LOADING

Type to search

இலங்கை அரசியல் கனடா அரசியல்

கவிநாயகர் கந்தவனம் அவர்களின் இறுதிக்காலங்கள்

Share

கலாரசிகன்

கவிநாயகர் என மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நுணாவிலில் பிறந்து, குரும்பசிட்டியில் தனது துணையை வரித்துக்கொண்டு வாழ்ந்தவர். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றப் பிறந்தவராகவே தன்னை வாழ்நாளில் ஆக்கிக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். அருள்மாமணி என சாந்தலிங்கம் அடிகளாரால் சிறப்புப் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர் கவிஞர். 

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று  (236) 

 என்னும் பொய்யாமொழியாரின் வாக்கிற்கேற்ப எடுத்துக்கொண்ட விடயத்தில் மற்றவர்கள் வியந்து போற்றும் வண்ணம் பெரும் சபைகளில் தோன்றி தனது பெயரை நிலைநாட்டிக்கொண்டர் என்பது உலகறிந்தவிடயம். மனப்பக்குவமும், ஆளுமையும், மற்றவர்களை வசீகரிக்கும் சொல்லாற்றல், உபசரிக்கும் பண்பும்  கொண்டவர்.  

இதனை தனால் இவன்முடிக்கும் என ஆய்ந்து 
அதனை அவன் கண்விடல் 

 என்னும் வள்ளுவனார் வாக்கைப் பின்பற்றி வாழ்ந்தவர். வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் போன்றோரை உயத்துணர்ந்து அவர்களைத் தட்டிக்கொடுத்து வளர்த்தெடுத்துவர். மரபுக்கவிஞர்கள் பலரை கனடாவில் தோற்றுவித்தவர். மேடையில் ஏறி நாடகங்களிலேயே நடித்தவர். பெற்றோர் ஒரு பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும் என்பதனைச் செய்தமையால் அவர் வாழுங்காலம் முழுமையும் புகழேணியில் ஏறி உலகைச் சுற்றிவந்தவர். இளமையில் தந்தையை இழந்துவிட்டாலும் தாய் மாமனின்  அரவணைப்பில் வளர்ந்தவர். மாமனும் மூத்த சகூதரனும் இவரது கல்விக்குத் தீனி போட்டு வளர்த்தெடுத்தவர்கள். 

தமிழகத்தில் உயர்கல்வியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியவர் தனக்கு விருப்பமான ஆசிரியத் தொழிலை  ஏற்றுக்கொண்டு மாணாக்கரை நெறிப்படுத்தி, வளர்த்தெடுத்தவர். அதிபராகவும் கடமையாற்றியதோடு சமூகத்  தொண்டிலம் தன்னை இறுதி மூச்சுவரை ஈடுபடுத்திக்கொண்டவர்.

இறுதிக் காலத்தில் இல்லத்திலேயே தங்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தமை அவரது பொதுவாழ்விற்கு வரம்புபோட்டது எனலாம். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே பல்வேறு துறைகளிலும் ஆலோசனைகளும் அவ்வப்போது வரும் மாதாந்த, வாராந்த, இதழ்களில் எழுதி வந்தார். எனினம் அவரை நாடி வந்து கவிதை, இலக்கிய, சமயம் தொடர்பான விடயங்களை அணுகியோருக்கு மனமகிழ்வோடு விடயதானம் செய்து தனது பொழுதை மிகப் பயனுள்ளதாகச் செய்து வந்தார். 

சிறிது காலமாக அவரது உடல் அவரது உள்ளத்தோடு ஒத்துப்போகவில்லை. இருந்தும் தன்னாலான முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருந்தார். அவரது நிலைமையை நன்கு உணர்ந்த துணையாள் தவமணி அம்மா எந்தவித சலிப்பும் இன்றி அவருக்கான அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிவந்தமையை நான் நேரிலும் தொலைபேசிமூலமும் அறிந்துகொண்டுதான் இருந்தேன்.

