அகவை எண்பது காணும் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்
Share
குரு அரவிந்தன்
சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், அதைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, பேராதனை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்றவர். கனடாவில் ரொறன்ரோ வர்த்தகக் கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு ‘பிரயாணமும் உல்லாசப் பயணமும்’ என்னும் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.
இலங்கையின் மலையகத்தில் உள்ள பதுளை, நுவரெலியா, பண்டாரவளை மாவட்டங்களில் சமூகக்கல்வி பாடசேவைக்கால ஆலோசகராகவும், பாடவிதான அபிவிருத்தி சபையில் நூலாக்கக் குழுவிலும், ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் சமூகக் கல்வி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவியல் அரங்கக் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் மல்லிகை, வீரகேசரி, தினபதி, ஈழநாடு, தினக்குரல் ஆகிய ஊடகங்களில் கல்வி, புவியியல் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனவழிப்பு நடவடிக்கை காரணமாகத் தனது குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி, 1985 ஆம் ஆண்டு கனடா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். கனடாவின் மொன்றியலில் தமிழர் ஒளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இவர், இளங்கீற்று, தமிழ் ஒளி சஞ்சிகைகளில் இலக்கியப் பங்களிப்பும் செய்தார். சிறந்ததொரு உரையாளர் என்பதால், வான்தென்றல் வானொலியில் நிகழ்சிகளையும் செய்துள்ளார்.
ரொறன்ரோவில் ரேடியோ ஏசியா, கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கீதவாணி வானொலி, கனடியத் தமிழ் வானொலி போன்றவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார். தமிழருவி, நம்நாடு, ஈழநாடு, தமிழோசை, சுதந்திரன், முழக்கம், தமிழர் செந்தாமரை, தாய்வீடு, விளம்பரம், உதயன், மொன்சூன் ஜெர்னல் போன்ற பத்திரிகைளிலும், தமிழர் தகவல், தூறல், தளிர் ஆகிய சஞ்சிகைகளிலும் பல்துறை ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். இவர் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் அவ்வப்போது எழுதிய தனது கட்டுரைகளைச் ‘சிந்தனைப்பூக்கள்’ என்ற பெயரில் 5 பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ள இவர், உளவியல் மருத்துவத்துறையில் பல பெறுமதி வாய்ந்த கட்டுரைகளை எழுதி வருகின்றார். 2016 ஆம் ஆண்டு லண்டன் பத்திரிகை நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியிலும் முதலிடம் பெற்றுள்ளார். ஒன்ராரியோவில் தொண்டர் சேவைக்கான பல விருதுகளையும், , 2022 ஆம் ஆண்டு கனடா உதயன் பத்திரிகையின் தமிழ் இலக்கிய மேன்மை விருதையும் 2000 ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கிய சேவை விருதையும் பெற்றவர்.
15 வருடங்களுக்கான ஒன்ராறியோ தொண்டர் விருது, இலங்கை சமூக முன்னேற்றக் கழக சமாசத்தின் ‘வித்யாஜோதி’ விருது, தூறல் சஞ்சிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கனடா எழுத்தாளர் இணையத்தின் இலக்கியவிருது, தமிழர் சேவை நிறுவனத்தின் ‘பென்மனச் செல்வர்’ விருது, சர்வதேச தமிழ் கலாச்சாரவிருது – ஒன்ராறியோ, போன்ற விருதுகளைப் பெற்ற இவர், கௌரவ டோலி பேகம், ஸ்காபரோ தென்மேற்கு மாகாண ஆட்சிமன்ற உறுப்பினரால் ‘தமிழ் இலக்கிய, சமூகசேவை விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் காப்பாளராக இருக்கும் திரு. எஸ். பத்மநாதன் அவர்களுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், ‘ஒருவரை வாழும்போதே கௌரவிக்கும்’ சிறந்த நோக்கத்தோடு, இவ்வருடம் 28-10-2023 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்துக் கௌரவம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரு. எஸ். பத்தமநாதன் தம்பதியினர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் மேலும் சிறப்பான பங்களிப்பு ஆற்ற வேண்டும் என்றும், கனடிய இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக நாங்களும் வாழ்த்துகின்றோம். வாழ்க நீடூழி!