LOADING

Type to search

இலங்கை அரசியல்

இமாலயாப் பிரகடனம் யாருக்கு? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

கடந்த சில வாரங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் தமது தாயக அரசியலில் தாக்கத்தை செலுத்தும் நோக்கத்தோடு,சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.இதில் முதலாவது, ஒஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சிலர் அமெரிக்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களோடு இணைந்து புதுடெல்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள்.இச்சந்திப்புக்களில் தாயகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத்தின் தலைவரும் சென்றிருக்கிறார்கள். இவர்களை இந்திய ஆளும் கட்சியாகிய பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தர்கள் சிலரும் பாரதிய ஜனதாவின் இதயம் என்று கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சிலரும் சந்தித்திருப்பதாக தகவல்.

மேலும், டெல்லியில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் கூட்டிச் செல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஈழம் தொடர்பாக ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. “ரத்தம் சிந்தும் ஈழம்என்பது அந்நூலின் தலைப்பு ஆகும்.

மேற்படி சந்திப்புகளின் போது தாயகத்திலிருந்து சென்றவர்கள் சில விடயங்களை இந்தியத் தரப்புக்குத் தெரிவித்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு பொது ஜன வாக்கெடுப்பு தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்பதும் இந்திய இலங்கை உடன்படிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதும் தற்பொழுது நிகழும் சிங்கள பௌத்த மயமாக்கல், நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் அவற்றுள் முக்கியமானவை.

அவர்களைச் சந்தித்த இந்தியத் தரப்பு சில விடயங்களை உணர்த்தியிருக்கின்றது.ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு இந்தியா விரும்பாது என்பது முதலாவது விடயம்.இரண்டாவது விடயம்,தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு ஒரே குரலில் பேச வேண்டும் என்பது.

தாயகத்திலிருந்து சென்ற குழுவைப் பொறுத்தவரையிலும் அவர்கள் ஒரே நிலைப்பாட்டை கொண்டவர்கள் அல்ல.தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இருவரும் சமஸ்டிக் கோரிக்கையை முன் வைப்பவர்கள்.விக்னேஸ்வரன் அதைவிட உயர்வான அமெரிக்காவில் உள்ளது போன்ற confederation என்ற தீர்வை முன் வைத்தாலும்,இடைக்கால ஏற்பாடாக,13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார். மூன்றாவது, சிவாஜி லிங்கமும் ஆதீன முதல்வரும். இருவரும் பொதுஜன வாக்கெடுப்பைக் கேட்பவர்கள். இவ்வாறு தாயகத்தில் இருந்து சென்ற அணி மூன்று வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் சில விடயங்களை ஒரே குரலில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இச்சந்திப்பு நடந்த குறுகிய கால இடைவெளிக்குள மற்றொரு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பாகிய உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு கொழும்புக்கு வருகை தந்தது.இவர்கள் அங்கே பௌத்த மத பிடாதிபதிகளோடு உரையாடி ,அவர்களிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்ட பின் அரசாங்கத்தையும் சந்தித்திருக்கிறார்கள். சந்திப்பின்போது ஒரு முக்கியமான விடயம் வெளியே வந்தது. அதுதான்இமாலயா பிரகடனம்.”அது என்ன இமாலயா பிரகடனம்? நேபாளத்தின் தலைநகராகிய காட்மண்டுவில் நடந்த ஒரு சந்திப்பின் பின், உலகத்தமிழர் பேரவையும் பிக்குகளும் இணங்கிக்கொண்ட விடயங்கள்  அந்தப் பிரகடனத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையிலிருந்து பௌத்த மத பீடங்களை சேர்ந்த குறிப்பாக முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட பிக்குகள் நேபாளத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோடு உரையாடி இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் சில உடன்பாட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.இவ்வாறு சென்ற பௌத்த மதத் தூதுக் குழுவானது தமது உயர் மட்டத்திற்கு விடையங்களைத் தெரிவித்து விட்டுத்தான் நேபாளத்துக்கு சென்றதா என்பது தெரியவில்லை. அத்தூதுக்குழுவில் இடம்பெற்றவர்கள் கடுமையான இனவாத போக்கு இல்லாத முற்போக்கு பண்பு நிறைந்த பிக்குகள் என்று கூறப்படுகின்றது. இவர்களோடு இணைந்து ஒரு பிரகடனத்தை தயாரித்த பின்,உலகத் தமிழர் பேரவையானது கொழும்பிற்கு வருகை தந்திருக்கிறது.

