யாழ்ப்பாணத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக அமைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா தினேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக்கலை தொடர்பான அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக்கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதுமட்டுமின்றி யாழ்ப்பாணம் தவிர்ந்த பிரதேசங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகைதந்து யாழ்ப்பாணத்தில் புதிய அழகுக்கலை நிலையங்கள் திறக்கப்படுவது மட்டுமில்லாமல் அழகுக்கலை சார்ந்த குறுகியகால பயிற்சிப்பட்டறைகளும் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.
இதனால் எமது உள்ளூர் அழகுக்கலை ஆர்வம் கொண்ட மாணவர்களும் அழகுக்கலை நிபுணர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
எமது ஒன்றியத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற 120க்கும் மேற்பட்ட அழகுக்கலை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒன்றியமானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்தின் வழிநடத்தலில் இயங்கி வருகின்றது எனவும் பிரதீபா டினேஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் அழகுக்கலை தொழில் என்பது சருமங்கள், தோல் சார்ந்த சுகாதார விடயங்களோடு சம்பந்தப்படுவதால் உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதார பிரிவினரோடு இணைந்து அதற்கான அனுமதி வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா தினேஷ் தெரிவித்தார்.
குறிப்பாக அழகுக்கலை நிலையம் ஒன்றை திறப்பதற்கான வியாபார அனுமதியை வழங்குகின்ற பொழுது குறித்த நிலையத்தின் உரிமையாளர் NVQ level 4 சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயமானது. இதனை பரிசீலித்தே வியாபார சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்.
எனவே இந்த விடயங்களை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் அழகுக்கலை பயிற்சி நெறிகளை நடத்துவதென்றால் வகுப்பறை கட்டமைப்பு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது என அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் திருமதி பிரதிபா டினேஷ் தெரிவித்தார்.