LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

பசில் ராஜபக்ச ஒரு சிறந்த டீலர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் ஜனாதிபதித் தேர்தலுக்கான டீல்கள் ஆரம்பமாகும் என்பதும் எல்லோரும் எதிர்பார்த்ததே. அவர் வந்ததும் ஜனாதிபதியுடன் உரையாடினார். பேச்சுவார்த்தையின் முடிவுகள் வெளியில் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்கலாம் என்ற ஒரு ஆலோசனையை பசில் வெளிப்படுத்தினார். பின்னர் மஹிந்த ராஜபக்சவும் அதை ஆதரித்தார்.

அதாவது ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலை முதலில் வைக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் ஒரு ஜனாதிபதி தேர்தலின் பின் பொதுத் தேர்தல் வைக்கப்படும் போது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டானது, பொதுத் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக கொண்டிருக்கும். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றி வாக்காளர்களை பொறுத்தவரை ஒரு முன் முடிவாக அல்லது முற்கற்பிதமாக மாறும். இதனால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பு அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வாக்காளர்களுக்கு முற்கற்பிதமாக அல்லது முன் முடிவுகளாக அமையாத விதத்தில் முதலில் பொதுத் தேர்தலை வைக்கலாம் என்ற ஆலோசனையை ராஜபக்சக்கள் இப்பொழுது முன்வைக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய காலத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தல்கள்தான் நடந்தன என்பது வேறு கதை.

அவர்கள் ஏன் முதலில் பொதுத்தேர்தலில் வைக்க வேண்டும் என்பதற்கு கூறும் காரணம் புத்திசாலித்தனமாக தெரியலாம். ஆனால் அவர்கள் உண்மையான காரணத்தை மறைப்பதற்குத்தான் அவ்வாறு புத்திசாலித்தனமான ஒரு காரணத்தை கூறுகிறார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

ஒரு பொதுத் தேர்தலை வைத்தால் அதில் தாமரை மொட்டுக் கட்சிக்கு அதாவது ராஜபக்சங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனால் நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவின் யுஎன்பியை விடவும் கூடுதலான வாக்குகள் தமக்குக் கிடைக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தங்களுக்கு பேர பலம் அதிகமாக இருக்கும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது ராஜபக்சக்கள் தங்களுடைய பேர பலத்தை உயர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தல் முதலில் நடந்தால்,ரணில் விக்கிரமசிங்க அதில் வெற்றி பெறுவாராக இருந்தால், அது அவருடைய பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படும். அது அவருடைய பேர பலத்தை அதிகப்படுத்தும். அந்நிலையில் பொது தேர்தலை வைக்கும் பொழுது தாமரை மொட்டுக் கட்சி அதாவது ராஜபக்சக்கள் ரணில் விக்கிரமசிங்கவோடு பேரம் பேசுவதில் வரையறைகள் தோன்றலாம். எனவே பொதுத் தேர்தலை முதலில் வைத்து அதில் தங்களுடைய பேர பலத்தை நிரூபிப்பதற்கு ராஜபக்சக்கள் விரும்பக்கூடும்.

அது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியும். அவரைப் பொறுத்தவரை இது கடைசி ஓவர். அவருக்கு வயதாகிவிட்டது. தன்னுடைய கடைசி ஓவரிலாவது தன் சொந்தப் பலத்தோடு அல்லது அதிகரித்த பேர பலத்தோடு ஆட்சிக்கு வர அவர் விரும்பக் கூடும். எனவே அவர் ராஜபக்சக்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன.

பசில் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது  பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்பது. மற்றது தமது சகோதரர் கோட்டாபயவின் புத்தகத்தை தான் இதுவரை வாசிக்கவில்லை என்றது. கோட்டாபயவின் எல்லாக் கருத்துகளோடும் ஏனைய ராஜபக்சக்கள் முழுமையாக உடன்படவில்லை என்பது.

பசில் புத்தகத்தை வாசித்தாரோ வாசிக்கவில்லையோ, அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட விடயங்களில் தமக்கு ஆர்வம் இல்லை என்பதனை அவர் மறைமுகமாகக் கூறுகிறார்.தமது சகோதரர் கோட்டாபய ராஜபக்சவின் தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கத் தயாரில்லை என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றார். சகோதரர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டை வெளிப்படையாகப் பேச வேண்டிய தேவை என்ன? அதற்கு ஒரு அரசியல் பெறுமதி இருக்கும் காரணத்தால்தான் அவர் அவ்வாறு கூறுகிறார். கோட்டாபயவின் ஆட்சிக் கொள்கையை எனைய சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை அவர் மறைமுகமாகக் கூறுகிறார்.

இவ்வாறு நாடு திரும்பிய கையோடு பஸில் தெரிவித்த கருத்துக்களின் ஊடாக அவர்கள்,அதாவது ராஜபக்சக்கள் மீண்டும் அரசியல் பேர விளையாட்டில் இறங்கப் போகிறார்கள் என்று தெரிகிறது.

