LOADING

Type to search

கதிரோட்டடம்

தாயகத்தில் எஞ்சியிருக்கும் எமது மக்களையாவது வாழவிடுங்கள் ‘சாரதிகளே’!

Share

கதிரோட்டம் 02-02-2024

இலங்கை என்னும் மாங்கனித் தீவை சிதைத்து அதை இனவாதத்தினதும் மதவாதத்தினதும் பிடிக்குள் கொண்டு வந்து சீரழித்துள்ள தேசத்தின் ‘சாரதிகளாக’ விளங்கும் அரசியல் தலைவர்கள் எமது மக்களை கொன்றழித்து வருகின்றார்கள். இன்னும் அந்த கொடுமை எமது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்கின்றது என்பதை நாம் தினமும் பார்த்தும் செவிமடுத்தும் வருகின்றோம்.

ஆட்சியைக் கையிலெடுத்து அதோடு சேர்த்து இனவாதத்தையும் மதவாதத்தையும் கைகளில் ‘வெறி’ கொண்டவர்களாக காவிக் கொண்டு திரிகின்றவர்கள் தான் தொடர்ச்சியாக ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்து கொள்ளத் துடிக்கின்றார்கள். அவர்கள் இராணுவக் கொடியவர்களை எம் மக்கள் மத்தியில் ஏவி விட்டு எம் இன மக்களை அழித்தும் அடக்கியும் வருகின்றனர்.

இவ்வாறான கொடிய நாட்களை தினமும் சந்தித்த வண்ணம் தங்கள் இக்கட்டான வாழ்க்கையை நடத்தும் எம் மக்களுக்கு வறுமையும் பசியும் அவர்களை எச்சரிக்கும் ஆயுதங்களாக ஏவப்பட்டுள்ளன. அந்த மக்கள் இன்னும் தங்கள் மண்ணை விட்டு நீங்கிச் செல்லாமல் தொடர்ச்சியாக தாய் மண்ணின் மீது பற்றுக் கொண்டு சொல்லவொண்ணா துயரங்களின் மத்தியில் வாழ்ந்து மடிய ஆயத்தமாக உள்ளார்கள்.

ஆனால் அவர்களின் உயிர்களை குறி வைக்கும் கொடிய அரசியல்வாதிகள் மற்றும் படையினராக காடையர்கள் என ‘கொலையாளிகள்; எம் மண்ணில் பிரசன்னமாகி உள்ள வேளையில் எமது மண்ணில் வாகனச்சாராதிகளாக உள்ள ‘இன்னொரு வகையான ‘கொலைஞர்கள்’ எம் மக்களின் உயிர்களைப் பறித்து அவர்களை பிணங்களாக வீதிகளில் வீசி எறிகின்றார்கள். எமது மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வீதிக்கு வந்து பயணிக்க போது வாகனங்களைச் செலுத்தி வரும் பேய்களாகத் தெரியும் எமது மொழி பேசும் சாரதிகளை நம்பியே வீதிகளில் பயணிக்கின்றார்கள்.

ஆனால் அந்த சாரதிகள் என்ற பெயரில் மக்களை சாகடிப்பவர்களாக மது போதையில் வாகனங்களைச் செலுத்துகின்ற கொடியவர்கள் இதுவரை நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை தங்கள் ‘போதைக்கு’ பலியாக்கியுள்ளார்கள்

சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இருந்து இரணைமடுவுக்கு மாடுகளை கொண்டு சென்றுள்ளார். இதன்போது வீதியால் வந்த அரச பேருந்து சாரதி மது போதையில் குறித்த நபரையும் அவரது 8 மாடுகளையும் மோதிவிட்டு, தவறான பக்கத்துக்கு சென்று, எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்தையும் மோதியது. இதன் காரணமாக 8 மாடுகளும், இளம் குடும்பப்பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரும் தற்போது மரணத்தை தழுவியுள்ளதாக அறியப்படுகின்றது.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறி மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு அவர்கள் வாகனங்களை செலுத்தி வரும் வழிகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களே மதுவையும் சுவையான உணவையும் வழங்கி சாரதிகளை போதை நிறைந்தவர்களாக மாற்றிவிடுகின்றார்கள் என்ற தகவலும் எமக்கு கிடைக்கின்றன. எவ்வாறாயினும் இவ்வாறாக நமது மண்ணில் தினமும் வாகனங்கள் மோதிக்கொள்வதும் இதனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இந்தி விடயத்தை ‘இயலாத’ அரசாங்கத்தில் அமர்ந்துள்ள அமைச்சர்களை நாடியும் பயனற்றுப் போன நிலையில் எமது தமிழ் பேசும் அரச அதிகாரிகளாவது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இவ்வாரத்தின் கதிரோட்டத்தின் மூலம் விடுக்கின்றோம்.!