மன்னார் திருகேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா தொடர்பாக முன்னாயத்த கூட்டம்!
Share
மன்னார் நிருபர்
(01/02/2024)
மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா தொடர்பாக முன்னாயத்த கூட்டம் புதன்கிழமை 31ம் திகதி (31-01-2024) மாலை மன்னார் மாவட்ட செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் திருகேதீஸ்வர ஆலய தலைவர், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , மன்னார் நகரப் பிரதேச செயலாளர், அரசாங்க உயர் அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், கலாச்சார உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எதிர் வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழா மற்றும் அன்றையதினம் ஆலயத்துக்கு வருகை தர உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் முக்கிய முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
விசேட பஸ் சேவை நடத்துதல், உணவு வசதிகளை வழங்குதல், குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுத்தல், மருத்துவ வசதிகளை வழங்குதல், ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்துகொடுப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.