திசை மாறிச் செல்லும் கனடிய தமிழர் பேரவையை சீர் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ‘கனடிய தமிழர் கூட்டு’.-CANADIAN TAMIL COLLECTIVE.
Share
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடாவில் ஏனைய பல இனக்குழுக்கள் தங்கள் இனம் சார்ந்த பலமான அமைப்புக்களை நிறுவி அவற்றை பயனுள்ள செயற்பாடுகளுக்கு ஊடாக தங்கள் இனம் சார்ந்த சேவைகளை தொடர்கின்றன என்பதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.
மேலும். கனடிய அரசாங்கத்தோடு இடம்பெறும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் மற்றும் குறிப்பிட்ட இனம் பல்வேறு வகையில் சலுகைகளையும் சந்தர்ப்பங்களையும் கனடிய அரசிடமிருந்தும் ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் வகையில் நிறுவப்பெற்ற ஏனைய இனம் சார்ந்த அமைப்புக்கள் அவற்றால் பல வெற்றிகளை சாதித்துள்ளன. இன்னும் மிக உறுதியாக தங்கள் இருப்பையும் நிலை நாட்டியுள்ளன.
அவ்வாறான நோக்கத்தோடு கனடாவில் நிறுவப்பெற்ற எமது ‘கனடிய தமிழர் பேரவை,’ அந்தத் திசையிலிருந்து மாறி வேறு திசைகளில் பயணிப்பதை கடந்தகாலங்களில் அவதானித்த சமூக ஆர்வலர்கள், பல சந்தர்ப்பங்களில் கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகிகளோ அன்றி ஊதியத்திற்கு பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கோ எடுத்துக் கூறியும் அவர்கள் அந்த வேண்டுகோள்களை செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
ஒரு பக்கத்தில் ஆக்கபூர்வமான சமூகம் சார்ந்த மனித நேயப்பணிகளை ஆற்றிவந்தாலும் மற்றொரு பக்கத்தில் கனடியத் தமிழர்களுக்கோ அன்றி எமது தாயகத் தமிழர்களோ நன்மை பயக்கும் வகையில் அல்லது அவர்களது ‘வலிகளுக்கு’ பரிகாரம் காணும் வகையிலோ ஈடுபடவில்லை. மாறாக தாயகத் தமிழர்களின் நலன்களுக்கான வழிகளை பற்றி யோசிக்காமல் தங்கள் சொந்த நலன் கருதியும் சுகபோகம் கருதியும் ;அரசியல்’ செய்துவரும் பாராளுமன்ற உறுப்பினர்களை வருடத்திற்கு ஒரு தடவை விமானச் சீட்டுக்கள் அனுப்பியும் ஹோட்டல்களில் தங்க வைத்து உபசரித்து பயணம் அனுப்பி வைக்கும் ‘வேலைகளை’ யும் தமிழர்களை பொழுது போக்கு என்ற மாயைக்குள் இழுத்துச் செல்வது ஆகியவற்றையே ‘முதன்மை’ செயற்பாடுகளாகச் செய்துவந்தது இந்த கனடிய தமிழர் பேரவை.
அதன் அடுத்த கட்டமாக அண்மையில் இலங்கையில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுக்களோடு இணைந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்னும் அரசியல் செயற்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்ததில் இந்த கனடிய தமிழர் பேரவை முக்கிய பங்கு வகித்ததை செய்திகள் மூலமாகவும் புகைப்படங்கள் மூலமாகவும் கனடியத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் பகிரங்கப்படுத்தியது இந்த அமைப்பு.
அதனைத் தொடர்ந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்னும் அரசியல் செயற்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது தொடர்பாக கனடாவில் எழுந்த ‘கடும் எதிர்ப்பைத்’ தொடர்ந்து மெளனத்தை கடைப்பிடித்ததும் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியது கனடியத் தமிழர் பேரவை.
மேற்படி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் , “இலங்கையில் 2009லும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற தமிழர்கள் படுகொலைகளை எமது அமைப்பு ‘இனப்படுகொலை’ என்று பகிரங்கமாக அறிவிக்கமாட்டாது “என்றும் அதன் தற்போதைய தலைவியும் ஏனைய இயக்குனர் சபை உறுப்பினர்களும் கூட்டாகத் தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கனடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் திசை மாறிச் செல்வதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக பல தனி நபர்களும் அமைப்புக்களும் கனடிய தமிழர் ஊடகங்களும் தங்களால் ஆன வகையில் பல ‘விடயங்களை’ கையில் எடுத்தனர்.