இவற்றிற்றகு மேலாக தங்கள் வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் புதல்வி வாணி ருத்திரா காலையிலும் மாலையிலும் வந்து தாய், தந்தையருக்கான பணிகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டிருந்தமையை நான் அங்கு அடிக்கடி செல்லும் போது அவதானிக்க முடிந்தது மட்டுமன்றி திருமதி தவமணி அம்மா தொலைபேசியில் யார் யார் தொலைபேசியில் அழைத்தாரகள், யார் யார் வந்தார்கள் என்ற விபரங்களை எல்லாம் கூறிக்கொண்டே இருப்பார். இறுதிக் காலத்தில் ஒரு குழந்தைப்பிள்ளையைப் பார்ப்பதுபோன்று அவர் தனது துணைவரைப் பார்த்துக்கொண்டமையைப் பார்த்து மெய்மறந்து அவரைப் போற்றி நின்ற கணங்களும் உண்டு. 

நோய்வாய்ப் பட்டிருந்த கவிஞரைப் பார்த்து அவரோடு அளவளாவுவதோடு அங்கு செல்வதால் துணைவியாரின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் என்பதை உணர்ந்து எனக்கு வசதி கிடைக்கும் போதெல்லாம் அங்கு செல்வதும் முடியாத சந்தர்ப்பங்களில் தொலைபேசியில் அழைத்துக் கதைப்பதுமாக இறுதிவரை தொடர்பில் இருந்தேன்.

இறுதிநாள் தொலைபேசியில் அழைத்தபோது என்னத்தைச் சொல்ல ஒன்றுமே சாப்பிடுகிறார் இல்லை எனச் சோர்வாக என்னோடு 12.30 க்கு உரையாடினார். அதன்பின்னர் 3.00க்கு தொலைபேசி அழைப்பு வந்தது எங்களை எல்லாம் விட்டுச் சென்றுவிட்டார் என்ற தழுதழுத்து குரலோசை கேட்டது. உடனடியாக சென்று பார்க்க விளைந்து அங்கு சென்றேன் இரண்டுநாட்களுக்கு முன்னர் நான் அங்கு சென்றபோது எனது கைகளை இறுகப்பற்றிக்கொண்டு பர்த்துக்கொண்டே இருந்தார் எதுவும் பேசவில்லை. கைப்பிடியில் தனது  பிரியாவிடையைத் தெரிவித்திருந்தார் என்பதை இப்பொழுது உணர்கின்றேன். 

‘ஒரு கதையும் சொல்லாமல் அமைதியாக அடங்கிவிட்டார் என்ற ஆதங்கத்தை ஈனக் குரலில் முனகிக் கண்ணீர் வடித்தார். அவர் படுத்திருந்த கட்டிலுக்கு பக்கமாக அவரது கட்டில் அதில் அமர்ந்திருந்தார். அவருக்காக இரங்கினேன். அருகில் சென்று இருந்து துயர்தேய்ந்த துணைவியாரின் முகத்தைப் பார்க்கமுடியாமல் திணறிக்கொண்டு துன்பத்தைப் பகிர்ந்துகொண்டேன்.  அவர் இன்னும் போராடிக் கொண்டிருக்காமல் சென்றதும் நல்லதுதான் என்று ஆறுதலடைவதற்கு மனதில் நான் சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட  விடயங்களை எண்ணி மனநிறைவு எய்தக்கூடியதாக இருந்தது. 

