ஆலய வழிபாடு குறித்த செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல்!
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் உயர்பாதுகாப்பு வலய இராணுவ குடியிருப்பிற்குள் உள்ள ஆலயங்களில் தற்காலிக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று 23-02-2024 காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்துக்குள் செல்வதற்காக பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசவிளான் இராணுவ குடியிருப்பி ற்கு முன்னால் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில் குழுமியிருந்தனர்.
இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான பிரபாகரன் டிலக்சன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன், சின்னையா யோகேஸ்வரன், ஆகியோர் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் தொலைபேசியில் உள்ள காணொளிகளும் அழிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட பகுதியில் வீதியோரமாக நின்றிருந்த பொதுமக்களையும், அவர்கள் ஆலயங்களுக்கு வழிபடுவதற்கு ஆயர்த்தமாவதையும் காணொளி பதிவுசெய்த ஊடகவியலாளர்கள் மீதே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.