LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு, பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவருமாக நால்வர் விண்ணப்பம்!

Share

நதராசா லோகதயாளன்.

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும்.

நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங் கோரல் நிறைவடைந்த வேளையில் வவுனியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழப் பேராசிரியர் ஒருவரும், ருகுண மற்றும் ரஜரட்ட பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் நால்வரது விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பேரவை விண்ணப்பங்களை ஆராய்ந்த பின்னர் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய விசேட பேரவைக் கூட்டத்துக்கான திகதியைத் தீர்மானிக்கும். அன்றைய விசேட பேரவைக் கூட்டத்தில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வார்.