LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்றத்தின் 10வது அமர்வு ..

Share

இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் அங்கு ஓங்கி ஒலித்தது

(கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் )

கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்துள்ள அரச நூதன சாலை மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 1ம் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்றத்தின் 10வது அமர்வும் அரசாங்கத்தின் மூதவை உறுப்பினர்களின் அமர்வும் நேர்த்தியான முறையிலும் திட்டமிட்டட வகையிலும் பயனுள்ள உரைகளைக் கொண்டவையாகவும் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அந்த அமர்வில் இடம்பெற்ற சிறப்பு விருந்தினர்களின் உரைகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பெற்ற உரைகளாகவும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த வலிகள் துன்பங்கள் ஆகியவற்றுக்கு பதில் சொல்லும் வகையில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டு வகையில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து தரப்பினரும் கூட்டாக செயற்பட வேண்டும் என்றும் இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் அங்கு ஓங்கி ஒலித்தது என்றே கூற வேண்டும்.
அன்றை அமர்வின் ஆரம்பத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகர் திருமதி முருகதாஸ் அமர்விற்கு தலைமை தாங்கும் வண்ணம் அழைக்கப்பெற்றார்.

தொடர்ந்து அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் கனடாவில் சிறப்பாக செயற்பட்டு வருபவருமான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழ்த் தேசியத்தின் மீதும் தாயகத் தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத்தரவும் அரசியல் ரீதியாகவும் ஜனநாயக வழியிலும் இந்த அமைப்பில் இணைந்து செயற்பட்டு வருகின்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அனைவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து நாடு கடந்த அரசாங்கம் என்ற அமைப்பின் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர்களும் அமெரிக்காவில் வாழும் சட்டத்தரணிகளுமான திருவாளர் ரொபேர்ட் அவெட்டிஸ்யன் -Mr. Robert Avertisyan-மற்றும் அசோக் அரோரா -Mr. Ashok Arora- மற்றும் கனடா வாழ் பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினார்கள். அவர்களின் உரைகள் அனைத்தும் இணையவழி ஊடாக நூற்றுக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்தது என்றால் அது மிகையாகாது. அவர்கள் தமது உரைகளை இதயசுத்தியோடு வழங்கினார்கள் என்பதை பார்வையாளர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூதவை உறுப்பினர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவ்வாறு விரிவு படுத்துவது மற்றும் அங்கத்தவர்களின் தொகையை அதிகரித்து செயற்படுவது. மற்றும் தாயகத்தில் உதவிகள் தேவைப்படும் பொது மக்கள். முன்னாள் போராளிகள். அவர்களின் குடும்பங்கள் போன்றவற்றிக்கு வழங்க வேண்டிய உதவிகள் ஆகியவை தொடர்பாகவும் ஆராயப்பட்டன. அந்த கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் அனைத்து உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.