முதலில் ஜனாதிபதியைச் சந்தித்த அக்குழுவினர் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்குக்கும் விஜயம் செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் அக்குழு குடிமக்கள் சமூகத்தை சந்தித்திருக்கிறது.

உலகத் தமிழர் பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், பௌத்த பீடாதிபதிகள் தமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவின் அரசியலைப் பொறுத்தவரையிலும் பௌத்த மகா சங்கங்கள் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பௌத்தம் ஓர் அரசமதம். அதற்கு யாப்பில் முக்கிய இடம் உண்டு. பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை தீவின் யாப்பு கூறுகின்றது. மேலும் கடந்த காலங்களில் இலங்கைத்தீவில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் மகா சங்கத்தினர் குழப்பியிருக்கிறார்கள். இப்பொழுதும் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கூடாது என்று கேட்டு ஒரு பகுதி மகா சங்கத்தினர் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்கள்.

இவ்வாறான ஓர் அரசியல் பின்னணியில்,இலங்கைத்  தீவின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்று ஆகிய பௌத்த மகா சங்கத்தோடு உரையாட வேண்டும் என்பதில் சந்தேகம் கிடையாது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்த பின் அவ்வாறு ஒரு முயற்சியை முன்னெடுத்தார்.ஆனால் அம்முயற்சி எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.ஒரு பௌத்த பீடத்தைச் சேர்ந்தவர் அவரை உபசரித்து உரையாடினார். இன்னொரு பௌத்த பீடத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு உயரம் குறைந்த சிறிய ஆசனம் ஒன்றைக் கொடுத்து அவமதித்ததாக ஒரு தகவல். அதன்பின் பௌத்த மகா சங்கத்தைச் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. இப்படிப்பட்டதோர் மத, அரசியற் சூழலில்தான் உலகத் தமிழர் பேரவை மேற்படி பிரகடனத்தைத் தயாரித்திருக்கிறது.

ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால், உலகத் தமிழர் பேரவையானது இதுதொடர்பாக தாயகத்தில் உள்ள கட்சிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் குடிமக்கள் சமூகங்களோடு ஏன் முன்கூட்டியே கலந்து பேசி ஒரு முடிவை எடுக்கவில்லை? என்பதுதான்.

உலகத் தமிழர் பேரவை மட்டுமல்ல,அவுஸ்திரேலியாவில் இருந்து டெல்லிச் சந்திப்புகளை ஒழுங்குபடுத்திய செயற்பாட்டாளர்களும் அதுதொடர்பாக தாயகத்தில் உள்ள கட்சிகளையும் குடிமக்கள் சமூகங்களையும் கலந்து பேசியதாகத் தெரியவில்லை.அதிலும் குறிப்பாக, உலகத் தமிழர் பேரவையானது ஏற்கனவே சுமந்திரனுக்கு நெருக்கமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை அவர்கள் சுமந்திரனை சந்தித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவரவில்லை.அரசியல்வாதிகளைச் சந்திப்பதை விடவும் குடிமக்கள் சமூகங்களையும் மதப் பிரிவினரையும் சந்திப்பதில்தான் அவர்கள் அதிகம் அக்கறை காட்டியதாகத் தெரிய வருகிறது.

புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் தாயகத்தின் அரசியலில் ஏதோ ஒரு தாக்கத்தை செலுத்த முற்படுகிறார்கள் என்று தெரிகிறது. அது ஒரு யதார்த்தம். ஏனெனில், ஈழத் தமிழ் அரசியல் சமூகம் என்று பார்க்கும் பொழுது அதற்குள் புலம்பெயர்ந்த தமிழர்களும் வருகிறார்கள். குறிப்பாக, முதலாம் தலைமுறை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தை விட்டுப் பிரிந்த ஏக்கத்தோடு தாயகத்தின் அரசியலில் ஏதோ ஒரு விதத்தில் தலையீடு செய்ய முற்படுகிறார்கள். அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் இங்கே பிரச்சினை எதில் வருகிறது என்றால்,புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கும் இடையே ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்கத்தக்க கட்டமைப்புகள் எதையும் இல்லை என்பதுதான். அதாவது ஒருமித்த முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.

