இலங்கையின் மன நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை
Share
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்று கூறுகிறது. மன நோயாளிகளும் அளிக்கும் படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவத்தைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.
மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் இடைக்கால அறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி அன்று வெளியானது.
அந்த இடைக்கால அறிக்கையில் மனநலம் தொடர்பில் நாட்டில் புதிய சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மனநல நிறுவனத்தில் ஊழியர்களின் தவறான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில் , அந்த ஆணையத்திற்கு கிடைக்கப்பற்ற முக்கிய முறைப்பாடுகளை அடுத்தே அவர்களின் இந்த கவலையும் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
அவர்களது கண்டுபிடிப்பில் சில விடயங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் நோயாளிகளை இழிவுபடுத்தும்வகையில் இருந்துள்ளது. கண்காணிப்பு கமராக்கள் இல்லாத இடங்களில் ஊழியர்கள் நோயாளிகளை அடிப்பது போன்ற முறைப்பாடுகள் அந்த ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதுமாத்திரமின்றி ஊழியர் ஒருவரின் நடவடிக்கை காரணமாக நோயாளி ஒருவர் உயிரழந்ததும் அவர்களது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம், மன நோயாளிகளில் நலன் மற்றும் சுதந்திரம் குறித்து முன்னெடுத்த உண்மையை கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அறிக்கை வந்துள்ளது.
இதையடுத்து அந்த ஆணையம் சுகாதார அமைச்சு, தேசிய மனநல நிறுவனம், இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விடுத்துள்ளது.
“சர்வதேச மருத்துவ தரம் மற்றும் அரசின் மனித உரிமைக் கடப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனநலச் சட்டம் ஒன்று இயற்ற்ப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது.
பதினோரு பக்கங்கள் கொண்ட விரிவான இந்த ஆவணம் அந்த ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது பொதுவெளியிலும் வெளியானது.
குறிப்பிடத்தக்க கவலைகள் என்று அந்த ஆணையம் கூறுவது தொடர்பில், மனநல நோயாளிகளின் புனர்வாழ்வு காலத்தில் அரசு அவர்களின் நல்வாழ்வு பேணப்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணையம் எழுப்பியுள்ள கவலைகளில், நோயாளிக்கான தண்ணீர் வசதிகள், உணவு, இடவசதி, மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை மற்றும் அதை அளிப்பவர்களின் நடவடிக்கை ஆகிய விடயங்கள் பிரதானமாக உள்ளடங்கியுள்ளன. மன நோயாளிகளின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை எழுப்பியுள்ள அதே வேளை ‘பல சமயங்களில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் அவர்களுக்கு மருத்துவம் அளிக்கின்றனர்’ என்று
“ஆண் நோயாளிகள் தங்கியுள்ள பிரிவுகளில் பெருபான்மையாக பெண் தாதியரே உள்ளனர், அந்த சமயத்தில் நோயாளிகளின் பராமரிப்பு என்பது உரிய பயிற்சி இல்லாத உபசேவகர்கள் மூலமே செய்யப்படுகிறது. எனவே நோயாளிகளின் பராமரிப்பு எந்தளவிற்கு காத்திரமாக உள்ளது என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பெரும்பாலான நேரங்களில் உபசேவகர்கள் நோயாளிகளை கையாள்வதில் நிலவும் வழிகாட்டல்களை ஏற்று நடக்க மறுக்கின்றனர்”.
முறையாக நிர்வகிக்கப்படாத சிக்ச்சைக்கு அப்பாற்பட்டு, மாற்று மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படியான மாற்று சிகிச்சை முறைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
“மருத்துவம் அளிப்பதிலுள்ள குறைபாடுகள் தொடரும் அதேவேளை, தேசிய மனநல நிறுவனத்தில் பல மருந்துகள் தரமில்லாமலும் இருந்துள்ளன. அந்த மருந்துகள் கையிருப்பில் இல்லாத போது, சிகிச்சைக்கு மாற்று வழிமுறைகள் கையாளப்படுகின்றன. எனினும், உயர்தர மருந்துகள் கையிருப்பில் இல்லாத நிலையில், இப்படியான மாற்று மருத்துவ வழிமுறைகளில் கூடுதலான பக்கவிளைவுகள் உள்ளன”.
