப்படுத்த முடியும் என்று மாண்புமிகு நீதிமன்றம் கூறியது. அதற்கான மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவாதத்தினை வழங்கியுள்ளார்.

மேலும் தாங்கள் மேற்கொண்டுள்ள உள்ளக விசாரணைகளின் அடிப்படையிலே நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இன்றைய சாட்சியத்திலே மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் அங்க அடையாளங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைய நடவடிக்கையிலேயே யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நீதிமன்றங்களில் கடமையாற்றும் எல்லாமாக 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இந்த வழக்கில் கலந்து கொண்டு தங்களது சமூக கடமையை ஆற்றி இருக்கின்றார்கள்.

மரணவிசாரணை சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தின் பேரிலே தொடர்ந்து விரைவாக இடம்பெறுவதற்கு ஏதுவாக எதிர்வரும் திங்கள்கிழமை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.