அதாவது, தென்னிலங்கையில் மும்முனைப் போட்டி தீவிரமடையும் என்று பொருள். இது தமிழ் மக்களுக்கு ஒரு விதத்தில் சாதகமானது. ஏனெனில் சிங்கள வாக்குகள் மூன்றாகப் பிரியும் பொழுது எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் திட்டவட்டமாக 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவது சவால்கள் மிகுந்ததாக மாறலாம்.அப்பொழுது தமிழ் வாக்குகள் தீர்மானகரமான வாக்குகளாக மாற முடியும்.அதாவது தமிழ் மக்களின் பேர பலம் அதிகரிக்கும்.

அப்படி ஒரு எதிர்பார்ப்போடு தான் .பி.ஆர்.எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவை கடந்த சில மாதங்களாக அழுத்தமாக வலியுறுத்தி வருகிறார்.

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைத்தது தமிழ் மக்கள் பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவாகும். இம்முறை அதனை முதலில் கதைத்தது சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின் அவர் அங்கம் வகிக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அதனை ஒரு தீர்மானமாக வெளிப்படுத்தியது. ஆனால் குத்து விளக்கு கூட்டணிக்குள் உள்ள பெரும்பாலான கட்சிகள் அந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சி தங்களோடு இணையாவிட்டால் அது ஒரு பிரயோசனமான நகர்வாக அமையாது என்று கருதுவதாகத் தெரிகிறது.தமிழரசுக் கட்சி அகோரிக்கையை ஆதரிக்காவிட்டால் பொது வேட்பாளர் என்று தெரிவு வெற்றி பெறாது என்றும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.

இது ஒரு தன்னம்பிக்கை குறைவான விடயம். தங்கள் சொந்தக் கட்சியில், தங்கள் சொந்த உழைப்பில் அவர்களுக்கு நம்பிக்கை குறைவு என்று பொருள். தமிழரசுக் கட்சியும் இணைந்தால்தான் வெற்றி பெறலாம் என்று நம்புவது ஒருவித தாழ்வுச் சிக்கல்தான். தாங்கள் முன்வைக்கும் ஒரு கோரிக்கைக்காக உழைத்து, அதற்காக அர்ப்பணிப்புகளைச் செய்து, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் குத்துவிளக்கு கூட்டணிக்குள் எத்தனை கட்சிகளிடம் உண்டு?

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு கருத்தாக உருவாக்கும் நோக்கத்தோடு, டான் டிவி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிவில் அமைப்பு,ஒரு கருத்தரங்கை அண்மையில் ஒழுங்குபடுத்தியது. “மக்கள் மனுஎன்று பெயரிடப்பட்ட அக்கருத்தரங்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய எல்லா கட்சிகளும் கலந்து கொண்டன. சுமந்திரன் அணி பங்கு பற்றவில்லை. சிறீதரன் பங்குபற்றினார். அதில் பேசிய பெரும்பாலான கட்சித் தலைவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்து கூறினார்கள்.

அதன்பின் அந்த சிவில் அமைப்பு தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டான் டிவியின் தமிழ்ப் பொது வேட்பாளர் எந்த நோக்கத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு முதலாவதாக ஜனாதிபதி தேர்தலை ஒரு பொது வாக்கெடுப்பாக மாற்றும் நோக்கிலானது. அதன் மூலம் தமிழ் மக்களின் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தமிழ் மக்களின் அகப்பிந்திய ஆணையப் பெறுவது. அதன் பின்னர் தான் சிங்கள வேட்பாளர்களோடு பேரம் பேசுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது.

எனவே தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவு ஆகப்பிந்திய ஒரு தமிழ் ஆணையைப் பெறுவதற்கான உள்நோக்கமுடையது. அதில் தமிழ் மக்கள் முன் வைக்கப் போகும் கோரிக்கைகள் உச்சமானவைகளாக இருக்க வேண்டும். நீதிக்கான கோரிக்கையும் தமிழ் மக்களின் பொது விருப்பினை வெளிப்படுத்தும் பொது வாக்கெடுப்புக்கான கோரிக்கையும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.தமிழ் பொது வேட்பாளர் தமிழ் கோரிக்கைகளின் குறியீடாக நிற்பார். தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிற்பார். அவர் தமிழ் மக்களின் அகப்பிந்திய மக்கள் ஆணையை உலகிற்கு வெளிப்படுத்துவார்.

இம்முயற்சியில் தோல்வியுற்றால் அது தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்திவிடும் என்று ஒரு பகுதி விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். குத்துவிளக்குக் கூட்டணிக்குள்ளும் அந்த அச்சம் உண்டு.அதனால் தான் தமிழரசுக் கட்சி அதில் இணைய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழரசுக் கட்சியோ அதன் உள் வீட்டுப் பிரச்சினைகளால் நீதிமன்றத்தில் போய் நிற்கின்றது. எனவே தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலைக் குறித்து ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில், குத்துவிளக்குக் கூட்டணியும் டான் டிவியின் சிவில் சமூகமும் இணைந்து ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நோக்கி முன்னெடுக்கும் கருத்துருவாக்கம் தமிழ் மக்களின் அகப்பிந்திய ஆணையை வெளிக்கொண்டுவரும் வெற்றிகரமான ஒரு செயற்பாடாக அமையுமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்