LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் யானைகள் இறப்பு

Share

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டு (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

“சுதந்திரத்திற்கு பிறகான காலப்பகுதியைப் பார்க்கும் போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது” என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான மையத்தைச் சேர்ந்த டிமுத்து சந்தருவான் செனதீர கூறுகிறார்.

2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 74 யானைகள் உயிரிழந்துள்ளன அனால் அவை எப்படி இறந்தன என்பது பற்றி தகவல் இல்லை என்கிறார் அவர். மேலும் “49 யானைகள் துப்பாக்கிச் சூட்டின் மூலமும் 36 மின்சாரம் தாக்கியும் பலியாயின” என்றும் அவர் கூறுகிறார்.

விரைவான நகரமயமாக்கல் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்தது, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக விவசாயத்திற்காக காடுகளை அழித்தது ஆகியவையே உலகளவில் யானைகளின் அழிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் செனதீர விமர்சிக்கிறார்.

“அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்றால் யானைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஒரு பகுதிக்குள் தள்ளி பிறகு மின்வேலி அமைக்கிறார். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு அவர்களால் எந்த தீர்வையும் அளிக்க முடியவில்லை”.

சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதற்கு யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வைக் காண்பது சுலபமாக இருக்காது என்றும் அவர் அழுத்தமாகக் கூறுகிறார்.

யானைகள்-மனிதர்களுக்கு இடையேயான மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது கடினம் என்றாலும், யானைகளின் ஜனத்தொகையைப் பாதுகாக்கவும் இந்தப் பிரச்சினையை நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியமானது” என்றும் வலியுறுத்தினார் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான மையத்தைச் சேர்ந்த டி. முத்து சந்தருவான் செனதீர.