LOADING

Type to search

இலங்கை அரசியல்

கனடா உதயன் பத்திரிகைக்கு போட்டியாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்ப்பாண உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு கடுமையான விசாரணை!

Share

பு.கஜிந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான இன்று (27) பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் 4 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியான “உதயன்” பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளியான செய்தி தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் பத்திரிகை ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களால் மாவீரர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், “உதயன்” பத்திரிகை ஆசிரியர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை 9 மணிக்கு அழைக்கப்பட்ட “உதயன்” பத்திரிகை ஆசிரியரிடம் பிற்பகல் ஒரு மணிவரையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டதுடன், வாக்குமூலமும் பதிவு செய்தனர்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியான “உதயன்” பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தி, அவரது ஒளிப்படத்துடனும், மறுநாள் நடைபெறவிருந்த மாவீரர் நாள் அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கும் செய்தி ஒன்றும் வெளியாகியிருந்தன. இவை தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக ஏற்கனவே யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் ஒரு செயற்பாடாகவே இது நோக்கப்படுகின்றது.