மன்னார் மாவட்டத்தின் இவ் வருடத்திற்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் – பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு.
Share
(மன்னார் நிருபர்)
(29-12-2023)
மன்னார் மாவட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் -மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம்,கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.எனினும் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் ,பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
குறித்த கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு திட்டங்கள் சில சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைத்து வருகின்றமை மற்றும் சட்ட விரோதமாக காணிகள் அபகரிப்பு, சட்ட விரோத மரம் வெட்டபடுகின்றமை குறித்தும்,எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் நானாட்டான் பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரவை தொடர்பாக ஆராயப்பட்டது.
நானாட்டான் புல்லறுத்தான் கண்டல் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் பயிர்ச்செய்கை செய்து வருபவர்களை உடனடியாக வெளியேற்றி அக்காணிகளை மேய்ச்சல் தரவை க்கு கையளிக்க உரிய அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் ஏற்கனவே பணித்திருந்தார்.
எனினும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த காணி சரணாலயமாக பிரகடனப் படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரதேசம் தொடர்பாக சகல ஆவணங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணி இல்லாதவர்களுக்கு வன வளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் களிடம் இருந்து காணிகளை விடுவித்து பகிர்ந்தளித்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பான விபரங்கள் தேசிய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியானவுடன் ஏனைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வீதி அபிவிருத்தி,போக்குவரத்து,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈடு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள்,அரச சார்பற்ற அமைப்புகள்,இராணுவம்,பொலிஸ்,கடற்படை உயரதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.