LOADING

Type to search

இலங்கை அரசியல்

மடு வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டு – மடு கல்வி வலயத்தில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி..

Share

(02-03-2024)

இடமாற்ற கொள்கைக்கும் செயல்முறைக்கும் முரணான வகையில் மடுக் கல்வி வலயத்தில் உள்ள தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம் 1 தரம் 2 மற்றும் தரம் 3) உத்தியோகத்தர்களுக்கான இடம் மாற்ற செயல்முறை சுற்று நிரூபத்துக்கு அமைவாக 01, 1.1 குறைந்தபட்சம் 3 வருடங்கள் சேவை காலத்தினை பூர்த்தி செய்திருப்பின் வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவார்கள்.

அல்லாவிடில் தகுதியற்றவராக கொள்ளப்படுவார்கள் என்னும் விதிமுறைக்கு அமைவாக சேவைக்காலம் 3 வருடம் முடி வடையாத நிலையில் உள்ள உத்தியோகத்தர்கள் தங்களுடைய சேவைக் காலம் முடிவடையாத நிலையில் உள்ளதை மேல்முறையீடு செய்தும் வலயக் கல்வி பணிப்பாளரின் அசமந்த போக்கினால் மேல்முறையீடு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் அடிப்படையான பல வேலைபாடுகள் இருந்தும் தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவசர அவசரமாக தொலைநகல் மூலம் (29.02.2024 நேரம் மாலை 3.05 PM) கடிதங்களை பெற்று அவர்களை துரத்துவதற்கு ஆவலாக இருந்து கடிதத்தினை உத்தியோகத்தர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் மடு வலயக்கல்வி பணிப்பாளர் தனக்கு சார்பான உத்தியோகத்தர்களை வைத்து தரமற்ற நிர்வாகத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டக்கல்வி பணிப்பாளராக அடிப்படை தகமைகள் பூர்த்தி செய்யாதவர்களை மாந்தை மற்றும் மடு கோட்டக் கல்வி பணிப்பாளராக தொடர்ச்சியாக நியமித்து அவர்களை பயன்படுத்தி உள்ளுக்குள் நடைபெறுகின்ற முறையற்ற இடம் மாற்றம், முறையற்ற கண்காணிப்பு,.முறையற்ற நிர்வாகம் போன்ற செயற்பாடுகளை அவர்களுடன் இணைந்து செயல்படுத்தி,அவர்களின் ஆலோசனைகளினால் முரண்பாடுகளை பாடசாலைகளில் ஏற்படுத்தியும் வருகிறார்.

மேலும் செயல்பாடற்ற கல்வி நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை தனது தேவைக்காக இடமாற்றம் செய்யாமல் வைத்திருப்பது என்பது இவரின் நிர்வாகத் திறமையின்மை யை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்திற்கு தான் போகாமல் தனது பிரதிநிதியாக குறிப்பிட்ட உத்தியோகத்தரையே அனுப்பி வைப்பதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் மடு வலயக்கல்வி பணிப்பாளர் தனது சொந்த வாகனத்தை (கார்) தனது அலுவலக தேவைக்காக பதிவு செய்து விட்டு மடு வலய அரச வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் அரச வாகனத்தை பாவிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டும் அதற்கு இன்று வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.

அத்துடன் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வழங்கப்பட்ட பேருந்து வண்டி இந்த வலயக் கல்வி பணிப்பாளரின் வருகைக்குப் பின்னர் அந்த பேருந்து வண்டியை யாருக்கும் கொடுப்பதில்லை.

கடந்த 06.02.2024 அன்று பேருந்தை அமைச்சர் கூட்டத்திற்கு அதிபர்கள் செல்வதற்காக அனுமதி கேட்கப் பட்ட பொழுது அதற்கு பொறுப்பற்ற விதத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் அனுமதி தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் .

இது அதிபர்களை மதிக்காது கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படும் போக்கைக் காட்டுகிறது.

மடு வலயத்தை பொறுப்பேற்று இரண்டு வருடம் நிறைவேற போகிறது. ஆனால் அவர் குறைவான பாடசாலை தரிசிப்புக்களையே கொண்டுள்ளார்.

இது அதிபர்களின் பார்வையில் பொருத்தமற்ற பணிப்பாளராக பார்க்கப்படுகிறது.என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மடு வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.