மனிதருக்கு எப்படி எல்லாம் மரணம் வருகின்றது என்பதை எனது தந்தையாரின் இறுதிக்காலத்தை மனதில் மீட்டு எடைபோட்டுப்பார்க்க வைத்தது. எப்படியெல்லாம் வலம்வந்தவர், மேடைகளை அலங்கரித்தவர் இப்படியாக அடங்கிவிட்டாரே என்று எனது மனம் துயரில் ஆழ்ந்தது. சில நேரங்களில் அவருக்கு ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காது. எழுந்து நடக்கமுயற்சிப்பார் ஆனால் அவரது கால்கள் இடங்கொடுக்கவில்லை. சுவரையும் மேசையையும் துணைகொண்டு அடிக்குமேல் அடி எடுத்துவைக்கும் நிலைமைப் பார்த்து இரக்கப்பட்டேன். சுவரை விட்டுட்டுத் துணிந்து நடவுங்கோ என்றேன் அதற்கு கீழே விழுந்துவிடுவேன் எனப் பாயமாக இருக்கின்றது என்றார். அமர்ந்திருந்துத மேலையில் வைத்திருந்து  பாதாம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு இவை தனித்தனியாக இருந்தன அவற்றை எடுத்து ஒன்றொன்றாக நீட்டிக் கெண்டு சாப்பிடு தம்பி என்பார். போதும்  என்றாலும் திரும்பத்திரும்ப எடுத்து நீட்டுவார். கொடுத்துப் புரந்தது கர்ணனின் கைகள்  என்பதுதான் நினைவில் வந்தன. மனம் இரங்கியழுதது. எப்படிச் சொல்லுவேன். அந்தப் பெரிய மனிதருக்கு நானா ஆறுதல் வார்த்தைகள் புத்திமதிகள் சொல்வது என மனவேதனை அடைந்தேன்.

ரொறன்ரோவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும் சென்று தனது சிம்மக்குரலால் மேடைகளை அலங்கரித்த ஒரு முத்தமிழ் வித்தகர். 80க்கு மேற்பட்ட நூல்களை ஆக்கித்தந்தவர். சைவமும் தமிழும் அவரது இரு கண்கள். சைவத்தையும் தமிழையும் வளர்க்க அவர் செய்த  முயற்சிகள் எண்ணிலடக்கமுடியாதவை. 

தனக்கென ஒரு தனிவழியைத் தேடிக்கொண்டு பண்பட்ட மனிதராக அனைவரோடும் காய்தல் உவத்தல் இன்றி ஒரே பாங்கில் பழகிவந்தவர். அவருக்கு  யாரும் எதிரிகள் இல்லை என்று கூறும் அளவிற்கு அவர் எல்லோருடனும் அன்பாகப் பழகிவந்தவர். தன்னை நாடி வருவோரை அணைத்துக்கொண்டு அவர்களது விருப்புக்களை நிறைவேற்றித்தந்தவர். 

கற்றவர்களோடு மிக மகிழ்ச்சியாக உறவாடி மகிழ்ந்தவர். அவர் இருக்கம் இடம் மிகக் கலகலப்பாக இருக்கும். அதிபர் கனகசபாபதி, பேராசிரியர் சுப்பராயன் பசுபதி, பேராசிரியர் கண்ணப்பன், பேராசிரயர் கணேசலிங்கம், வணக்கத்திற்குரிய சாந்தலிங்கம் அடிகளார், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், துணைவியார் கலாநிதி கௌசல்யா, கலாநிதி பார்வதி கந்தசாமி தம்பதியினர் போன்றோர் அவரது கற்றறிந்த நண்பர்களாக பழகிவந்தவர்கள். இவர்களுக்கு மேலாக விளம்பரம் பத்திரிகை உரிமையாளர் ராஜா மகேந்திரன், துணைவியார் பாமா மகேந்திரன், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் துணைவியார் பாத்மலோஜினி, தாய்வீடு பத்திரிகை ஆசிரியர் திலீப் குமார், கலாநிதி பாலசிவகடாட்சம் தம்பதியினர், வைத்தியக் கலாநிதி இ.லம்போதரன் தம்பதியினர் கவிஞர் புகாரி தம்பதியினர், ஜேர்மனியில் இருந்த வெளிவரும் வெற்றிமணி பத்திரிகையை நடத்தும் அதன் ஆசிரியர் மு.சிவகுமாரன்   போன்ற எழுத்தாளர்கள் மீது  பற்றும் பாசமும் வைத்திருந்தவர் கவிஞர். 