இவை மட்டுமின்றி மனநல நோயாளிகளுகான மருத்துவ சிகிச்சைக் கட்டணமும் கவலையை ஏற்படுத்தி நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்ந்த கட்டணம் காரணமாக, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட நோயாளிகள் மருந்துகளை வாங்க சிரமப்படுவதால், அவர்கள் மீண்டும் நோய்வாய்ப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் சூழல் ஏற்படுகிறது.
தண்ணீர் வசதி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் முக்கியமான கவலைகளாக அந்த ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மன நோயாளிகள் அறியாமல் தமது உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை அழுக்காகிவிடக் கூடும், அதை உடனடியாக சுத்தம் செய்ய தடையில்லா தண்ணீர் விநியோகம் தேவை. இந்த ‘தொடர்ச்சியான தண்ணீர் விநியோகம்’ தேசிய மனநல நிறுவனத்தில் சீராக இல்லாது மட்டுமின்றி அவர்களின் தண்ணீரை சேமித்து வைக்க வசதியும் இல்லை. அது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது, அதிலும் குறிப்பாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் போது அது மேலும் சிக்கலாகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
தொடர்ச்சியாக தண்ணீர் வசதி இல்லாதொரு சூழலுக்கு அப்பாற்பட்டு, நுளம்புக்கடியிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதும் தேசிய மனநல நிறுவனத்தில் சவாலாக உள்ளது. தற்கொலை அபாயம் காரணமாக நுளம்புவலைகள் பயன்படுத்தப்படுவதில்லை.
“முன்னர் நுளம்பு மருந்து அடிப்பது போன்ற தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டாலும், இப்போது அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல் தடையவியல் பிரிவில் மூட்டைப்பூச்சிகளின் இருப்பும் தொடரும் ஒரு பிரச்சனையாக உள்ளது”.
மனநோயாளிகளை சமாளிப்பதிலும் அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதிலும் மொழிப் பிரசனை ஒரு பெரும் தடங்கலாக உள்ளது. தேசிய மனநல நிறுவனத்திலுள்ள பெரும்பாலான ஊழியர்கள் தமிழ் பேசும் நோயாளிகளிடம் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகிறது. நோயாளிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள முயன்றாலும், தொடர்பாடல் பிரச்சனைகள் நிலவுகின்றன என்று கூறும் அந்த ஆணையம் இப்போது வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் ஊழியர்களுக்கான தமிழ் மொழிப் பயிற்சி அளிப்பதையும் பரிந்துரை செய்துள்ளது.
தேசிய மனநல நிறுவனம் இதர நோயாளிகளிடம் உதவி கோரும் அதே வேளை, உபசேவகர்கள் ‘கூகிள் மொழிபெயர்ப்பு’ போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த ஆணையம், “எனினும் நோயாளிகன் தேவைகளை துல்லியமாக அறிந்துகொள்ள அவர்களால் முடியுமா என்பது தெளிவாக இல்லை” என்றும் கூறியுள்ளது.
மன நோயாளிகளை கையாள்வதில் இப்படியான சவால்கள் இருக்கும் சூழலில், இலங்கையில் ’புதிய மன்நல மருத்துவச் சட்டம்’ ஒன்று தேவை என்றும் அச்சட்டம் சர்வதேச மருத்துவ தரத்திற்கு அமைவாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் இலங்கையின் சுகாதார அமைச்சிற்கான முன்னுரிமை வழிகாட்டலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கொடையிலுள்ள தேசிய மனநல நிறுவனத்திலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பிலும் அந்த வழிகாட்டல்கள் கவனம் செலுத்தியுள்ளன. இலங்கையிலேயே மனநல மருத்துவத்திற்கான மிகப்பெரிய மையமாக அங்கொட மருத்துவமனை உள்ளது என்றும் அங்கேயே அதிகப்படியானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.
தேசிய மனநல நிறுவனத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மேம்பட்ட உணவு வழங்கல் மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகளை அமல்படுத்துவது ஆகியவையும் மனித உரிமைகள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விடுத்துள்ள விழிகாட்டல்களின் ஒரு பகுதியாக அந்த மருத்துவமனையில் பொலிஸ் காவல் மையம் ஒன்றையும், மனநோய் உள்ள சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக்காவலர்கள் அங்கொட மருத்துவமனையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.