கனடா உதயன் பத்திரிகையானது, தனது வாராந்த ஆசிரிய தலையங்கம் ஊடாகவும் சில கட்டுரைகள் ஊடாகவும் கனடிய தமிழர் பேரவைக்கு சில அறிவுறுத்தல்களை முன் வைத்தது. குறிப்பாக “உலகத் தமிழர் பேரவையிலிருந்து விலகி நில்லுங்கள்’ என்ற வேண்டுகோளையும் பகிரங்கமாக முன்வைத்திருந்தது.
இவ்வாறான நிலையில் அண்மையில் கனடாவில் கூடிய கல்விமான்கள். சட்டத்தரணிகள். சமூகச் செயற்பாட்டாளர்கள். அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பல தடவைகள் கலந்துரையாடிய பின்னர் நேற்றைய தினம் 23-02-2023 வெள்ளிக்கிழமையன்று ‘கனடிய தமிழர் கூட்டு’ – CANADIAN TAMIL COLLECTIVE- என்ற அமைப்பின் ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
நேற்றைய சந்திப்பின் பிரதான மேடையில் ( HEAD TABLE ) சட்டத்தரணி அபி சிங்கம் தலைமையில் சட்டத்தரணிகள் லக்சுமி வாசன், மரியோ புஸ்பரட்ணம். மற்றும் பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன். அரசியல் மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டாளர் நீதன் சண்முகராஜா ஆகியோர் அமர்ந்திருந்து அங்கு சமூகளித்திருந்த ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் கலந்துரையாடலை ஆரம்பித்தனர்.
முதலில் மேற்படி ஐவரும் கனடிய தமிழர் பேரவை தொடர்பாகவும் அந்த அமைப்போடு தாங்கள் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் ‘மனந்திறந்து’ தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஐவரும் பல்வேறு ‘ அனுபவம்-ஆற்றல்-செயற்பாட்டுத் திறன்’ ஆகியவற்றை கொண்டவர்கள் என்பதும் எமது தமிழர் சமூகம் அறிந்த ஒன்று. அவர்களது பங்களிப்பு போற்றுதற்குரியது. அவர்களின் முயற்சி வாழ்த்துவதற்கு ஏற்றது. கனடிய தமிழர் சமூகத்தை இணைத்துக்கொண்டு திசை மாறிச் செல்லும் கனடிய தமிழர் பேரவையை ‘சீர்’ செய்வோம் என்கின்ற நல்லெண்ணம் அனைவருக்கும் புரிகின்றது.
நேற்றைய சந்திப்பில் பல்வேறு அச்சு ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களும் சமூக ஊடகங்களை நடத்துகின்றவர்களும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
எனினும் மிக நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பினைத் தொடர்ந்து இறுதியில் ‘இன்னும் பல விடயங்கள் உள்ளன’ என்ற உணர்வையே பலருக்கு தந்திருக்கும் என்றே கருதவேண்டியுள்ளது. சந்திப்பை நடத்தியதன் நோக்கம் பூரணமாக எட்டப்படவில்லை என்பதும் அங்கு உணரப்பட்டது.
எனினும். மேலும் தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களையும் சந்திப்புக்களையும் நடத்தவுள்ளதாக மேற்படி ‘கனடிய தமிழர் கூட்டு’ என்ற அமைப்பின் தலைமை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எமக்கு கிடைத்த தகவல்களின் படி ‘கனடிய தமிழர் கூட்டு’ அமைப்பின் பின்னால் சுமார் 40 தீவிரமான அங்கத்தவர்கள் உள்ளார்கள் என்றும் அவர்களின் கூட்டு முயற்சியாகவே கனடிய தமிழர் பேரவையை ‘சீர்’ செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் அறியப்படுகின்றது.
எனவே நேற்றைய சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பெற்ற கருத்துக்கள் அனைதையும் உள்வாங்கிய வண்ணம் இனி நடைபெறவுள்ள தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள் மூலம் நல்ல ஒரு முடிவை எட்டுவதற்கு அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதையும் கனடா வாழ் தமிழ் மக்கள் இனி வரும் காலங்களிலாவது, கனடிய தமிழர் பேரவை போன்ற மக்களுக்கான அமைப்புக்கள் சரியான திசையில் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதையும்.
தமிழ் மக்களுக்காகவே இந்த அமைப்புக்களுக்கு வருடா வருடம் கனடாவின் மூன்று தளங்களில் உள்ள அரசுகளும் இலட்சக் கணக்கான டாலர்களை நிதிஉதவியாக வழங்குகின்றன என்பதையும் அறிந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்பதையும் நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்போமாக!