கவிநாயகர்மீது மிகுந்தபற்றுக்கொண்டு  அவரோடு நட்புப்பூண்டு ஒழுகியவர்களில் ஒட்டாவாவில் வாழ்ந்துவரும் பொறியியலாளர் புனிதவேல் அவர்களும் குறிப்பிடத்தக்கவர். ரொறன்ரோ வரும்போது கவிஞரைக் காணாது செல்வதே இல்லை. அங்கிருந்தாலும் அவரது உடல்நலம் பற்றி அடிக்கடி விசாரித்துக்கொண்டும் இருப்பார். ரொறன்ரோவில் இருந்த காலத்தில் கவிஞர் வீட்டிற்கு அண்மித்தாக இருந்த ‘ரிம்கோட்டினில்’ சந்தித்து உரையாடுவதில் அவரும் முனைவர் பாலசிவகடாட்சமும் பேரின்பம் காண்பது வழக்கம். சிற்சில வேளைகளில் நானும் அவர்களோடு கலந்துகொண்டு மகிழ்ந்து உரையாடியுள்ளேன். சிவகடாட்சம் அடுத்தவாரம் வருகின்றேன் எனது காரில் உங்களை ஏற்றிக்கொண்டு நீங்கள் வேலை செய்த அப்பகனடா (Upper Canada College) பாடசாலைப் பக்கம் ஒருக்கால் போய்ப்பார்த்து பழசுகளைப் பார்த்து வருவோம் என்று தொலைபேசியில் அழைத்தவர் அந்த விருப்பு நிறைவேறாமலே நிராசையாகிப் போனதே எனக்கூறி தனது மனவேதனையைக் கொட்டித்தீர்த்தார்.  

கலாநிதி பாலசிவகடாட்சம் எழுதிய சரசோதிமாலை நூலின் ஆக்கத்திற்கு அவரது கருத்தோட்டம் மிகவும்பயன்பட்டது என்பதனை அடிக்கடி குறிப்பிடுவார். சரசோதி மாலை நூலின் பாடல்களின் எனக்குத் தெளிவில்லாத பகுதிகளை அவருடன் உரையாடிப் பெற்றுக்கொண்டமையையும் இன்னும் தனக்குக்கிடைத்த பழைய ஏடுகளை வாசித்து அதன் பெருளை விளக்கிக்கூறக் கூடியவர் கவிஞரைத்தவிர வேறுயாரும் கனடாவில் இருப்பதாகத் தெரியவில்லை என தனது ஆதங்கத்தைத் தெரிவித்தக்கொண்டார்.  கவிநாயகர் சுகவீனமுற்று இருந்த போதிலும் அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாரம்தோறும்உரையாடுபவர்களில் அவரும் முக்கியமானர். அவரது உடல்நலம் பற்றி மிகுந்த அக்கறையோடு விசாரிப்பார். வெளியாட்கள் போய் அவருக்கு ஏதாவது வேறு தொற்றுநோய்களைத் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கவிஞரின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை காட்டிவந்தவர். அவரின் இழப்பால் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்.  

உதயன் பத்திரியை லோகேந்திரலிங்கமும் துணைவி பத்தலோஜனியும்அதிபர் மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர். தனது ஒவ்வொரு விழாவற்கும் அவரை மேடையில் ஏறவைத்து பெருமைப்படுவதோடு அவரையும் பெருமைப்படுத்துபவர். கவிப்பேரரசு வைரமுத்து, ஆச்சி மனோரம்மா போன்றோர் மட்டமல்ல இலக்கியவாதிகளையும்  அழைத்தால் அவர்களைப் பாராட்டு விருது வழங்குபவர் கவிநாயகராகவே இருப்பார். 

கனடாவில் உள்ள எழுத்தர்களில் கவிஞர் மீது பற்றுக்கொண்டவர்கள் பலர். வீணைமைந்தன் சண்முகராஜா, அகில் சாம்பசிவம், கவிஞர் இரா.சம்பந்தன், பொதிகை எஸ். ஜெகதீசன், குரும்பசிட்டி ஜெகதீசன், கலகலப்புச் தீசன், கலைஞர் திவ்வியராஜன்,  ஆவணக் காப்பகம் நகுலசிகாமணி,  தம்பதியினர் போன்றோர் கவிஞரின் அன்பையும் மதிப்பையும் ஆதரவையும் பெற்றிருந்தனர். 