இது இந்தியாவைக் கையாளும் விடயத்திலும் சரி, மகா சங்கத்தைக் கையாளும் விடயத்திலும் சரி,ஐநா மனித உரிமைகள் பேரவையைக் கையாளும் விடையத்திலும் சரி, அமெரிக்காவைக் கையாலும் விடயத்திலும் சரி, எங்கேயும் ஒருமித்த நிலைப்பாடும் ஒன்றிணைந்த செயல்பாடும் கிடையாது.

இந்தியாவுக்கு தாயகத்திலிருந்து ஒரு குழுவை அழைத்த புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்கள், அந்தக் குழுவை எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள்? இது முதலாவது கேள்வி.அந்தக் குழு தாயகத்தில் உள்ள எல்லாத் தரப்புகளையும் பிரதிநிதித்துவப் படுத்தியதா? இது இரண்டாவது கேள்வி.அந்தக் குழுவானது தாயகத்தில் தனக்கிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருந்ததா? இது மூன்றாவது கேள்வி. அப்படித்தான் பௌத்த மகா சங்கத்தை அணுகும் விடயத்திலும் உலகத்தமிழர் பேரவையானது அது தொடர்பாக தாயகத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களோடும் குடிமக்கள் சமூகங்களோடும் உரையாடியதா? குறைந்தபட்சம் தாயகத்தில் உள்ள மதத் தலைவர்களோடு உரையாடியதா?

மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தைச் சந்தித்த பொழுது அச்சந்திப்பில் சிவ பூமி அறக்கட்டளையின் தலைவரான ஆறு திருமுருகனும் கலந்து கொண்டார். அவர் அங்கே உரை நிகழ்த்தியபோது, உங்களை எனக்குத் தெரியாது என்று கூறினார். அதாவது மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு அவரை அதற்கு முன் சந்தித்திருக்கவில்லை.

அதுபோலவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராகிய கஜேந்திரக்குமாரை சந்திப்பதற்கு உலகத்தமிழர் பேரவை முயற்சித்திருக்கின்றது.அது தொடர்பாக முகநூலில் அவர்கள் விடுத்த அழைப்பும் அதற்குக்கே கஜேந்திரக்குமார் வழங்கிய பதிலும் வெளிவந்திருக்கின்றன.அதில் கஜேந்திரக்குமார் உலகத் தமிழர் அமைப்பை விமர்சித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மாவீரர் நாளை அனுஷ்டிக்க விடாமல் தடுத்த ஓர் அரசாங்கத்துக்கு நீங்கள் வெள்ளை அடிக்க முற்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை கஜேந்திரகுமார் ஏற்றுக் கொள்வதில்லை.அவை அவர்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக அவர் ஒருமுறை குற்றம் சாட்டியிருந்தார். அந்த அமைப்புக்கள் அவரோடு தொடர்பு கொள்ள முயற்சித்த போதெல்லாம் அவர் அதனைத் தவிர்த்தும் வந்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோடு மட்டுமல்ல, தாயகத்திலும் சக கட்சிகளோடு கஜேந்திர குமாருக்குள்ள உறவு பலவீனமானதுதான். அந்த ஒரு கட்சி எதிர்ப்பதை வைத்து அதையே ஏனைய கட்சிகளின் நிலைப்பாடாக எடுக்கத் தேவையில்லை என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். உண்மைதான்.ஆனால்,அடுத்த ஆண்டு ஒரு ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கின்றது.ரணில் விக்கிரமசிங்க ஐநாவை ஏமாற்றுவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க முயற்சிக்கின்றார். நாடு பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியில் தங்கியிருக்கின்றது.

இப்படிப்பட்டதோர் அரசியல் பொருளாதாரச் சூழலில், அரசாங்கம் சிங்கள பௌத்த மயமாக்கலையும் நிலப் பறிப்பையும் முடுக்கி விட்டுள்ளது. அதாவது பன்னாட்டு நாணய நிதியாத்தாலோ அல்லது ஐநாவாலோ அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத்  தடுத்து நிறுத்த முடியவில்லை.

இப்படிப்பட்டதோர் அரசியற் பொருளாதாரப் பின்னணியில், தாயகத்தில் உள்ள தரப்புகளைக் கலந்தாலோசிக்காமல் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் தனியோட்டம் ஓடுவது தொடர்பில் கஜேந்திரக்குமார் முன்வைக்கும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மேற்படி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு உண்டு.