LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மேலும் உடல்கள் இருக்கலாம் என்கிறது அறிக்கை

Share

கடந்த ஆண்டு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே இந்த கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் நீதிமன்றில் இன்று (22) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் இனம்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீடகப்பட்ட 40 மனித எச்சங்களும் 1994 ஆம் ஆண்டிற்கும் 1996 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின் போது இறந்து புதைக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடும் என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாயில் இனம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினுடையது எனச் சந்தேகிக்கும் 40 மனித உடற்பாகங்கள், உடைகள் மற்றும் இலக்கத் தகடுகள் மீட்கப்பட்டன. குறிப்பாக பெண் போரளிகளுடையது என்று நம்பப்படும் உள்ளாடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் தொடர்பிலும் மேலும் அந்த அகழ்வுப்பணி எந்தளவிற்கு விரிவுபடுத்தப்பட வேண்டும், அப்பகுதியில் கூடுதலாக எத்தனை உடல்கள் இருக்கலாம் என்பதுடன் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் எந்த காலப்பகுதியைச் சார்ந்தவை என்பவை தொடர்பில் தொல்லியல் பேராசரியர் ராஜ் சோமதேவா ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது வியாழக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

”இதில் இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்கள் அனைத்தும் 1994 ஆம் ஆண்டிறகும் 1996ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டுள்ளதோடு இவை எந்தவொரு சமயாசார முறைகளையும் பின்பற்றி அடக்கம் செய்யப்படவில்லை. இந்த உடல்கள் காணப்படும் இடத்தில் மேலும் 2 மீற்றர் தூரத்திற்கு நிலத்திற்கு கீழே இரு அடுக்குகளில் உடல்கள் காணப்படுகின்றன”.

இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் ஆண்கள், பெண்கள் இருபாலாரின் உடல் பாகங்களும் காணப்படுவதாக பேராசிரியர் அறிக்கையிட்டுள்ளதாக மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள 40 உடல் பாகங்களின் பாலினம், வயது, உயிரிழப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் ஆராயப்படவில்லை என்றும், அதற்கான நிதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேநேரம் இப்புதைகுழி அகழ்விற்காக 6 மில்லியன் ரூபாவும் உடல்களை மேலதிகமாக ஆய்வு செய்வதற்கு 6 மில்லியன் ரூபாவும் தேவை எனக் கோரப்பட்ட போதும் அப்பணத்திற்கான அனுமதி எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.