கவிஞர்மீது மிகுந்த மதிப்பும் அன்பும் வைத்திருந்து இணைந்து செயற்பட்டவர்கள் அதிபர் கனகசபாபதி மற்றும் பண்டிதர் அலெக்சாந்தர், அன்புநெறி ச.விசுவலிங்கம் ஆகியோர் கவிநாயகருக்கு முன்னரே இயற்கையெய்ததியவர்கள். அவர்களின்  பிரிவுத்துயர் அவரைக் கௌவிக்கொண்டு விடுபடமுடியாமல் தவிக்கவும் வைத்தது என்பதும் நாமறிந்ததே. 

கவிஞரன் சுகதுக்கங்களை அடிக்கடி கேட்டும் நேரில் சென்றும் அறிந்துகொள்ளுபவர் கதிர் துரைசிங்கம். 90வது பிறந்ததினத்திற்குக்  கேக்வெட்டி மகிழ்ந்தவர். அவரோடு மனுவல் ஜேசுதாசனும் கவிஞர்பற்றி விசாரித்துக்கொள்வார். 

கவிதையை கவிநாகரிடம் கற்று மரபுக்கவி பாடும் வல்லவர்களில் கவிநாயகரின் வாரிசாக அவர் கவிதை கற்பிக்கும் பணியைத் தொடர்ந்து செயற்படுத்திவரும் மாவிலி மைந்தன் சண்முகராசா மற்றும் இன்று கனடா எழத்தாளர் இணையத்தின் தலைவராக உள்ள அகணி சுரேஸ, கவிஞர்கழகத் தலைவராக இருக்கும் க.குமரகுரு மற்றும் அவர் ஒத்த கவிதைக் குழுவினரும் அவரது பேரன்புக்குப் பாத்திரமானவர்கள் மட்டுமல்ல கவிஞர்மீது அளவிலா மதிப்பையும் பற்றையும் கொண்டவர்கள் என்பதும் நாடறிந்த விடயம்.  

கலாநிதி பார்வதி கந்தசாமி கவிநாயகரைத் தனது தந்தையாகவே மதித்தொழுகியவர். அவரோடு இணைந்து நாடங்களை மேடையேற்றி நடித்ததோடு அவருக்குத விருப்பமான சில உணவு வகைகளையும் செய்து கொடுத்துவந்தவர். அப்பம் கவிஞருக்கு மிக விருப்பமானது என்பதை உணர்ந்த அடிக்கடி அப்பத்தோடு அங்கு செல்வதையம் வழக்கமாகக் கொண்டிருந்தார். 

உவப்பத்தலை கூடி உள்ளப் பிரிதல் 
அனைத்தே புலவர் தொழில். 

என்னும் குறட்பாவின் வழியது அவரது வாழ்வியலும் கற்றோருடன் கூடி மகிழும் பாங்கும். பல்வேறு காஷ்யங்கள், துணுக்குக்களை அவரது வாயிலிருந்து கேட்க முடிந்தது. இயல், இசை, நாட மேதையாக வலம் வந்தவர். கூத்தர்களுக்குக் கூத்தர், நாடகர்களுக்கு நடிகர், பாடகர்களுக்குப் பாடகர், உரைஞர்களுக்கு உரை வல்லாளர் எனப் பல்வேறு முகங்களையும் திறன்களையும் அகத்திருத்தி அவற்றை சமூகத்திற்குப் பயனுள்ளவாறு வெளியேற்றியும் வந்தவர்.

 கவிதை புனைவதில் அவர் வல்லவர் ‘ம்’ என்றால் முன்னூறும், ‘அம்’ என்றால் அறுநூறும் எழுதும் ஆற்றல் படைத்தவர். அலயங்கள் பற்றியும் தனிமனித குணங்கள் பெருமைகள் பற்றியும் கவிதைகளை  யாத்துத்தள்ளியவர். அவரது சில நூல்களுக்கு ஆய்வுகளும், கருத்துக் கண்ணோட்டமும் மற்றும் அணிந்துரையும் எழுதியுள்ளமை எனக்குப் பெருமைசேர்ப்பதாக உள்ளது.

