மாந்தை மேற்கில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க நடவடிக்கை.
Share
(மன்னார் நிருபர்)
(19-12-2023)
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பாதிப்பினால் பாதிக்கப்பட்டு 3 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 427 நபர்கள் பாதிக்கப்பட்டு மூன்று இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க மெசிடோ நிறுவனம் முன் வந்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை குறித்த இடைத்தங்கல் முகாம்களுக்கு மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டதோடு முதல் கட்டமாக குழந்தைகளுக்கான பிஸ்கட் மற்றும் பால்மா போன்றவற்றை வழங்கி வைத்துள்ளதோடு,முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.