LOADING

Type to search

இலங்கை அரசியல்

கச்சத்தீவு திருவிழாவை இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை

Share

நடராசா லோகதயாளன்

தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்கக்கூடாது என இராமேஸ்வரம் விசைப்படகுச் சங்கத் தலைவர் சேசுராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

”இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதான குற்றச் சாட்டில் கைதானவர்களில் ஐவர் சிறையில் அடைக்கப்பட்டு கடும் எச்சரிக்கை செய்யப்படும் நிலையில் அந்த மீனவர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குட்பட்டு நிற்கும் சமயம் கச்சதீவு உற்சவத்தை புறக்கணித்து எமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம்.

இந்த நிலையில் இலங்கை யாத்திரிகர்களின் பங்களிப்புடன் மட்டும் இடம்மெறும் கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் செல்லத் தயாராகி வருவதாக அறிந்து மன வேதனையடைகின்றோம்.

தமிழக மீனவர்களின் மன உணர்வை மதித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இம்முறை திருவிழாவை புறக்கணிக்க வேண்டும் மாறாக திருவிழாவில் பங்குகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு எதிர்கொண்டே ஆக வேண்டும்.

இதேநேரம் 5 மீனவர்களை விடுதலை செய்து மனிதாபிமானத்தை காண்பிக்க மறுக்கும் இலங்கை அரசிற்கு கச்சதீவு உற்சவத்திற்கான செலவுப் பணத்தினை இந்திய மக்களின் வரிப் பணத்தில் இருந்து வழங்க கூடாது” எனவும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் கோரிக்கை தொடர்பில், இந்திய தூதர கருத்துக்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேவேளை இந்தியாவிலிருந்து கத்தோலிக்க யாத்ரிகள் யாரும் இந்த ஆண்டு திருவிழாவிற்குச் செல்ல வேண்டாம் என்றும், தமிழ் நாட்டு கத்தோகிக்கத் திருச்சபையில் உள்ளூர் அருட்தந்தை ஒருவரும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, இந்த வாரத்தின் முற்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைந்து தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி, கடல் வளங்களையும் அழித்து வருவதாக கூறி, யாழ்ப்பாண மீனவர்கள் சங்க கூட்டமைப்பினர், இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.