LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மீனவர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியா?.

Share

நடராசா லோகதயாளன்.

மன்னார் மாவட்டத்தில் 163 கிலோ மீற்றர் நீளம்கொண்ட கடலும் 5 ஆயிரத்து 200 படகுகளும் உள்ளபோதும் 2023 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 298 மெற்றிக்தொன் கடல் உற்பத்தியினையே எட்ட முடிந்துள்ளது.

மன்னாரில் தற்போது 11 ஆயிரத்து 94 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 133 மீனவ மக்கள் வாழ்கின்றனர். இங்கே 13 ஆயிரத்து 653 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு 1900 படகுகள் மட்டுமே காணப்பட்டது. இந்த எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 200 படகுகளாகி தற்போது 5,200 படகுகள் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதில் 253 ரோளர் படகுகளும் உள்ளன. ரோளரில் மீன்பிடி மட்டுமன்றி அட்டை, சங்கு மடி வலைகளும் பயன்படுத்தப்படுவதாக திணைக்களம் கண்டுகொண்டுள்ளது.

இலங்கையில் ரோளர் மீனபிடி 2017முதல் சட்டப்படி தடை செய்யப்பட்ட தொழில் முறைமையாகவுள்ளபோதும் மன்னாரிலும் இடம்பெறுகின்றது.

தடை செய்யப்பட்ட ரோளர் போன்று மன்னார் மாவட்ட மீன்பிடியில் காணப்படும் மற்றுமோர் பாரிய நெருக்கடியாக டைனமற் தொழில் முறையும் அதிகளவில் இடம்பெறுகின்றது. டைனமற் மூலம் மீன்பிடித் தொழில் அதிகமாக பனங்கட்டிக்கொட்டு, பள்ளிமுனைப் பகுதிகளில் மேற்கொள்வதாகவே கடற்றொழில் திணைக்களம் அடையாளமிடுகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக டைனமற்றை பயன்படுத்துபவர்கள் டைனமற்றை இந்தியாவில் இருந்தும் களணி பாய்வூட் கொம்பனியில் இருந்து திருட்டுத்தனமாகவும் ஜெலற்றீனைப்பெற்று தமக்கேற்ற வகையில் டைனமற்றை தயார் செய்கின்றனர்.

இவை இரண்டிற்கும் அப்பால் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய நெருக்கடிகளில் ஒன்றாக இந்திய மீனவர்களின் விசைப்படகுகளின் வருகையும் காணப்படுகின்றதாக மன்னார் தாழ்வுப்பாட்டைச் சேர்ந்த மீனவ அமைப்புக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் பேசாலையைச் சேர்ந்த மீனவர் எட்வேட் தகவல் தெரிவிக்கையில், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாவட்டத்தின் கடல் உற்பத்தி 25 யிரம் மெற்றிக்தொன்னைத் தாண்டி 26 ஆயிரத்தை நெருங்கியது இருந்தபோதும் அதன் பின்பு கொரோனா மற்றும் எரிபொருள விலை ஏற்றம் காரணமாக கடலில் இறங்க முடியவில்லை. நாள. ஒன்றிற்கு தொழிலிற்குச் செல்ல 80 லீற்றர் மண்ணெண்ணை போதாத நிலையில் அதன் விலைக்கான மீனைக்கூட பெற முடியவில்லை

இவை ஒருபுறம் என்றால் மறுபுறத்தே மாவட்டத்தையே ஆக்கிரமிக்கும் காற்றாடிகளை அமைக்கும் செயலாள் 2023 ஆம் ஆண்டு மாரி மழையின்போது கடலிற்கு மழைநீர் செல்ல முடியவில்லை. ஏனெனில் கடலிற்கு நீர் செல்லும் 14 இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காற்றாலை அமைக்கப்பட்டதனாலேயே இம்முறை மழையின்போது அதிக நீர் நீண்ட நேரம் கடற்கரையில் தேங்கியது. அதன்பின்பு அவசர அவசரமாக மாற்று இடங்களில் வாய்க்கால் தோண்டியே நீர் வெளயேற்றப்பட்டன. இதனை அதிகாரிகள் கூற மாட்டார்கள் ஏனெனில் தாம் தவறான அனுமதிகளை வழங்கியமை அம்பலமாகி விடும் என்பதனால் வாய்மூடி மௌனிகளாகவே உள்ளனர் என்கின்றார்.

இவ்வாறு கடற்றொழிலிலாளர்கள் அடுக்கும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினாவியபோது, இந்திய மீனவர்களின் அத்து மீறல் மற்றும் ஜெலற்றீன் எடுத்து வருவது தொடர்பில் கடற்படையினருக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை கடற்படையினரே பிடிக்க முடியும் இந்திய மீனவர்களை கைது செய்து எம்மிடம் தருபவர்களை நாம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துகின்றோம்.

அதேநேரம் டைனமற் உட்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகளிற்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். இதிலே 2021 ஆம் ஆண்டு 119 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 40 வழக்குகளும், 2023 ஆம் ஆண்டு 57 வழக்குகளும் தாக்கல் செய்துள்ள அதேநேரம் இந்த ஆண்டின் முதல் மாதம் மட்டும் 15 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக் காட்டுகின்றது.

இவை இவ்வாறிருக்க மன்னார் தாழ்வுப்பாட்டுல் ஓர் ரின்மீன் தொழிற்சாலை இயங்குகின்றது. இங்கே மாதம் ஒன்றிற்கு 5 லட்சம் மீன்ரின் தயாரிக்க இலக்கு வைக்கப்படுவதாகவும் இருந்தபோதும் 4 லட்சத்தை தாண்டிய ரின்மீன் உற்பத்தி இடம்பெறுவதாக அந்த உற்பத்தி நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு ஆனால் கடல் உணவுகள் இறக்குமதியிலும், ரின்மீன் பாவனையிலும் தங்கியிருக்கும் அவலத்தில் உள்ளபோதும் எம்மவர்கள் உண்ணாத உணவை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அனுப்ப போட்டியிடுகின்றோம் கேட்டால் அப்போதுதான் நாட்டிற்கு டொலர் வரும் என்னும் அதிகாரிகள் இறக்குமதி செய்பவை இலவசமாகவா வருகின்றது என்பதற்கு பதிலளிக்க வேண்டும். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் கடல் கரைகளையே காணவில்லை அனைத்தும் கடல் அட்டைப் பண்ணைகளாகிவிட்டது. தற்போது மன்னாரிலும் முளைக்கின்றது இந்தநிலையே மன்னாரிலும் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. கடலும் கடல்தொழிலாளியும் உள்ளபோதும் அந்தப் பெயரை வைத்து யாரோ வாழ்கின்றனர் மீனவனின் வாழ்வு மட்டும் விடியவில்லை என வங்காலையைச் சேர்ந்த பிரான்சிஸ் தெரிவிக்கின்றார்.