மடுக்கரை கிராமத்தில் இடம் பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு முருங்கன் பொலிஸார் துணை போவதாக மக்கள் விசனம்.
Share
(30-12-2023)
மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மது உற்பத்தி இடம் பெற்று வருகின்ற போதும் முருங்கன் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மடுக்கரை கிராமத்தில் சில தொடர்ச்சியாக சட்டவிரோதமாக வடி சாராயம்(கசிப்பு) உற்பத்தி இடம் பெற்று வருகிறது.இதனால் மடுக்கரை கிராமத்தில் தொடர்ச்சியாக குடும்ப வன்முறைகள் இடம்பெற்று வருகின்றது.
மடுக்கரை கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெற்று வருகின்றமை குறித்து முருங்கன் பொலிஸாரிடம் பல தடவைகள் மக்களினால் முறைப்பாடு செய்யப்படுகின்ற நிலையில் முருங்கன் பொலிஸார் வருகை தந்து சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் பொருட்களை மீட்டுச் செல்கின்றனர்.
எனினும் சட்ட விரோத மது உற்பத்தியில் ஈடுபடுகிறவர்கள் தொடர்பாக முழு விபரங்களும் வழங்கப்படுகின்ற போதும் அவர்களை கைது செய்யாது விட்டுச் செல்கின்றனர்.
மேலும் மடுக்கரை கிராமத்திற்கு வருகின்ற பொலிஸார் சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களுடன் நற்புரவை பேணி வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மது உற்பத்தியால் குறித்த கிராமத்தில் பல குடும்பங்களில் தொடர்ச்சியாக குடும்ப வன்முறைகள் இடம்பெற்று வருகின்ற தாகவும்,குறிப்பாக குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் இடையில் பிரச்சனை ஏற்படுகின்றமையினால் சில மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-மேலும் மடுக்கரை கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் பொலிஸார் வருகை தந்து சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,தமக்கு வேண்டிய சட்டவிரோத மணல் அகழ்வு செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்,முருங்கன் பொலிஸாரின் குறித்த நடவடிக்கை குறித்து பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.