சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வலியுறுத்தல்
Share
பு.கஜிந்தன்
சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நிலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் காலப் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும் என்றும் செயலூக்கமான நடவடிக்கை வாயிலாவே ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, முதற் தடவையாக கட்சி தலைவர் தெரிவில் மக்கள் ஆட்சி முறையின் வாயிலாக தெரிவு இடம்பெறுவதும் வெற்றி பெறுவதும்தான் கட்சி மற்றும் அமைப்புக்கள் சார்ந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தும், நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் வழியில் சென்று கட்சியை புத்தெழுச்சி கொள்ளும் வகையில் உங்கள் பணி அமையுமென்பதில் எனக்கு அசைக்கவியலாத நம்பிக்கை உண்டு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.