உடனடி யுத்த நிறுத்தம்! இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுக்கு இரு தேசத் தீர்வு
Share
– நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவைத் தீர்மானம்!!!
தற்போதைய இஸ்ரேல்-பலஸ்தீனப் போர் தொடர்பான உடனடியான மற்றும் நிரந்தரமானதொரு யுத்த நிறுத்தத்தைக் கோரும் தீர்மானமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை நிறைவேற்றியது.
இம்மாதம் ஆறாம் திகதி நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானமானது பரவலாக அங்கிகரிக்கப்பட்ட, நீண்ட காலமான, சர்வதேச அங்கிகாரம் பெற்ற இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாட்டுக்கான இரண்டு தேசத் தீர்வானது அமுல்படுத்தப்பட வேண்டுமென்று கோருவதுடன், அதற்கு இந்த முடிவில் மேற்குக் கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பலஸ்தீன தேசமொன்றின் உருவாக்கமே ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானமானது(1-2024) தற்போதைய ஆயுதப் போராட்டம் காரணமாக இழந்துவரும் உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றுவதற்கும், இரு தேசத் தீர்வு உருவாக்கப்படும் வரையில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைகள் இரண்டு பகுதிகளிலும் தேவை என வலியுறுத்துவதாகவும் கூறுகிறது.
ருவாண்டா, சிறீலங்கா ஆயுத மோதல்களில் தான் விட்ட தவறுகளிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை பாடம் கற்காமல் இருப்பது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவலை தெரிவிப்பதாகவும், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளில் பாதுகாக்கும் பொறுப்பை (R2P) ஐக்கிய நாடுகள் சபை அமுல் நடத்த தவறியதால், ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தமையையும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இரண்டு தேசத் தீர்மானத்தை அமுல் நடத்துவதன் மூலம் போர் பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்து வரும் இரத்தக்களரியைத் தடுக்கலாம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானமானது வலியுறுத்துகிறது.
இஸ்ரேலிய – பலஸ்தீனப் பிரச்சனை, தமிழ் – சிறீலங்காப் பிரச்சனை, உக்ரேன் – ரஷ்யா பிரச்சனை, நாகொர்னோ-கரபாஹ் பிரச்சனை உள்ளிட்டவையானது அமைதி மற்றும் நீதிக்கு புதிய பொறிமுறைகள் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது.இதே கருத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதலாவது வழக்குத்தொடுநர் மொரெனோ ஒக்கம்போ
(Mr. Moreno Ocampo. ) வலியுறுத்தி உள்ளார். பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கு புதிய பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய பொறிமுறைகளை உருவாக்குவதை கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் சர்வதேச நீதி செயற்பாட்டொன்றை (VDIJ) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் முன்னணியொன்றை அமைப்பதற்கான நகர்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இம் முயற்சியில் ஆர்வம் உள்ளவர்களை இணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.