LOADING

Type to search

இலங்கை அரசியல்

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை

Share

பசுமை அமைதி விருதுகள் விழாவில் ஐங்கரநேசன் ஆதங்கம்

சிறந்த தலைமைத்துவப் பண்பின் வெளிப்பாடு தொடர்ச்சியாகத் தலைமைப் பதவிகளில் அமர்வது அல்ல. உரிய நேரத்தில் தலைமை வகிபாகத்தைப் பொருத்தமான இன்னொருவரிடம் கையளிப்பதுதான் தலைமைத்துவப் பண்புகளில் மிகவும் உயர்வானது. மற்றையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் உயரிய இந்தத் தலைமைத்துவப் பண்பு மாணவர்களிடம் உள்ளது. ஆனால் அத்தியாவசியமான இந்தப் பண்பு இன்றைய எமது அரசியல் தலைவர்களிடம் அறவே இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிறு (17.03.2024) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தத் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட, எல்லோராலும்; ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசியத் தலைமை இன்று இல்லை. சகல துறைகளுமே தகுந்த தலைமைத்துவங்கள் இன்றித் தள்ளாடுகின்றன. பல்லுப்போய் சொல்லுப்போனாலும் தானே இன்றும் சிறந்த பாட்டுக்காரன் என்பது போலத் தள்ளாத வயதிலும் தலைமைக்கதிரையில் நிரந்திரமாக அமரவே எமது தலைவர்கள் ஆசைப்படுகின்றார்கள். அந்தக் கதிரையை எட்டுவதற்குப் போட்டா போட்டிகள் இடம் பெறுகின்றன. இந்தத் தலைமைத்துவச் சீரழிவே மேலிருந்து கீழாகச் சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது.

மாணவ சமூகம் குறித்துப் போதைப்பொருள் பாவனை உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும், இன்றைய மாணவர்களிடமிருந்துதான் நாளைய எமது தலைவர்கள் உருவாக வேண்டும். அந்த நம்பிக்கை இன்னும் பட்டுப்போகவில்லை. பசுமை இயக்கத்தின் சூழல் பொது அறிவுப் பரீட்சையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதக்கங்களை வென்ற தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் அபிசாய்ராம்;; இம்முறை பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை. இரண்டு தடவைகள்; விருதுகளைப் பெற்;றிருப்பதால் அந்த விருது இனி இன்னொருவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதாலேயே தான் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இம்முறையும்; தங்கப்பதக்கத்தை வென்றிருக்கக்கூடிய ஒரு மாணவன் அதனை இன்னொருவர் பெற்றுக்கொள்ளட்டும் என்று விண்ணப்பிக்காது இருந்தமை சாதாரணமான ஒரு விடயம் அல்ல. இது எமது தலைவர்களிடம் காணக்கிடைக்காத, அடுத்தவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் மிக உயர்வான தலைமைத்துவப்பண்பு. இவர் போன்ற மாணவர்கள் எதிர்காலம் குறித்த எம் நம்பிக்கையின் விதைகளாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். இவ்விதைகள்; கருகிவிடாது முளைத்து விருட்சங்களாக வேண்டும். அதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களினதும்; ஆசிரியர் சமூகத்தினதும் பெரும் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.