தேவார திருவாசக பண்களைப் பாடவேண்டும் என அதற்காக அடியவர்களையும் பக்தர்களையும் திரட்டிச் செயற்பட்டவர். மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர் குருபூசைகள் மட்டுமல்ல நாவலர் பெருமானுக்கும் குருபூசை எடுத்து பெருமைப் படுத்தி மக்கள் மயப்படுத்தியவர். ஆண்டுதோறம் தேவார பண்ணிசை, பேச்சுப் போட்டிகளை இளம் சிறார்களிடையே நடத்தி பரிசில்கள், சான்றிதழ்கள் கொடுத்து வந்தவர். அவர் எப்போது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கிவந்துவர்களுள் பல்மருத்துவர் சண்முகவடிவேல் அவர்கள் முதன்மையானவர் எனலாம். பூதவுடலைப் பார்க்கவந்தவர்  மிக நீண்டநேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்து தனது மனக்கவலையை முகத்திலே தோயவிட்டிருந்தார். வருடா வருடம் இடம்பெறும் முற்றோதல் விழாவில் அவரது உரையை கேட்கவைப்பார் கவிஞர் என்றால் அவரது சமய அறிவையும் உலகளவல் சைவமகாநாடுகளில் கலந்துகொள்பவர்களில் ஒருவராகவும் உள்ளார்.  

இவரைப்போலவே கவிஞர்மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் சின்னையா சிவநேசன் அவரகள். நீண்டநேரம் இருந்த அவர் இறுதியில் எழுந்துசெல்லும் போது இதுதான் வழ்க்கை என்று சலித்துக்கொண்டே சென்றார். 

ஊர்சுற்றித் திரியும் உல்லாசப் பறவையாக தனது துணையாளோடு உலகமெலாம் சுற்றிச் சுற்றிவந்தவர். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை அவரது செயல்களிலிருந்தும் எச்சங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடிகின்றது. மனிதத்தைப் போற்றி  வந்த  அவரது வாழ்க்கையை ஒரு பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துணையும் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதநேரப் பாடங்கள். வாழ்வியல் அனுபவக் கூறுகளை  பார்துப் அவரது வாழ்வியலைத் தொடர்வோம். 

சைவைத்தையும் தமிழையும் போற்றிப்பின்பற்றுவதோடு இளைஞர்களிடமும் முதியவர்களிடமும் சமயஅறிவை ஊட்டும் நற்பணியைத் தனது மருத்துவத் தொழிலுக்குப் பிறிதாகச் செயற்படுத்தி வருபவர் வைத்தியக் கலாநிதி இராமநாதன் இலம்போதரன். அவர் மீது மிகுந்த பற்றும் மதிப்பும் வைத்திருந்தவர் கவிநாயகர். கவிநாயர்  அழைத்துப் பேசவைக்கும் முக்கியமான ஒருவர். சமயத்தையம் தமிழையம் மிக நன்றாக மற்றவர்கள் புரிந்துகொள்ளத்தக்கதாக இலகு தமிழில் பேசவல்லவர். அவரால் நடத்தப்படும் சற்சங்க நிகழ்வுகளிலும் கவிநாயகர் கலந்துகொள்ளுவார். 

பலதடவைகள் காசிக்குச் சென்று வந்தமைப்றறி எடுத்துக் கூறி சிரித்திருக்கின்றார். போனதுதான் போனேன் ஒரு மோட்ச அர்ச்சனை செய்யலாம் என்று போய் இருந்தால் அவர்கள் சாதாரண மோட்சமா அதிமோட்சமா என்றார்கள் நான் இதுவரை இப்படி  வெவ்வேறு மோட்சம் இருப்தாக அறிந்திருக்வில்லை எதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அதிமோட்சத்திற்கு இரட்டிப்பு செலவாகும் என்றார்கள் என்று சொல்லிச் சிரித்தார். இவ்விதமான தான் பெற்ற அனபவங்களையும் பல தடவைகள் சொல்லி  நகைத்திருக்கின்றார். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவது மட்டுமல்ல பண்பார்ந்த வார்த்தைகளையும் அவர் உதிர்ப்பார். தம்பி, பிள்ளை, என்னும் வார்த்தைகள் அவரை ஆட்கொள்ளவைத்துவிடும். அன்போடும் பண்போடும்  பழகிய நல்லதோர் அன்மா இன்று இப்புவியில் இல்லை.