யாழ் காங்கேசன்துறை நகரிலிருந்து கவிஞருக்கு எனது இறுதி வணக்கம் . . . .
Share
கவிஞர் கந்தவனம்
இலங்கையின் தமிழகத்தில் புகழ் பூத்த இரு கவிஞர் பெரு மக்கள் எனது மாணவ பருவத்தில் என்னைக் கவர்ந்த கவிஞர்களாவர். ஒருவர் மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய புலவர் பார்வதி நாதசிவம், இரண்டாமவர் நுணாவில் ஊரை பிறந்த பதியாகவும் குரும்பசிட்டி கிராமத்தை புகுந்த பதியாகவும் கொண்ட கவிஞர் விநாயகர் கந்தவனம் ஆவார்.
அக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் பிரசார மேடைகளில் அக்கட்சியின் ஆஸ்தான கவிராயர் என்று பேசப்பட்டவர். எங்களுர் “இளம் தமிழர்” மன்றத்தின் அழைப்பின் பேரில் அவரது தலைமையில் நடைபெறும் கவியரங்க மேடைகளில் கவிஞரது கம்பீரக்குரலில் மலரும் கவிதை வரிகள் காதுகளில் தேன் பாய்ச்சும். சென்னையின் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவராக இருந்த காலத்தில் தி.மு.கழத்தின் தலைவர்களோடு மிகவும் பரிட்சயமானவர். நாவலர் நெடுஞ்செழியன் “குறுந்தாடி நெடுஞ்செழியனாக” வலம் வந்த வேளை அவரை கல்லூரி விழாவிற்கு அழைத்து வந்து சொற்பொழிவு ஆற்றவைத்ததைப் பெருமையுடன் சிலாகித்தவர். “கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்” தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் என்னுடன் மிக நெருக்கமாக உறவாடியவர். இணையத்தின் போஷகராகவும் தலைவராகவும் இருந்து இணையத்தை ஆரோக்கியமாக வளர்த்தெடுத்தவர்களுள் முக்கிய பங்காற்றிய பெருமகனார் ஆகும்.
1989இல் என்னால் வெளியிடப்பெற்ற “வீணைக்கொடி” இலக்கிய சஞ்சிகையின் “கௌரவ ஆசிரியர்” ஆக அறிமுகமான வேளையிலே அச் சஞ்சிகையின் வாயிலாக கந்தவனம் கனடாவில் ரொரன்ரோ நகரில் வாழ்கிறார் என்ற செய்தி பலருக்கும் தெரிய வந்தது. இது பற்றி அவரே என்னிடம் கூறி இருக்கிறார்.
“உம்முடைய இதழின் மூலம் எனக்கு பல தொலைபேசிகள் வந்த வண்ணம் இருக்கின்றது” என்றார்.
கனடாவில் கவிஞர் அவர்களுக்கே முதன் முதல் மணி விழா கொண்டாடப்பட்டது. “தமிழர் தகவல் நிறுவனம்” இவ் விழாவை வெகுவிமர்சையாக முன்னெடுத்தது. தொடர்ந்து அவரது மணி விழாவை மொன்றியலிலும் தமிழ் அன்பர் “தமிழாலயம்” கவிதாராஜன் உள்ளிட்ட நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒரு கவிஞருக்கு இரு மாநிலங்களில் மணி விழா என பலராலும் பேசப்பட்ட வரலாற்றுச் செய்தியாகும்.
“வாசகன்” வார இதழில் கவிஞரைப் பற்றி பொது வெளியில் பேசப்பட்ட ஒரு விடயத்தை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்து “இடித்துரைத்தல்” மூலம் நட்பைப் பேணுவது எனது கடமை என நினைத்து என்னால் எழுதப்பெற்ற ஆசிரியர் தலையங்கம் கவிஞருக்கு என்னிடத்தில் மன விரிசலை ஏற்படுத்தி விட்டது.
“அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்”
அதாவது இடித்துக்கூறி நல்லறிவு சொல்லக்கூடியவர்கள் நட்பு விரும்பத்தக்கது. குற்றத்தை எடுத்துக்காட்டி “நம் குற்றத்தை நாமே உணர்ந்து” வருந்தும்படி நல்ல முறையில் பேசி நியாய வாதம் செய்து அறிவுறுத்த வல்லவர்களுடைய நட்பை தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வள்ளுவப் பெருமானின் கருத்தை கவிஞரால் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பாத படியால் கால்நூற்றாண்டுகளுக்கு மேல் அவர் என்னுடன் பேசுவதில்லை.
கவிஞர்களுக்கேயுரிய வித்துவச் செருக்கு எனலாம். ஆனாலும்,
கவிஞரின் கவிதை தமிழும்
விருந்தோம்பலும்,
பக்தி இலக்கியமும்
அவரைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
அன்பன் வீணை மைந்தன்