LOADING

Type to search

இலங்கை அரசியல்

விஸ்வரூபம் எடுக்கிறது மீனவர்களின் பிரச்சனை: பதிலடிக்கு யாழ்ப்பான மீனவர்கள் தயார்

Share

நடராசா லோகதயாளன்

அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத – கையாலாகத கடற்படையினர் எங்கள் மக்களிடம் மாத்திரம் தங்கள் வீரத்தை காட்டுகின்றனர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் தெரிவித்தார்.

மாதகல்ப் பகுதியில் மீன்பிடிக்கு கடற்படையினர் தடை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில் எங்கள் கடற்பரப்பில் நாங்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு சிறிலங்க கடற்படையால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று போர் முடிந்து விட்டது. சிவில் நிர்வாகம் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகின்ற சூழலில் கடற்படையினர் சிவில் நிர்வாகத்தில் – கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் விவகாரத்தில் தலையிடுகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள காலத்தில், கடற்படையினரின் சிவில் நிர்வாகத்தின் மீதான தலையீடு கண்டிக்கப்படவேண்டும்.

தென்னிலங்கையில் பல இடங்களில் விகாரைகளைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவையொன்றும் விகாரையின் அழகை கெடுக்கவில்லையா? தமிழர்கள் என்பதற்காகவே எங்கள் மீது எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான பாகுபாடுகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள்? விகாரைக்கு அண்மையாக மீனைக் கொல்லுவதாகக் கடற்படையினர் கூறுகின்றனர்.

வாழ்வாதாரத்தைக் கெடுத்து – பட்டினிபோட்டு எங்களைக் கொல்லச் சொல்லியா உங்கள் புத்தர் பெருமான் உபதேசித்திருக்கின்றார்? சம்பில்துறையில் தலைமுறைகளாக எமது மக்கள் தொழில் செய்து வருகின்றார்கள். எப்போதும் இல்லாது திடீரென கடற்படையினர் அந்தப் பகுதியில் கடற்றொழிலை முன்னெடுக்க தடை விதிப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

ஏற்கனவே அந்த விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்கள் தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.

அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத – கையாலாகத கடற்படையினர் எங்கள் மக்களிடம் மாத்திரம் தங்கள் வீரத்தை காட்டுகின்றனர்.

நீங்கள் எங்கள் வாழ்வாதாரத்தில் – வயிற்றிலடிப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம் அமைதியை விரும்பும் எங்கள் மக்களை வலிந்து சீண்டுகின்றீர்கள். விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறிலங்கா கடற்படையை எச்சரிக்க விரும்புகின்றேன், என்றுள்ளது.

இதனிடையே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3) யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல், இழுவைமடி படகின் பயன்பாடு, கடல் வளங்கள் அழிக்கப்படுவது ஆகியவற்றிற்கு எதிராக தமது கடற்பரப்பில் கருப்பு கொடிகளை தமது படகுகளில் பறக்கவிட்டு, அன்றைய நாளை கரிநாளாக அனுசரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்ற ஒன்று, அதற்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் பேசுவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமது மீனவர்களின் பிரச்சனைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நிறுத்தப்பட்டு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.